உங்கள் பள்ளி சமூகத் திறன்களை கற்பிக்கிறதா?

உங்கள் பள்ளி சமூகத் திறன்களை கற்பிக்கிறதா?
Updated on
2 min read

கரோனா பெருவெடிப்பு காலத்துக்குப் பிறகு தொடக்கப்பள்ளி மாணவர்களை முன்னேற்றப் பாதையில் தயார்ப்படுத்துவது என்பது தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு சவாலாக மாறியுள்ளது.

காலவரையற்ற விடுமுறைக்குப் பின்பு மீண்டும் பள்ளி திறக்கப்பட்டதும், மாணவர்களை வரவேற்க நாங்கள் உற்சாகமாக காத்திருந்தோம். ஆனால், குழந்தைகள் முன்பு போல் இல்லை. வெவ்வேறு வகையில் தங்கள் விருப்பமின்மையை வெளிப்படுத்தினார்கள். சில குழந்தைகள் அழத்தொடங்கினார்கள்.

சிலர் முரண்டு பிடித்து கோபத்தை வெளிப்படுத்தினார்கள். சிலர் சோகமாகவே இருந்தனர். அசாதாரண சூழ்நிலையில் இருந்து மீண்டு பள்ளி வந்திருக்கும் குழந்தைகளை கையாள்வது என்பது அனுபவம் வாய்ந்தஆசிரியர்களுக்கே கடினமானதாகவும், சோர்வாக வும் இருந்ததை கண்கூடாகக் கண்டேன்.

எங்கள் பள்ளியின் மூத்த ஆசிரியை இதுவரை பலதரப்பட்ட திறன் கொண்ட மாணவர்களுக்குக் கற்பித்த அனுபவம் மிக்கவர். ஆனால்,கடந்த ஆண்டு அவர் பார்த்தது போல் இதுவரை கண்டதில்லை என்று வருத்தப்பட்டார். மாணவர்களில் சிலர், வழக்கமான சொற்களுக்குக் கூட பொருள் தெரியாமல் இருக்கின்றனர். பாட வேளை தொடங்கும்போது வருகை பதிவுக்காக மாணவர்களின் பெயர்களை கூப்பிடும் போது சிலர் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தது அதிர்ச்சியூட்டியது.

இந்த கடினமான கட்டத்தை கடக்காவிட்டால் எதையுமே குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க முடியாது என்பதை உணர்ந்தோம். அன்றாட விஷயங்களை கூட திரும்ப திரும்ப போதித்து சில பிரச்சனைகளை சில மாதங்களில் களைந்தோம். அவ்வாறு நாங்கள் முன்னெடுத்த சில முயற்சிகளை உங்களுடன் பகிர நினைக்கிறோம்.

சமூகத் திறன்களைக் கற்பித்தல்

கரோனா கால கட்டத்தில் வீட்டில் தனிமையில் ஒரு சில முகங்களை மட்டுமே பார்த்து பழகியிருந்த சிறுவர்களுக்கு, புது நபர்களுடன், சக மாணவர்களுடன் எப்படி பழகுவது என்பது தெரிந்திருக்கவில்லை. விட்டுக் கொடுத்தல், பகிர்தல், தொந்தரவு செய்யாமல் இருத்தல் போன்ற அடிப்படை சமூகத் திறன்களை முதலில் ஆசிரியர்கள் கற்பிக்கத் தொடங்கினர்.

அடுத்து வகுப்பறையில் நடக்கும் சிறு பிரச்சனைகளுக்கான தீர்வு நோக்கி குழந்தை களை நகர்த்துவதற்கு ஆசிரியர்கள் முக்கியத் துவம் கொடுத்தனர் . உதாரணமாக, தான் அணிந்திருக்கும் ஷூவின் நாடா கழன்றுவிட்டால் அழுவதோ, கூச்சலிடுவதோ சிறந்த எதிர்வினை அல்ல என்பதை குழந்தைகளுக்குபுரியவைத்தனர். இதை எப்படி சரி செய்வது என்ற செய்முறை விளக்கத்தை பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ கேட்டறிவதே இதற்கான தீர்வு என்று அவர்களுக்கு கற்றுக் கொடுத்தனர்.

கவனச்சிதறலை தவிர்க்க யோகா

வகுப்பு நடத்தும் போது, உடல் நிலை சரியில்லை என்றாலோ, காயம் ஏற்பட்டாலோ, உடனடியாக கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என்றாலோ மட்டும் தான் குறுக்கிட வேண்டும் என்று சொல்லப்பட்டது.

நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது சிறார்களுக்கு கவனச் சிதறல் ஏற்படுத்தியது. இதை தவிர்க்க இடைவெளிகளில் எளிய யோகாசனங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. இந்த திட்டம்விழிப்புடன் பாடங்களை கவனிக்க குழந்தைகளுக்கு உதவியது. அதேபோல குழந்தைகள் சோர்வுறும் போது குதித்தல், தூரம் தாண்டுதல் போன்ற நடவடிக்கைகள் உற்சாகம் தந்தது.=

சண்டைக்கு தீர்வு பேச்சுவார்த்தை

சேர்ந்து விளையாடும் போது மோதல் ஏற்பட்டால், அதனை தீர்த்துவைக்க சண்டை போடுவதை விட என்ன நடந்தது, அதனால் தாங்கள் எப்படி உணர்கிறார்கள், எதை செய்தால் அது சரியான தீர்வாக இருக்கும் போன்றவற்றை பேசி தீர்க்க பயிற்றுவிக்கப்பட்டது.

இவை அனைத்து குழந்தைகளின் நடத்தையில் வெளிப்பட்ட நேர்மறை மாற்றங்கள் என்றால் ஆசிரியர்களிடமும் நல்லதொரு மாற்றம் வெளிப்படத் தொடங்கியது. ஒரு ஆசிரியர் அதை இப்படிச் சொன்னார்: "நான் தினமும் மாரத்தான் ஓடுவது போல் உணர்ந்தேன். ஆகவே தினமும் இரவு எட்டு மணி நேரம் தூங்கினேன், உடற் பயிற்சி செய்தேன், நல்உணவை சாப்பிட்டேன், புத்துணர்ச்சியுடன் வேலைக்கு வர முயன்றேன், அனுதினம் குழந்தைகளுக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுத்தேன்”.

சவாலே சமாளி என்பது இதுதானே!

கட்டுரையாளர்: தலைவர்,சிருஷ்டி பள்ளிகள், வேலூர்

தொடர்புக்கு:principal.mssaravanan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in