மாற்றம் தரும் மகிழ்ச்சி வகுப்பறை - புதிய திட்டம் தயார்

மாற்றம் தரும் மகிழ்ச்சி வகுப்பறை - புதிய திட்டம் தயார்
Updated on
1 min read

மாநிலத்தில் முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படித்து வரும் நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு "மகிழ்ச்சி வகுப்பறை செயல்திட்டம்" நடைமுறைப்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ள, கவனம் சிதறாமல் கவனிக்க ஒரு மாற்று யுக்தியாக "மகிழ்ச்சி வகுப்பறை செயல் திட்டம்" நடைமுறைக்கு வர உள்ளது.

இதற்கான ஆசிரியர் கையேடு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் வெவ்வேறு சூழ்நிலை, பொருளாதார பின்னணியில் இருந்து வருகிறார்கள்.

அவர்களிடம் சமூக ஆரோக்கியம், மன ஆரோக்கியம், மகிழ்ச்சி, நல்வாழ்வு உருவாக்கும் விதமாக பரிசோதனை முறையில் திண்டுக்கல், சென்னை, தர்மபுரி, கரூர் வேலூர், சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை திருநெல்வேலி ஆகிய 11 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்களை தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் வெற்றி பெற வைக்கும் விதமாக பள்ளிகளில் மகிழ்ச்சி வகுப்பறை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் வயதுக்கேற்ப கவன குவிப்பு செயல்பாடுகள், கதைகள், மகிழ்ச்சியூட்டும் செயல்பாடுகள், தன்னை முழுமையாக வெளிப்படுத்துதல், விளையாட்டு போன்ற அம்சங்களை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளன.

ஒரு வாரத்தில் திங்கள் முதல் புதன் வரை மகிழ்ச்சி வகுப்பறை செயல்பாடுகள் நடைபெறும். விரும்பி விளையாடும் விதமாக 15 சிறுவிளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. மாணவரிடம் மன மகிழ்ச்சி, ஆளுமை பண்பு, தலைமை பண்பு, குழுப்பண்பு, வெற்றி தோல்வி சமமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை, தன்னம்பிக்கை உற்சாகம் போன்றவற்றை இவை உருவாக்கும்.

ஆசிரியர்கள் வகுப்பறையில் எப்போதும் நேர்மறையான கருத்துக்களை பேசும்போது இப்பழக்கம் மாணவரிடமும் வளரும், மன அழுத்தம் குறையும். மாணவர்கள் வகுப்பறையில் மட்டுமின்றி வகுப்பறைக்கு வெளியேயும் ஆசிரியர்களிடமிருந்து பல்வேறு நடத்தைகளை கற்றுக் கொள்கிறார்கள். மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்.

மகிழ்ச்சி வகுப்பறை, மகிழ்ச்சியுடன் மனநிம்மதிக்கும் ஒளி கொடுக்கும் என்று நம்புவோம். கட்டுரையாளர், ஆசிரியர் அரசு தொடக்கப் பள்ளி அய்யம்பாளையம். திண்டுக்கல் மாவட்டம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in