கணித பாடத்தை எளிதாக்கியுள்ள எண்ணும் எழுத்தும் திட்டம்: சாதாரண பொருட்கள் கொண்டு அசாதாரண கல்வி கற்கும் குழந்தைகள்

கணித பாடத்தை எளிதாக்கியுள்ள எண்ணும் எழுத்தும் திட்டம்: சாதாரண பொருட்கள் கொண்டு அசாதாரண கல்வி கற்கும் குழந்தைகள்
Updated on
2 min read

ஆந்திராவின் எல்லைப் புறத்தில் இருக்கும் வேப்பனபள்ளி ஒன்றியத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில் விளையாட்டு மூலமாக கணிதத்தின் அடிப்படை கருத்தை இவ்வளவு எளிமையாக கற்றுக் கொடுக்க முடியுமா என்று நான் முதலில் வியந்துதான் போனேன். கணித கருத்துகளை கற்றுக் கொடுப்பதால் நான் கணித ஆசிரியர் என்றோ அல்லது அனைத்து பாடங்களையும் கற்றுக் கொடுக்கும் வித்தகர்களான இடைநிலை ஆசிரியர் என்றோ நீங்கள் தவறாக என்னை கணிக்க வேண்டாம், நான் ஒரு சமூக அறிவியல் ஆசிரியை.

கணிதம் நமக்கு கைகூடாது என்று கலைப் பிரிவு எடுத்து படித்துஆசிரியரான நான் இன்று கணிதத் தின் மிக முக்கியமான அடிப்படை கருத்துகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் மாதிரி வகுப்பறையின் ஆசிரியை என்பதுதான் வியப்பின் உச்சம். கற்றல் கற்பித்தல் உபகரணங்களை தயாரிக்க தேவையான பொருட்களை நகர்புறத்து ஆசிரியர்கள் எளிமையாக பெற்று கற்றல் உபகரணங்களை செய்து விடுவார்கள். அதுவே நீலகிரி அஞ்செட்டி போன்ற மலைப்பிரதேச ஆசிரியர்கள் கற்றல் உபகரணங்கள் செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

கி.அமுதா செல்வி
கி.அமுதா செல்வி

வசிப்பிடப் பொருட்கள்

இதையெல்லாம் நினைவில் கொண்டு தான் அவரவர் வசிப்பிடத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் செய்யும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்ட செயல்பாடுகள் அமைந்துள்ளன. கற்கள், குச்சிகள், வித விதமான இலைகள், கோல மாவு அல்லது மணல், பழைய அட்டைகள், காய்கறிகள், பழங்கள், புளியம்முத்து, இப்படி நிறைய. இவைகள் தான் கணக்கு பாடம் நடத்த தேவையான கற்றல் உபகரணங்கள்.

உதாரணமாக "நானே ஒப்பிடு வேன்" என்ற செயல்பாடு சிறிய எண் மற்றும் பெரிய எண் அறிதல் மற்றும் கூட்டல் அறிந்துகொள்ள கொடுக்கப்பட்டுள்ள விளையாட்டு.

காகிதப் பந்தில் கணிதம்

இந்த விளையாட்டுக்காக குழந்தைகளை இரு குழுவாக பிரித்து வரிசையாக நிற்கவைக்க வேண்டும். இரு அணியருக்கும் முன்பாக இரண்டு கூடையில் காகித பந்தோ அல்லது கற்களோ அல்லது வேறு ஏதாவது பொருட்களையோ போட்டு வைக்க வேண்டும்.

விசில் ஊதியதும் வரிசையில் முதலில் நிற்கும் குழந்தை ஓடிச் சென்று காகித பந்தை எடுத்து கொண்டு போய் கொஞ்ச தூரத்தில் இருக்கும் காலியான கூடையில்போட்டு விட்டு ஓடிவந்து அடுத்தகுழந்தைக்கு பாஸ் கொடுக்க வேண்டும். இரண்டாவது குழந்தை உடனே ஓட ஆரம்பிக்கும். இப்படியாக இரண்டு அணியும் போட்டி போட்டுக் கொண்டு ஓடி காலியான கூடையில் பந்தினை சேகரிப்பர். மறுபடியும் ஆசிரியர் விசில் ஊதியதும் ஓடுவதை நிறுத்திவிட்டு அனைவரும் சென்று பந்துகளை எண்ண வேண்டும்.

எத்தனை எண்ணிக்கை உள்ளதோ அந்த எண்ணிக்கைக்கான சரியான எண்ணை எண்ணட்டைகளில் அடையாளம் கண்டு எடுத்துக் காட்ட வேண்டும். எந்த குழு கூடுதலான பந்துகளை சேகரித்தார்களோ அதற்குதான் வெற்றி. இந்த விளையாட்டின் மூலம் குழந்தைகள் பெரிய எண், சிறிய எண், கூட்டல், எண்களை அடையாளம் காணுதல் என்ற கணித கருத்துடன், குழு ஒருங்கிணைப்பு, குழுவாக செயல்படல், கூர்ந்து கவனித்தல், ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்துதல் போன்ற ஆளுமை சார்ந்தசமூக பண்புகளையும் சேர்த்தே மகிழ்ச்சியாக கற்றுக் கொள்கிறார்கள்.

மொழி சிக்கலையும் சமூக சிக்கலையும் ஒருங்கே பெற்ற மாநில எல்லைப்புற கிராமத்து அரசு பள்ளிகுழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடி புரிந்து கற்றுக் கொண்டிருக் கிறார்கள் எண்ணையும் எழுத்தையும் கூடவே இந்த சமூகத்தையும்.

கட்டுரையாளர்: ஆசிரியை

அரசு மேல்நிலைப்பள்ளி, குலமங்கலம், மதுரை மாவட்டம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in