

சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்தி ஈரோடுமாவட்டம், குருவரெட்டியூர் அரசு தொடக்கப் பள்ளியில் பெண் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். பள்ளியின் இந்த புதிய உத்திக்கு பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அரசு பள்ளிகளில் குறிப்பாக தொடங்கப் பள்ளிகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சேர்ப்பது தற்போது பெரும் சவாலாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் இலவசமாக புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை, காலணி, ஜியாமெட்ரி பாக்ஸ், சைக்கிள், பேக், லேப்டாப் உள்பட 16 பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இருப்பினும் பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம், உட்கட்டமைப்புகள், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளால் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பெரும் பாடுபடாக இருக்கிறது என்கின்றனர் கல்வியாளர்கள்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில்மாணவிகளை சேர்ப்பதற்கு புதிய உத்தியைக் கையாள்கின்றனர். மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாணவியரை சேர்த்துவிட்டு மாணவியர் சேர்க்கைக்கு கடந்த ஆண்டு முதல் புதிய வழியைக் காட்டியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிதான் இந்த புதுமையைச் செய்து வருகிறது.
இதுகுறித்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.வெங்கடாசலம், இடைநிலை ஆசிரியர் பூபதிராஜா ஆகியோர் கூறியதாவது:குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1913-ல் தொடங்கப்பட்டது. 109-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இப்பள்ளியில் தற்போது 245 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். 8 ஆசிரியர்கள் உள்ளனர்.
சமூக வலைத்தளத்திலும்..
ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையை முன்னிட்டு துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து வீடு, வீடாக விநியோகிப்போம். பள்ளியில் உள்ள கற்றல், கற்பித்தல் வாய்ப்பு வசதிகள் குறித்து பிளக்ஸ் பேனர் வைத்தும், சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்தும் மாணவர் சேர்க்கை நடத்துகிறோம். மே 15-ம் தேதி முதல் நேரடியாக வீடு, வீடாகச் சென்று பெற்றோரை அணுகி 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆவன செய்வது வழக்கம்.
புதிய முயற்சி
இந்நிலையில், தபால்காரர் ஒருவர் "பெண் குழந்தைகளுக்கான மத்திய அரசின் செல்வமகள் சேமிப்புத் திட்டம் குறித்து விளக்கினார். இத்திட்டத்தில் குழந்தைகளை சேர்த்துவிட்டால் அவர்கள் உயர்கல்வி பயிலும் போதும், திருமணத்தின்போதும் கணிசமான பணம் கிடைப்பது பெரும் உதவியாக இருக்கும்" என்றார்.
அப்போதுதான் நம் பள்ளியில் பெண் குழந்தைகளை சேர்க்க இத்திட்டத்தைப் பயன்படுத்த திட்டமிட்டோம். அதன்படி, பெற்றோரை அணுகி இத்திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்து, பள்ளியில் மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்தினோம். அவ்வாறு சேரும் பெண் குழந்தைகளிடம் இருந்து உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு அவர்கள் பெயரில், செல்வமகள் திட்டத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி முதல் தவணையாக ரூ.250 செலுத்திவிடுவோம்.
அதன்பிறகு அடுத்துவரும் தவணைகளை குறைந்தது ஆண்டுக்கு ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை செலுத்தும் வசதி இருப்பதை தெரிவிப்போம். அவர்களும் தங்களால் இயன்ற பணத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த புதிய முயற்சி மூலம் இதுவரை குருவரெட்டியூர் அரசு தொடக்கப்பள்ளியில் 90 குழந்தைகளை சேர்த்துள்ளோம்.
மேலும், தண்ணீர் பந்தல்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி, பாலகுட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மூங்கில்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, விளாமரத்துக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் தலா 10 குழந்தைகள் வீதம் மொத்தம் 130 பெண் குழந்தைகளை சேர்த்துள்ளோம். இதற்கு விவேகானந்தர் கல்வி அறக்கட்டளை, குருவரெட்டியூர் நற்பணி மன்றம் ஆகியன பெரிதும் உதவி வருகின்றன.
இலவச நூலக கணக்கு
இதுமட்டுமல்லாமல், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக எங்கள் பள்ளி மாணவ, மாணவியருக்கு குருவரெட்டியூர் கிளை நூலகத்தில் தலா ரூ.20 செலுத்தி இலவசமாக நூலக கணக்கு தொடங்கிக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இதுவரை 4 மற்றும் 5-ம் வகுப்புகளைச் சேர்ந்த 200 குழந்தைகளுக்கு நூலகக் கணக்கு தொடங்கியுள்ளோம்.
அவர்கள் தலா ஒரு புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுபோன்ற முயற்சியை மற்ற அரசு தொடக்கப் பள்ளிகளும் மேற்கொள்ளலாம் என்கின்றனர் கல்வியாளர்கள்.