

குழந்தைகளுக்குப் பாடல்கள் என்றாலே எப்போதும் கொண்டாட்டம்தான். அந்த வகையில் குழந்தைகளை மகிழ்விக்கும் பாடல்கள் நிரம்பிய புத்தகமாக “ஊர் சுற்றலாம்” புத்தகத்தைப் படிக்கலாம். அட்டைப்படமே வண்ணமயமாக இருக்கிறது.
வானவில்லின் ஏழு நிறங்களும், பச்சை மரங்களும், சிகப்புப் பறவையும் அழகாக வரையப்பட்டிருக்கிறது.
ஊர் சுற்றலாம், வண்டி சவாரி, சுண்டெலி, தோசை, தக்காளி, அம்மா எங்கே?, சைக்கிள், புதுச் சட்டை, குல்லாய் குல்லாய்..., ராட்டினம், குருவி, தம்பி என்ன சொன்னான்?, காய்கறிகள், பனையம்மா, பம்பரம், எது மேலே? எது கீழே? ஆகிய 16 தலைப்புகளில் பாடல்களை ஆசிரியை ராணி குணசீலி டீச்சர் சிறப்பாக எழுதியுள்ளார்.
அனைத்து பாடல்களும் ராகத்துடன் பாடும் விதத்தில் எளிமையாகவும் அழகாகவும் எழுதப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு,
சின்னஞ் சிறு குருவியே
வண்ணப் பட்டாம் பூச்சியே
பாட்டுப் பாடி பறந்து வா...என் பாட்டி வீட்டுக்கு போகலாம்...
இது போன்ற பல பாடல்கள் ஆசிரியர்களும் ரசித்து வாசிக்கும்படியாக எழுதப்பட்டிருக்கிறது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்இந்த புத்தகத்தில் உள்ள பாடல்களைப் படிக்கும்போதும், பாடும்போதும் அவர்களது மன அழுத்தம்குறையும். மகிழ்ச்சியான மனநிலையுடன் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.
ஆசிரியர்களுக்கும் இது போன்ற பாடல்கள் எழுத சிந்தனை பிறக்கும். சொற்களஞ்சியப் பெருக்கத்தைக் குழந்தைகளிடையே உருவாக்குவதற்கு இந்தபாடல் புத்தகம் ஆசிரியர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
பாடல்களோடு ஓவியங்களும் வரையப்பட்டு அந்த ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுவது போல மாணவர்களை செய்ய இந்தப் புத்தக வடிவமைப்பு அமைந்துள்ளது.
வண்ணப் பென்சில்கள் வாங்கிக் கொடுத்து வண்ணம் தீட்டக் கூட வைக்கலாம். ஓவியத் திறனும் வளர வாய்ப்பிருக்கிறது. இப்படி, பன்முகத் திறனை குழந்தைகளிடம் உருவாக்குவதற்குத் தேவையான ஒரு துணைக் கருவியாக இந்த பாடல் புத்தகம் உங்களுக்குப் பயன் தரும் என்பதில் ஐயமில்லை.
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியை
“ஊர் சுற்றலாம்” எழுதியவர்: ரா.ராணி குணசீலி.
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம்
பக்கம் : 16 விலை : 40