மாணவர்களிடம் தற்கொலை எண்ணத்தை தடுக்க பெற்றோரும், ஆசிரியர்களும் நண்பர்களாக வழிகாட்ட வேண்டியது அவசியம்

மாணவர்களிடம் தற்கொலை எண்ணத்தை தடுக்க பெற்றோரும், ஆசிரியர்களும் நண்பர்களாக வழிகாட்ட வேண்டியது அவசியம்
Updated on
2 min read

சென்னை: மாணவர்களை தற்கொலை எண்ணத் தில் இருந்து விடுவிக்க அவர்களது கல்வி மட்டுமல்லாம் உடல் மற்றும் மன நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பெற்றோரும், ஆசிரியர்களும் எளிதில் அணுகக் கூடிய நல்ல நண்பர்களாக மாற வேண்டியது அவசியம்.

நீட் நுழைவுத் தேர்வு நேற்று வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத காரணத்தால் சென்னை அருகே திருமுல்லைவாயிலில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுபோன்ற சம்பவத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்ற போதிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கத்தான் செய்கின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண்பது எப்படி என்று மதுரை மருத்துவக் கல்லூரி மன நல மருத்துவர் ஜி.அமுதா நம்மிடம் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவற்றில் இருந்து....

மன நல மருத்துவர் அமுதா
மன நல மருத்துவர் அமுதா

கடந்த காலங்களைப் போல பள்ளிகளில் விளையாட்டு வகுப்போ, நல்லொழுக்க வகுப்போ முழுமையாக நடத்தப்படுவதில்லை. குரும்புத்தனம், விளையாட்டுத் தனம் மிகுந்த வளரிளம் பருவத்தில் மாணவ, மாணவியருக்கு மருத்துவம் போன்ற உயர் படிப்புகளுக்காக பலவழிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. எதிர்பார்த்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறாவிட்டால் தற்கொலை முடிவுக்கு எளிதாகப் போய்விடுகின்றனர்.

இதற்கு வீட்டிலும், பள்ளியிலும், சமூக சூழலிலும் மாணவ, மாணவியர் தங்களது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளும் சூழல் இல்லாததே காரணம். முன்பெல்லாம் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததும் அம்மா,அப்பா, தாத்தா, பாட்டி என எல்லோரிடமும் பேசினார்கள். இப்போது அதுபோன்ற சூழல் இல்லை.

பள்ளியில் ஆசிரியர்கள் தங்களதுபாடத்தில் அனைத்து மாணவர்களை யும் தேர்ச்சி அடையச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால், அவர்களும் முன்புபோல மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் அன்பாக, அக்கறையாக பேசுவதில்லை.

நண்பர்களும் ஒருவருக்கொருவர் அதிக மதிப்பெண் பெறுவதிலேயே குறியாக இருக்கின்றனர். விளையாட்டு, பொது விஷயங்கள் தொடர்பான உரையாடல் என எதுவும் கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் தாம் நினைத்தது நடக்கவில்லையென்றால் "இருந்து என்ன பயன்" என்று தற்கொலை முடிவு எடுக்கின்றனர்.

பெற்றோர் குழந்தைகளை நல்ல நண்பர்களாக நடத்த வேண்டும். மிரட்டினால் எதிர்மறையாகத்தான் நடந்து கொள்வார்கள். நண்பராகப்பழகினால்தான் அவர்கள் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வார்கள். அதை ஆரம்பத்திலேயே சரி செய்யவும் முடியும்.

தினமும் 1 மணி அல்லது 2 மணி நேரமாவது குழந்தைகளுக்கு பிடித்த விஷயங்கள், பொது விஷயங்கள் பேசுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். பிடித்ததை விளையாட ஊக்குவிக்க வேண்டும். வாழ்வதற்கு ஏராளமான வழிகள் இருப்பதைச் சொல்லித் தர வேண்டும். மொத்தத்தில் பெற்றோர் நல்ல வழிகாட்டிகளாக இருப்பது அவசியம்.

பள்ளியில் மாணவ, மாணவியரிடம் அன்பாக, அக்கறையாக பேசுவதற்கும், அவர்களது பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கும் மாணவ, மாணவியருக்கு தனித்தனியே அவர்களுக்குப் பிடித்த ஆசிரியரை ஆலோசகராக நியமிக்கலாம். அந்த ஆசிரியர் மாணவர்களுக்கு எதிர்காலத்தை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகளை, ஆற்றலை கற்றுத்தர வேண்டும். படிப்பு, வேலை மட்டும் வாழ்க்கை இல்லை. பரந்துபட்ட உலகில் ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடப்பதை சொல்லி மாணவர்களின் பார்வையை விசாலப்படுத்த வேண்டும்.

வளரிளம் பருவத்தில் நண்பர்கள், தங்களுக்குப் பிடித்தவர்களைப் பார்த்துதான் மாணவ, மாணவியர் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதனால், பெற்றோர், ஆசிரியர் நண்பர்களாக மாற வேண்டியது அவசர அவசியம் என்கிறார் மன நல மருத்துவர் அமுதா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in