

தனியார் பள்ளி தலைமை ஆசிரி யையின் 6 நாவல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் கவுரவ விரிவுரையாளர் ஆ.அனிதா.
ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டது. அவர்களில் பலர் "அப்டேட்டாக" இருப்பதும் இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இந்நிலையில், விலங்கியல் பட்டம் படித்து, ஆசிரியையாக பணியைத் தொடங்கி, தற்போது தனியார் பள்ளி தலைமை ஆசிரியையாக இருக்கும் அருணாஹரி தமிழ் மீது கொண்ட பற்றினால் 8 நாவல்கள் எழுதியுள்ளார்.
அவற்றில், 6 நாவல்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் திருச்சி மாவட்டம், குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் கவுரவ விரிவுரையாளர் ஆ.அனிதா.
இதுகுறித்து முனைவர் அனிதா நம்மிடம் பகிர்ந்து கொண்டதில் இருந்து...
கல்லூரியில் என்னுடன் பணிபுரியும்தமிழ் கவுரவ விரிவுரையாளர் செ.இளமதி மூலமாக தலைமை ஆசிரியை அருணா அறிமுகமானார். இளமதிக்குவகுப்பு ஆசிரியராக அவர் இருந்துள்ளார். பின்னர் இருவரும் லால்குடியில் ஒரே பள்ளியில் பணிபுரிந்துள்ளனர். அருணா எழுதிய நாவல்கள் நன்றாக இருப்பதாகக் கூறி, அவற்றில் சிலவற்றை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார் இளமதி.
அவற்றைப் படித்தபோது, பெண்கள் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் போராடி அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதையே அனைத்து நாவல்களும் மையக் கருத்தாகக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அப்போது எனக்குள் ஏற்பட்ட உத்வேகம், வாழ்க்கையைப் பற்றிய புரிதல் மற்றவர்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 6 நாவல்களை முனைவர் பட்ட ஆய்வுக்காக எடுத்துக் கொண்டேன்.
அதுகுறித்து எனது நெறியாளரும் திருச்சி திருவானைக்கோவிலில் உள்ள மத் ஆண்டவன் கலை மற்றும்அறிவியல் கல்லூரி பேராசிரியருமான சுந்தரமூர்த்தியிடம் தெரிவித்தேன். அவரும் அந்த நாவல்களைப் படித்துவிட்டு ஆய்வு செய்ய வழிகாட்டினார்.
விடாமுயற்சி
ஆய்வைத் தொடங்கினேன். "திருமகள் தேடி வந்தாள்" நாவல், ஒவ்வொரு பெண்ணுக்கும் போராட்டகுணம், விடா முயற்சி, குறிக்கோள்மட்டும் நேர்மையாக இருந்தால் போதாது அவற்றை அடைவதற்கான வழியும் நேர்மையாக இருக்க வேண் டும் என்பதை வலியுறுத்துகிறது.
"வீணையடி நீ எனக்கு" நாவல், கணவன் மனைவிக்கிடையே இழையோடும் அன்பு, கடமை உணர்வைச் சொல்வதுடன் நட்பையும் பாராட்டுகிறது. “பூக்கள் பூக்கும் தருணம்" நாவல், பெண் என்பதால் தன்னை நிராதரவாக விட்டுச் சென்ற தாய் மட்டுமல்ல இந்த சமுதாயமே இப்படியொரு பெண் நமக்கு இல்லையே என ஏங்குவதை மையக் கருத்தாககொண்டுள்ளது. கட்டிட தொழிலாளியாக இருந்த இந்த நாவலின் கதாநாயகி, பின்னாளில் பெரிய பில்டராக உயர்வதுதான் உன்னதம்.
"உன்னிடம் மயங்குகிறேன்" நாவல்,காதல் வயப்படும் பெண், காதலன் பிரிந்து சென்ற பிறகு அனுபவிக்கும் அவஸ்தையை எடுத்துச் சொல்வதுடன், சவாலான அந்த வாழ்க்கையை எதிர்கொண்டு தகவல் தொழில்நுட்பத்துறையில் சாதிப்பதை சொல்கிறது.
“கனா கண்டேன் தோழி" நாவல், பெற்றோரை இழந்து உறவினர் வீட்டில்வளரும் இளம் பெண்ணை பணத்தாசையில் 60 வயது முதியவருக்கு கட்டிவைக்க முயற்சி நடந்தபோது, வீட்டிலிருந்து வெளியேறி தனி ஆளாகப் போராடி கலெக்டராகிறார். பெண்ணுக்கு இருக்க வேண்டிய தற்சார்பை இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது.
“கண்டேன் ராதையை"நாவல், மனைவி மீது கணவன் சந்தேகப் படுதல் உள்ளிட்ட சந்தர்ப்ப சூழலால் ஊரைவிட்டு விரட்டப்படும் பெண், சுயமுயற்சியால் பெரிய எழுத்தாளராக மாறுவதை தத்ரூபமாக விளக்குகிறது.
போராடும் குணம்
மேற்கண்ட 6 நாவல்களை "அருணாஹரி நாவல்களில் சமுதாய சிந்தனை கள்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து 200 பக்கங்கள் கொண்ட ஆய்வுக் கட்டுரையாக சமர்ப்பித்தேன். கரோனாஊரடங்கு மற்றும் தந்தையின் உடல்நலக்குறைவு, தொடர்ந்து அவரது மறைவு போன்ற காரணங்களால் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த மாதம் 28-ம் தேதி முனைவர் பட்டம் பெற்றுவிட்டேன் என்றார் அனிதா.
தற்போதைய சூழலில், பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்கள், மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய முயற்சி, பிரச்சினைகளை எதிர்த்துபோராடும் குணம் ஆகிய குணநலன் கள் அவசியம் என்பதே ஆய்வுக் கட்டுரையின் "ஹைலைட்டாக" உள்ளது என்று முனைவர் அனிதா தெரிவித்தார்.