

முதல் நாளன்றே நூற்றுக்கணக்கான பெண்கள் இயக்கத்தில் இணைய, முழு முனைப்புடன் போர்த் தந்திரங்களைக் கற்க ஆரம்பித்தார் லக்ஷ்மி என்று கடந்த வாரமே பார்த்தோம்.
சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் 1,500 பெண் வீராங்கனைகள், அவர்களில் 200 செவிலியர்கள் ஒன்றுசேர்ந்து மூன்று மாதங்கள் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டனர். இறுதியில் நிறைவானதொரு படையாக உயர்ந்து நின்ற ஜான்சி ராணி படை, முதன்முதலாக களம் கண்டது பர்மாவில்.
1944-ல் பர்மாவில் ஐஎன்ஏவின் பிரேம் சேகல் தலைமையிலான ஆண்கள் படையும், கேப்டன் லக்ஷ்மி தலைமையிலான பெண்கள் படையும் முனைப்புடன் செயல்பட்டன. அவர்கள் ரங்கூனிலிருந்து இம்பால் செல்லும் வழியெங்கும் நடத்திய கொரில்லாத் தாக்குதல்களில் நிலைகுலைந்தது பிரிட்டிஷ் இராணுவம். என்றாலும் உடனடியாக சுதாரித்துக் கொண்டு் தனது ஆயுதப்படையை பர்மாவில் குவித்த இங்கிலாந்து, அடுத்து பெண்கள் படையை முதலில் குறிவைத்து அவர்களுக்கு உணவு வரும் பாதையை அடைத்தது.
குண்டுகளால் தகர்க்க முடியாத பற்று!
இதனால் பசிக்குக் காட்டில் கிடக்கும் பழங்களை உண்டு வீராங்கனைகள் நோய்வாய்ப்பட ஆரம்பித்தனர். பெண்கள் படை எதிரிகள் வசம் அகப்படக்கூடாது என்று கருதிய நேதாஜி வீராங்கனைகள் அவரவர் நாடுகளுக்குத் திரும்ப லக்ஷ்மிக்கு ஆணை பிறப்பித்தார். அதன்படியே பெண்களை திருப்பி அனுப்பினாலும், ஐஎன்ஏவின் தற்காலிக மருத்துவமனையில் செவிலியருடன் தான் மட்டும் பணிபுரிந்தவாறு போரில் காயமுற்ற ஆண் வீரர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தார் கேப்டன் லக்ஷ்மி.
1945-ல் அந்த மருத்துவமனைக்கு நேதாஜி வருகை தந்தபோது காத்திருந்த பிரிட்டிஷ் ராணுவம் மருத்துவமனையை குண்டு வைத்துத் தகர்த்து பலத்த உயிர்சேதத்தை ஏற்படுத்தியதோடு, தப்பிச் சென்றவர்களை கைது செய்து பர்மாவின் காடுகளுக்குள் தனிச்சிறையில் வைத்தது. கேப்டன் லக்ஷ்மியும் அதில் சிக்கினார்.
ஆனால், இந்தியாவின் தொடர் கோரிக்கைகள் மற்றும் அழுத்தம் காரணமாக, ஒரு வருடம் கழித்து 1946-ல் பிரேம் சேகல், கேப்டன் லக்ஷ்மி உட்பட அனைத்து ஐஎன்ஏ வீரர்களையும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியது பிரிட்டிஷ் அரசு. அவர்கள் விடுதலைக்காக முன்னின்று ஜவகர்லால் நேரு வழக்காடினார். அதைத் தொடர்ந்து வெளியே வந்த பிரேம் சேகலும் கேப்டன் லக்ஷ்மியும் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய இந்திய தேசியப் படை வீரர்களுக்கு உதவியதுடன், 1947 மார்ச் மாதம் இருவரும் மனமுவந்து திருமணமும் புரிந்து கொண்டனர்.
ஆகஸ்ட் மாதம் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் திருப்தி அளிக்காததால் அரசியலில் இருந்து இருவரும் ஒதுங்கினர். "வெள்ளை நிறத்தவரின் ஆட்சி தற்போது கருப்பு நிறத்தவரின் ஆட்சியாக மாறியுள்ளதே தவிர, சுதந்திரத்தின் கனிகள் ஒரு சிலரை மட்டுமே சென்றடைந்துள்ளது" என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்த கேப்டன் லக்ஷ்மி மீண்டும் முழு நேர மருத்துவரானார். பஞ்சாப் அகதிகள் உட்பட அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளித்துவர, கணவர் பிரேம் சேகல் பருத்தி ஆலையில் பணிபுரிந்து வந்தார்.
என்றாலும் தேசத்தின் மீதான அக்கறை சிறிதும் குறையவில்லை லக்ஷ்மிக்கு. இரு பெண் குழந்தைகளுக்குத் தாயான பின்னரும், 1971-ல் வங்காளப் பிரிவின்போது, வங்காள எல்லையில் அயராது உழைத்த கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் நல்வாழ்வு இயக்கத்துடன் இணைந்தும் பணிபுரிந்தார். மருத்துவராகவும் அகதிகளுக்கு உதவினார். நன்றி நிமித்தமாக மார்க்சிய கம்யூனிச கட்சி, டாக்டர் லக்ஷ்மியை தனது உறுப்பினராக இணைத்து, 1981-ல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவராகவும் (AIDWA) நியமித்தது.
ஓயாத உழைப்பு!
பிறகு, 1984-ல் நடந்த போபால் விஷ வாயு விபத்தில் சிக்கிய மக்களுக்கு தனி மருத்துவக் குழுவுடன் உதவினார். அதேபோல இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பின் நிகழ்ந்த சீக்கியர்கள் தாக்குதலிலும் முன்னின்று அமைதி நிலவப் பாடுபட்டார். அதற்காக, 1998-ல் இந்திய அரசின் உயரிய பத்ம விபூஷன் விருது பெற்றார்.
"மூன்று வகை சுதந்திரத்தில் ஒன்றான காலனி ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றுவிட்டோம். ஆனால், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாம் இன்னும் சுதந்திரம் அடையவில்லை" என்று எப்போதும் கூறிவந்த கேப்டன் லக்ஷ்மி அதற்கான எடுத்துக்காட்டாக தானே விளங்கியதோடு தனது குழந்தைகளையும் சமூகத்தில் முன்னிறுத்தி, அரசியலில் ஈடுபடவும் செய்தார்.
இந்நிலையில்தான் 2002 -ல், இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போதும் கேப்டன் லக்ஷ்மி சிறிதும் தளராமல் தனது மருத்துவப் பணிகளையும் அரசியல் பணிகளையும் தொடர்ந்தார்.
இரு பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டவாறே 2012 -ல் கான்பூரில் 97 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மரணத்திற்குப் பின்னும் தனது உடலை மாணவர்கள் பயில கூறாய்விற்காக மருத்துவக் கல்லூரிக்கு தானமளித்துச் சென்றார்.
2020-ல் ‘தி ஃபர்காட்டன் ஆர்மி' என்ற பெயரில் அமேசானில் வெளியிடப்பட்ட வெப்சீரீஸ், கேப்டன் லக்ஷ்மி மற்றும் மற்ற அனைத்து ஐஎன்ஏ வீரர்களுக்கான அஞ்சலியாக அமைந்தது.
(மகிமை தொடரும்)
கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர்,
சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com