

காட்டினையும், விலங்குகளையும், அதில் ஒரு நீதியையும் கதைகளின் வழியாக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதாக ‘‘பறக்கும் யானைகள்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது.
இத்தொகுப்பில் உள்ள கதைகள், காடு எப்படி உருவானது, காட்டில் உள்ள விலங்குகளின் உணவுப் பற்றாக்குறை மற்றும் மனிதர்களால் காடுகள் அழிக்கப்படுகின்ற அவலம் குறித்த செய்திகளைக் குழந்தைகளுக்குச் சொல்லி இறுதியில் நீதியைச் சொல்வதாக அமைந்துள்ளன.
அது ஒரு யானைக் காடு. அங்கே நிறைய யானைகள் இருந்தன. அப்போது எல்லாம் யானைகள் ஒல்லியாக இருந்தன. ஒரு நாள் யானைகளுக்கு பறக்கும் சக்தி வந்தது. நடந்து கொண்டிருந்த யானைகள் திடீரென பறப்பதைப் பார்த்து மற்ற காட்டு விலங்குகளுக்கு ஆச்சரியம்.
யானைகளுக்கு எப்படி பறக்கும் சக்தி வந்தது. காட்டில் இருந்த குட்டி யானைக்கு உணவு கிடைக்கவில்லை. ஓரிடத்தில் இருந்த கரும்பை ஆசையாய் சாப்பிட போனபோது ஊர் மக்கள் விரட்டியதில் யானையால் நடக்கவே முடியவில்லை. பாவம் குட்டி யானை பசி தாங்காதே என நினைத்த குருவி யானைக்குப் பறக்கும் மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தது. யானைகள் பறக்க ஆரம்பித்ததில் இருந்து நடந்து செல்வதையே மறந்து போயின. ஒல்லியாக இருந்த யானைகள் குண்டு குண்டாக மாறின.
நிபந்தனை
யானைகள் பறக்க ஆரம்பித்ததும் மற்ற விலங்குகளுக்கும் உணவு கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்ற குருவியின் நிபந்தனையை மீறியது. யானைகள் தாங்கள் ஏன் மற்ற விலங்குகளுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று கேள்வி கேட்டன. ‘‘இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் சொந்தம்.
மற்ற விலங்குகளுக்கு உதவி செய்தால்தான் பறக்கும் சக்தி இருக்கும். தான் மட்டும் நல்லாயிருந்தா போதுமென்று சுயநலமாக நினைத்தால் மந்திரம் மறந்து விடும் எனச் சொல்லியபடி குருவிகள் பறந்து சென்றன.” இறுதியாக யானைகள் என்ன செய்தன என்பது முடிவாக உள்ளது.
யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்கக்கூடாது. ஏன்? எதற்கு? எப்படி? என கேள்வி கேட்க வேண்டும். அதுல உன் அறிவுக்கு எது சரின்னு தோணுதோ அதை தான் செய்ய வேண்டும் என்றும் பகுத்தறிவு சிந்தனை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதை ‘வாய்ப்பூட்டு’.
காடு உருவான கதை
காட்டை உருவாக்கியது யார்? காடு எப்படி உருவானது? எத்தனை ஆண்டுகளில் காடு உருவாகி இருக்கும் என்கிறபல கேள்விகள் குழந்தைகளிடத்தில் உண்டு. அந்தக் கேள்விகளுக்கான பதில் பாட்டியின் பரிசு கதையில் உள்ளது.
‘‘பறக்கும் யானைகள்” என்ற சிறுகதைத் தொகுப்பில் 10 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அனைத்து கதைகளையும் விலங்குகளை மையமாக வைத்து பிரசாந்த் எழுதியுள்ளார். விசித்திரமும் வேடிக்கையும் விநோதமும் நிறைந்த கதைகள். காடு மற்றும் காட்டில் உள்ள விலங்குகள் அவற்றின் வாழ்க்கை முறை மற்றும் வாழ்விடம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு பெரியவர்களும் குழந்தைகளும் சேர்ந்தே வாசிக்கக் கூடியதாக இருப்பது கூடுதல் சிறப்பு.
கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல்நத்தம், திருப்பத்தூா் மாவட்டம்.