

குழந்தைகளே! உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் ஒன்று எறும்புகள். அவை வரிசையாகப் போகும் போது சத்தம் போட்டு மகிழும் நீங்கள், எறும்புகளைப் பற்றி நிறைய தெரிஞ்சக்கணுமா? அப்போ நீங்க வாசிக்க வேண்டிய புத்தகம் இதுதான்.
14 பாகங்களில் எறும்புகளின் வாழ்க்கைக் கதையை மிக சுவாரஸ்யமாகப் பேசுகிறது “என் பெயர் ஙு” புத்தகம். ங, ஙி, ஙு... என தமிழ் எழுத்துகளையே, பெயர்களாக சூட்டியுள்ள எறும்புகள் புத்தகம் முழுவதும் நம்முடன் பயணம் செய்கின்றன.
எறும்புகள் கூட்டத்தில் யார் யார்இருக்கின்றனர், ஒவ்வொருவருடைய வேலை என்ன, எறும்புகள் வரிசையாக செல்லக் காரணமான ஃப்ரமோன் திரவம் என அறிவியல் தகவல்களைக் கதைகளாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.
இப்புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது, எறும்புகள் பற்றி இத்தனை செய்திகள் இருக்கின்றதா என வியப்பு தோன்றும். எறும்புகள் சேர்ந்து கட்டும் கோட்டையில் என்னென்ன நடக்கின்றன எனத் தெரிய வேண்டுமா, பெண் எறும்புகள் தனது இணையை எப்படித் தேர்வுசெய்கின்றன, ஃப்ரமோன் வாசனையைத் தவறவிட்டால் அவற்றுக்கு என்ன நடக்கும், எறும்புகளின் உணவுத் தேடலின் உழைப்பு, உணவுகள் தொடர்பாக எறும்புகள் காட்டும் ஒழுங்கு, எறும்புகளின் ஒற்றுமை, ஙு செய்யும் சாகசம் என நம்மை ஆழமாகக் கவனிக்க வைக்கிறது புத்தகம். ஒருதேளை, தங்கள் எறும்புக் கூட்டத்துக்கு உணவாக மாற்ற எறும்புகள்செய்யும் சாகசங்களைப் படிக்கும்போது அப்படியொரு வியப்பு.
எறும்புகள் படை திரண்டு செய்யும் ஒவ்வொரு வேலையும் ஆச்சரியப்பட வைக்கிறது. எறும்புத் தின்னிவிலங்கிடமிருந்து எறும்பு முட்டைகளைப் பாதுகாக்க படும்பாடு எனபுத்தகம் முழுவதும் நிறைய சுவாரஸ்யங்கள். எறும்புகளின் வாழ்க்கையில் நடக்கும் சின்னச் சின்ன செயல்களையும் மிக நுணுக்கமாகப் பதிவு செய்கிறது புத்தகம்.
மிகச் சமீபத்தில் வெளிவந்த சிறார் இலக்கியம் இது. நூலாசிரியர் வே. சங்கர் அரசுப் பள்ளி ஆசிரியர். சிறுவர்களுக்காக எழுதுவதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள சங்கரின் இந்த சிறு புத்தகம் அழகான முயற்சி. டுட்டு டூ, கானகத்தில் ஒரு கச்சேரி, எட்டாம் வகுப்பு சி பிரிவு, மழலை ஒலி போன்ற இவரது வேறு சில நூல்களும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை.
கட்டுரையாளர்:பள்ளி ஆசிரியர்
| “என் பெயர் ஙு” எழுதியவர்: வே. சங்கர் வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன் விலை ரூ.45 |