Published : 02 Sep 2022 06:10 AM
Last Updated : 02 Sep 2022 06:10 AM

மாநிலக் கல்விக் கொள்கை மூலம் ஆசிரியரால் பாடத்திட்ட வடிவமைப்பாளராக உருவெடுக்க முடியும்

ஜி.ராஜேந்திரன்

பாலக்காடு தமிழ்வழி தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் ஆசிரியர் பயிற்றுநராகவும் கேரளத்தில் 35 ஆண்டுக்காலம் பணிபுரிந்தவர் என்ற அடிப்படையில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

1996-ல்மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டத்தின் மூலம் குழந்தைகளை மையப்படுத்திய புரட்சிகரமான கல்வித்திட்டம் கேரளாவில் உருவாக்கப்பட் டது. அப்போது வகுக்கப்பட்ட புதிய பாடத்திட்டக் குழுவில் தமிழாசிரியர்களின் பிரதிநிதியாகச் செயல்படும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. மாநிலம் முழுவதும் பயணம் சென்று நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தேன்.

நான்கு ஆண்டுகள் கழித்துநடுநிலைப் பள்ளி ஒன்றில் சேர்ந்தேன். தமிழாசிரியராக 6-ம் வகுப்பில் அமர்ந்திருந்த 38 மாணவர்களிடம் பாடப் புத்தகத்தை வாசிக்கச் சொன்னேன். நான்கு பேரால் மட்டுமே எழுத்துக்கூட்டி வாசிக்க முடிந்தது. நான் படுதோல்வி அடைந்ததை அன்று உணர்ந்தேன்.

குழந்தையின் அனுபவத்தோடு தொடர்பில்லாத எதையும் குழந்தை கற்றுக்கொள்ளாது. ஆசிரியரான எனக்குத்தான் எல்லாம் தெரியும்; மாணவர் வெறும் களிமண் என்றஎண்ணமும் தவறு. கற்பித்தல் இலக்கை அடைய வேண்டுமானால் குழந்தையுடன் உரையாட வேண்டும்.

அவர்களைப் புரிந்துகொண்டால் மட்டுமே நாம் நினைப்பதைக் குழந் தைகளிடத்தில் கொண்டு சேர்க்க முடியும். இவை எல்லாவற்றையும்விட, குழந்தைகளிடத்தில் இயல்பாகக் கற்றல் முறை ஒன்றுள்ளது அதை நுட்பமாக ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும். மலையாளத்தில், ‘காதலான மாற்றம்’ என்பார்கள். அதை நோக்கி நகர்ந்தேன். என்னைப் போல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள்.

இந்நிலையில், மாநிலக் கல்விக் கொள்கை வகுப்பதற்காக பொதுமக்களிடம் அரசு கருத்து கேட்டிருக்கும் இவ்வேளையில் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து வந்தவற்றுள் மேலும் தொடர வேண்டியவை எவையெவை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதேபோன்று எதில் உடனடியாக மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பது குறித்து விவாதிக்க வேண்டும். அந்த வகையில் வகுப்பறையில் அடிப்படை மாற்றங்கள் (Paradigm Shift) என்பதே மாநிலக் கல்விக் கொள்கையின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும்.

உண்மையில் மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்களி டம் கல்விக்கொள்கை எப்படிச் சென்று சேர்கிறது? அரசாணையாக, அதிகாரக் குறிப்புகளாக, பயிற்சியா ளர்களின் கட்டளைகளாக வந்து சேர்கிறது. அந்த அரசாணைகள் காரணங்களை விளக்குவதில்லை.

கலந்துரையாடல்களுக்கு வழிவகுப்பதில்லை. முடிவெடுப்பவர் என்றநிலையிலிருந்து நடைமுறைப்படுத்து பவர் என்ற நிலைக்கு ஆசிரியர்கீழிறக்கப்படுகிறார். அதனால்அவற்றை நடைமுறைப்படுத்தி விட்டால், வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்.

மையத்தில் இருந்து உருவாக்கப்படும் பாடத்திட்டத்தை அந்தந்த வகுப்புக் குழந்தைகளின் தரத்துக்கு ஏற்ப, முன்னனுபவங்களுக்கு ஏற்ப அவற்றை மாற்றவோ, புதியன படைக்கவோ தேவையான சுதந்திரமும் திறமையும் ஆசிரியருக்கு இருக்க வேண்டும். இதையே சுருக்கமாக ஆசிரியர் ஒரு பாடத்திட்ட வடிவமைப்பாளர் (Teacher is a curriculum maker) என்கிறோம்.

வடிவமைப்பாளராவது எப்படி?

1. ஆசிரியர்களிடம் பொறுப்பைக் கொடுப்பது.

2. கல்விக் கொள்கையின்படி நிர்ணயிக்கப்பட்ட பாடங்களையும் உருவாக்கிய செயல்படுகளையும் அந்தந்தப் பகுதியின் சிறப்புக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யும் சுதந்திரத்தை ஆசிரியருக்கு அளிப்பது.

3. பலன்களை உடனடியாக எதிர் பாராமல் சற்றே காலஅவகாசம் கொடுப்பது அதைவிட முக்கியம்.

4. அப்படி செய்யும்போது இயல்பாகவே அதை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பு ஆசிரியர்களின் தோள்கள் மீது ஏறிவிடுகிறது.

5. குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்போது வகுப்பறையில் மாற்றங்கள் மலர்வதைக் காணலாம்.

6. ஒரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு, நடைமுறை சிக்கல்களை ஆய்வுக்கு உட்படுத்தும்போது கொண்டு சேர்ப்பவர் என்ற இடத்திலிருந்து உருவாக்குபவர் என்ற இடத்திற்கு ஆசிரியர்கள் நகர்கிறார்.

அந்தந்த வட்டாரத்தின் வளங்களைப் பதிவு செய்வது, வயல்வெளி வகுப்புகள், சிறப்பு விருந்தினர்களின் வகுப்புகள், மாணவர் தம் படைப்புகளை அச்சேற்றுவது, கால, வகுப்பு வேறுபாடின்றி குழந்தைகளுக்கு விருப்பம் இருப்பது வரை தொடர்ந்து கற்பிப்பது.

இத்தகைய தொடர் சோதனை முயற்சிகள் ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள், மாவட்ட கல்வி மையங்கள், ஆகியவற்றை வலிமைப்படுத்துவதற்கான வழிகள்.

குழந்தைகளின்பால் கொண்ட உள்ளார்ந்த அன்பினால் கல்வியைக்கையிலெடுத்துச் செயல்படும் எத்தனையோ நல்லுள்ளங்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு கௌரவச் சான் றிதழ் வழங்கி முக்கிய பாதைக்குக் கொண்டுவருவது. (’இல்லம் தேடி கல்வித் திட்டம்’ அதற்கான கதவுகளை திறந்துவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.)

காட்டாயப்படுத்தி கல்வியில் மாற்றம் கொண்டு வர முடியாது. மன மாற்றத்திற்கான உத்திகளுக்கு இக்கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் கொடுப்போம். ஆசிரிய சமூகத்தை நம்புவோம்.

கல்வி பற்றிப் பொதுமக்களுக்கு இருக்கும் தவறான கருத்தகளை உணர்த்தும் விதம் கட்டுரைகளும், விவாதங்களும், நேர்காணல்களும் சமூக ஊடகங்களில் வெளிவர வேண்டும். பள்ளி வகுப்பறையில் பெற்றோர் வந்தமர்ந்து செயல்பாடுகளைக் கவனிக்க ஆவன செய்யவேண்டும்.

தோட்டப்பயிர் போல் எல்லா இடங்களிலும் ஒரே பயிராக இல்லாமல் அந்தந்த இடத்தின் தட்ப வெட்பத்திற்கேற்ப வளர்ந்து பயன் தரும் பல்வேறு மரங்கள் தழைத்து நிற்கும் இயல்பான இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமாக நம் மாநிலம் மாறட்டும்.

கட்டுரையாளர்:ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர், புதுமையான கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்தி வரும் ‘QRIUS லேர்னிங் இனிஷியேட்டீவ்ஸ்’ அமைப்பின் கல்வி இயக்குநர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x