

திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள குப்பைக் கிடங்கில் ரூ.57 லட்சத்தில் பயோ மைனிங் மூலம் 80 ஆயிரத்து, 220 டன் குப்பை அகற்றப்பட உள்ளது. மேலும், அந்த குப்பை கிடங்கை குறுங்காடுகளாக மாற்ற பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள, 3,800 வீடுகள், 240 வணிக நிறுவனங்கள் மூலம் தினமும், 4 டன் அளவுக்கு குப்பை சேகரமாகிறது. இந்த குப்பை சுமார், 4 ஏக்கர் பரப்பில் உள்ள பேரூராட்சியின் வளம்மீட்பு பூங்காவில் கொட்டப்படுகிறது.
இதில், 2.5 டன் குப்பையை கொண்டுதினமும் உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். குப்பை குவியல் அவ்வப்போது தீப்பற்றி எரிவதால் எழும் புகை காரணமாக, சுற்றுப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு, உபாதைகள் ஏற்படுவது தொடா்கதையாக உள்ளது.
இந்நிலையில், இந்த குப்பை குவியலை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அங்கு மொத்தம், 80 ஆயிரத்து, 220 டன் குப்பை இருப்பதாக அண்ணா பல்கலைக் கழக வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்து தெரிவித்தனர். இதையடுத்து ‘பயோ மைனிங்' இயந்திரம் மூலம் குப்பைகள் தரம் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணியை, தூய்மை இந்தியா இயக்கம்-2.0 திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ரூ.57 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஓரிரு மாதங்களில் அனைத்து குப்பைகளும் அகற்றப்பட்டு, மியாவாக்கி முறையில் காடுகள் உருவாக்கப்பட உள்ளன.
இதுகுறித்து பேரூராட்சி செயல்அலுவலர் குணசேகரன் கூறியதாவது: ‘பயோ மைனிங்’ திட்டம் என்பது சுற்றுச்சூழலுக்கு நன்மை தரக்கூடிய தொழில்நுட்பம் ஆகும்.
குவியலாக தேங்கி உள்ள குப்பையை அகழ்வு இயந்திரம் மூலம் கிளறி, பிரத்யேக இயந்திரத்தில் கொட்டப்படும். அந்தகுப்பை பெரிய ௮ளவிலான ‘கன்வேயர்’ மூலம் நகர்ந்து செல்லும் போது, பிளாஸ்டிக், இரும்பு, மண் என குப்பையில் கலந்துள்ள பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக பிரிக்கப்படும்.
இதில், மக்கும் குப்பைகள் சலிக்கப்பட்டு இயற்கை முறையில் உரமாக மாற்றப்படும். மக்காத குப்பைகளில் இருந்து மறு சுழற்சிக்கு பயன்படும் குப்பைகள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு, அவை முறையாக மறு சுழற்சி செய்யப்படும்.
மறுசுழற்சிக்கு பயன்படாத மக்காத குப்பைகள், பிளாஸ்டிக், துணி உள்ளிட்டவை தனியாக சேகரிக்கப்பட்டு, சிமெண்ட் தொழிற்சாலைகளில் பாய்லருக்கு தேவையான எரிபொருளாக அனுப்பி வைக்கப்படும். ஓரிரு மாதங்களில் குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்ட பின் அந்த இடத்தில் மியாவாக்கி காடுகள் உருவாக்கப்படும்.