அரிசியை அறிவோம்

அரிசியை அறிவோம்
Updated on
2 min read

சோழநாடு சோறுடைத்து. அதனால்தான் விருந்தினர் புறத்து இருக்க சாகாவரம் தரும் அமிழ்தமே என்றாலும் தனித்து உண்ணாத பண்புடையவர்களாக இருந்தோம்.

“வந்தவர்களுக்கு இலையும், வராதவர்களுக்கு உலையும்" என வாழ்ந்து கொண்டிருந்தோம். “கல்யாண சமையல் சாதம்" என ரசித்து சாப்பிட்டோம்.

“அரிசி" - அரிசியையும், சிவனையும் நினைவுபடுத்தும் பாரம்பரிய உணவு. அரிசி எங்கிருந்து கிடைக் கிறது தெரியுமா? கடைகளிலும், மால்களிலும் மட்டுமே அரிசியை வாங்கிப் பார்த்திருக்கும் தலைமுறை கள் அது எப்படிக் கிடைக்கிறது? என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஆயிரம் நெல் வகைகள்

வயல்களில் விளைவிக்கப்படும் நெல் மணிகளில் இருந்துதான் அரிசி கிடைக்கின்றது. நம் நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்திருக்கின்றன. இன்று அவை எங்கே போயின? ஏன் வழக்கொழிந்து போயின? வருடம் முதல்நாள் தொடங்கி கடைசி வரை திட்டமிட்டு விவசாயம் செய்தவர்கள் நாம். சித்திரை திங்கள் முதல் நாளில் "நல் ஏர்" கட்டும் வழக்கம் இருந்தது.

"கலப்பை" எனும் வயலை உழும் கருவியை கழுவி மஞ்சள், குங்கும பொட்டு வைத்து பூச்சூட்டி, அதில் குளிப்பாட்டி பூ பொட்டு வைத்த காளை மாடுகளை புது பூட்டான் கயிறுகளால் பூட்டுவோம். சாணகுப்பைகளை வயலில் போட்டு ஈசானிய மூலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்து வழிபாடு நடத்திவயலை உழுவதற்கு தொடங்குவார் கள்.

“கார்" என்ற குறுகிய கால நெற்பயிரையும், "சம்பா" என்ற நீண்டகால நெற்பயிரையும் பயிரிட்டார்கள். வைகாசி தொடங்கி ஆவணியில் அறுவடை செய்யும் பயிர் கார்கால நெல் எனப்பட்டது. “ஆடிப்பட்டம் தேடி விதை" என ஆடியில் விதையிட்டு ஆவணி நடவு நட்டு தை மாதம் அறுவடை செய்யப்பட்ட பயிர் சம்பா நெல் எனப்பட்டது.

தை மாத அறுவடையை வைத்துஉழவர் திருநாளாம் பொங்கல் திருநாள் சிறப்பாக 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. நல்ல நாள் பார்த்து அறுத்துவரும் நெற்கதிர்களை (ஒரு நெல் மணியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட நெல் மணிகள் கிடைக்கும்) புத்தரிசி பொங்கலிட்டு இறைவனை வணங்கி சிறிய கொத் தாய் அழகுற கட்டி வாசலில் நிலைப்படியில் (நுழைவுவாயில்) கட்டுவார்கள். குருவிகள் வந்து அவற்றை கொத்தித் தின்னும். அந்த அழகே தனி..

யானை கட்டி போரடித்தல்

அதன்பின்னர் ஆட்களை வைத்துஅறுவடை செய்த பயிரை கட்டுக்கட்டாக கொண்டு வந்து களத்தில் அடுக்கிவைப்பார்கள். பின் நெற்கதிர்களை சிறிது சிறிதாகப் பிரித்து கயிற்றில் கட்டி கருங்கற்களில் வரிசையாக நின்று கொண்டு சுழற்றி, சுழற்றி அடிப்பார்கள். உதிர்ந்த நெல்மணிகளை கோணிப்பையில் கட்டிவைப்பார்கள். கதிரடித்து முடிந்த பிறகு நெற்தாள்களை களம் முழுவதும் பரப்பி மாடுகளை கட்டி பிணையடிப்பார்கள். இதற்கு போரடித்தல் என்று பெயர். மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த காலமும் உண்டு.

நெல் மணிகள் பிரிந்த பிறகு இருக்கும் தாள்களுக்கு வைக்கோல் என்று பெயர். இது மாடுகளுக்கு தீவனமாகும். வைக்கோல் வீணாகாமல் வருடம் முழுவதும் மாடுகளுக்கு வழங்க வைக்கோல் போர் அமைப் பார்கள். அறுவடை செய்த நெல்லைகாய வைத்து குதிர்களில் சேகரிப்பார்கள்.

தேவை போக மற்றவற்றைவிற்பனை செய்வார்கள். பண்டமாற்று முறையில் நெல்லைக் கொடுத்து மற்ற பொருட்களை வாங்குவார்கள். கோயிலுக்கு படியளந்த பிறகு நெல்லை கொடுத்து முதலில் உப்புவாங்குவார்கள். அரிசி தேவைப்படும்போது குதிரில் இருந்து நெல்லை எடுத்து பச்சரிசியாகவோ, கொப்பரையில் நீரிட்டுவேகவைத்து புழுங்கல் அரிசியாகவோ அரவைஆலையில் அரைப்பார்கள்.

நெல்லில் இருந்து கிடைக்கும் உமி தவிடாகும். தவிடு மாடுகளுக்கு சிறந்த உணவு. இப்போது தவிட்டில் இருந்துதான் எண்ணெய் எடுக்கப்படுகிறது. குதிரைவாலி, கருப்பு கவுனி, பூங்கார், சீரக சம்பா, கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், குடவாழை என நெல் வகைகள் இருக்கின்றன. பல நல்ல பலன்களைத் தரும் அரிசி சக்தி வழங்கும் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த சிறந்த உணவாகும். அதிரசம், ஆப்பம், கொழுக்கட்டை, முறுக்கு, சூட்டை, புட்டு என சுவைமிகுந்த பலகாரங்கள் அரிசியில் இருந்து செய்யப்படுகின்றன.

இயந்திரத்தால் விவசாயம் செய் வது இப்போது எளிதாகிவிட்டது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டோம். தொழிற்புரட்சி, பசுமைப் புரட்சிக்கு வித்திட்டது.

உழவு, நடவு முதல் அறுவடை வரை அத்தனைக்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. மாடர்ன் ரைஸ் மில் எனப்படும் நவீன அரிசி ஆலைகள் பெருகிவிட்டன. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், புதுவயல் பகுதிகளில் ஏராளமான நவீன அரிசி ஆலைகள் இயங்குகின்றன. மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார்குறியீடு கிடைத்திருக்கும் சூழ்நிலையில் அரிசியைப் பற்றி அறிந்து கொள்வது சாலச் சிறந்ததாகும்.

கட்டுரையாளர்

எழுத்தாளர், பள்ளி முதல்வர்,

aruna.hari@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in