

அதிகாலைப் பொழுது. காக்கை, குருவி,மைனா, போன்ற பறவைகள் எல்லாம் இரைதேட கிளம்பிவிட்டன. மற்ற விலங்குகள் தமக்குப்பிடித்த உணவுகளைத் தேடி அலைந்தன. மாமிசப்பட்சிணிகள் விலங்குகளைக் கொன்று புசிக்கின்றன. இந்தக் கொடுஞ் செயல் கண்டு வேதனைப் பட்டது கருங்குரங்கு ஒன்று.
“இயற்கையின் படைப்பு அப்படி. நீ கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது” என்றது அதன் நண்பனான பச்சைக் கிளி. “நம்மால் மற்றவர்களுக்குத் துன்பம் இல்லை. அதனால் நம்ம பிறவி நல்ல பிறவி” என்றது இன்னொரு நண்பனான முயல். நம்மாலும் நன்மை புரிய முடியும் என்று குரங்கு யோசித்தது.
அன்று அக்காட்டு வழியே ஏழை மனிதர்கள் பசியுடன் வருவதைக் குரங்கு பார்த்தது. உயரத்தில் உள்ள பலா பழம் நன்றாகப் பழுத்திருந்தது. பசியோடு வந்த மனிதர்கள் அதைப் பறிக்க முயற்சித்தார்கள். இதைப் பார்த்த குரங்கு பழத்தைப் பறித்து போட்டது. அவர்களும் அதை எடுத்து வகிர்ந்து பங்கிட்டுச் சாப்பிட்டுப் பசியாறினார்கள்.
“குரங்கு என்றாலும் எவ்வளவு அன்பான அறிவான குரங்கு என்று மனிதர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். இக் குரங்கின் தயவால் நம் பசி தீர்ந்தது என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். ஆனால் அக்காட்டில் இருந்த ஒரு மான் அக்குரங்கை உருவக்கேலி செய்தது.
“ ஏய் கருங்குரங்கே…என்னோடு பேசாதே… உன்னை எனக்குச் சுத்தமா பிடிக்கல… உன் மூஞ்சியும் நீயும் என்று மான் திட்டியது. இதைக் கண்ட குறுமுயல் மானிடம் சண்டையிட்டது.
“நீ ரொம்ப அழகா இருக்கறதாலதானே நீ குரங்கை இழிவு செய்யறே. கருங்குரங்கு பார்க்க கரு கருன்னு இருந்தாலும் தங்கமான குணம். இதை நீ அறியும் காலம் வரும் என்றது முயல்.
கருங்குரங்கை கேலி செய்த புள்ளிமான் கொடும் சிங்கம் கண்ணில் பட்டுவிட்டது. மான் கொளு கொளுன்னு இருக்கு. அடிச்சு சாப்பிட்டா ரொம்ப சுவையா இருக்கும் என்று சிங்கம் மானைத் துரத்தியது.
மான் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மூச்சிறைக்க ஓடிவந்தது. தனக்கு அழகான கொம்பு உள்ளது என்று பெருமைப்பட்டுக் கொண்ட மானுக்கு அந்தக் கொம்பாலயே ஆபத்து வந்தது. கிளைகொடிகளில் மானின்கொம்பு சிக்கிக்கொண்டதால் ஓட முடியவில்லை.
மரத்தில் இருந்த குரங்கிடம் உதவிகேட்க முடியாத நிலை. இருப்பினும் தன் கரங்காளால் மான் கொம்பில் சிக்கியிருந்த கிளை கொடிகளைப் பிய்த்து எறிந்தது.
“எல்லாம் பிய்த்து எறிஞ்சுட்டேன்… நீ ஓடி ஒழிந்து உயிரைக் காப்பாத்திக் கொள்” என்று கருங்குரங்கு கருணையோடு சொன்னது. தன் விழிநீரால் நன்றி சொல்லிவிட்டுத் தப்பித்து ஓடியது மான். மறுநாள் மான் கருங்குரங்கிற்கு நன்றி சொல்ல வந்தது.
“உன்னால் நான் உயிர் பிழைத்தேன். இனி நான் உன்னை மட்டும் அல்ல யாரையும் உருவக்கேலி பண்ணமாட்டேன். நான் உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நீ பல்லாண்டு வாழணும். நீ அன்பால் கருணையால் சுந்தரன். நீ வாழும் இந்தக்காடு சுந்தரகாடு என்றது. அதோடு என்னை நண்பனாக ஏற்றுக் கொள்வாயா? என்று நட்புக்கரம் நீட்டியது மான்.
எழுத்தாக்கம் அறச்செல்வி,
இணைப்பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் கோயம்புத்தூர்
தொடர்புக்கு: r.selvi1967@gmail.com