அப்பாவிடம் நிஜ யானை கேட்ட மகள்

அப்பாவிடம் நிஜ யானை கேட்ட மகள்
Updated on
2 min read

விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டிருக் கும் சிறுமி நாதியாவின் ஆசையை அவளுடைய தந்தை நிறைவேற்றினாரா அவளுடைய நோய் குணமடைந்ததா என்பதே கதையின் மையக்கரு. நாதியாவின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள் “அவளது ஒவ்வொரு விருப்பத் தையும் நிறைவு செய்து , அவள் சலிப்படையாது இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.

ஆனால் மருத்துவரிடம் அவளுடைய அம்மாவோ நாதியாவிற்கு எதன் மீதும் விருப்பம் இல்லை என்கிறார். மருத்துவரோ அவளைச் சிரிக்க வைக்க மகிழ்ச்சியாக இருக்க வைக்க முடிந்தால், அது மிகச் சிறந்த மருந்தாக இருக்கும்.

உங்கள் மகளின் நோய் வித்தியாசமானது என்பதை நீங்கள் புரிந்து கொண்டுதான் ஆக வேண்டும் என்கிறார். நாதியாவிடம் உன்னுடைய எல்லா பொம்மைகளையும் எடுத்து வரவா? நாம் விளையாடுவோமா என்று அம்மா கேட்டதும் எனக்கு எதுவும் வேண்டாம் என்கிறாள்.

மனநோய்

அவளை எதுவும் துன்புறுத்தவில்லை. அடிப்பட்ட காயங்களுமில்லை. காய்ச்சல்கூட இல்லை. ஆனால் அவள் மெலிந்துகொண்டே இருந்தாள். அவளுக்கென்று செய்யப்படும் எதையும் அவள் விரும்பவில்லை. அவள் அமைதியாகவும் சோகமாகவும் இரவும் பகலும் படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தாள். சில நேரங்களில் அவள் அப்படியே அரைமணிநேரம் வரை மயக்க நிலையில் இருப்பாள். ஆனால் அவளுடைய கனவுகள் நீளமானதாக இருந்தன.

கனவு

நாதியா ஒரு நாள் காலை விழித்தெழுந்த போது வழக்கத்தைவிட சற்று மகிழ்ச்சியாக இருந்தாள். அன்றிரவு ஒரு கனவு வந்தது. ஆனால் தெளிவாக அவள் நினைவுக்கு வரவில்லை. அவள் அம்மாவிடம் தனக்கு ஒரு யானை வேண்டும் என்று கேட்டாள்.

அவளுடைய அப்பா விலையுயர்ந்த யானை பொம்மையை அவளுக்காக வாங்கி வந்தார். அந்தப் பொம்மையைப் பார்த்து அவளுக்கு சலிப்பு தான் வந்தது. எனக்கு நிஜ யானை வேண்டும் என்றாள். ஆனால், அவளுடைய அப்பா மிகப்பெரிய யானையை வீட்டிற்குக் கொண்டு வர முடியாது.

மேலும், அதைக் கொண்டுவருவதில் உள்ள சிரமங்களை எடுத்துசொல்லியும் அவள் கேட்கவில்லை. மிகவும் விசித்திரமான நோய் கொண்ட மகளுக்கு எந்த மருத்துவராலும், நோயினைக் கண்டறியவும் சரிசெய்யவும் முடிய வில்லை. ஒரு மாதமாக படுக்கையில் இருக்கிறாள்.

ஒவ்வொரு நாளும் உடல் மெலிந்து வலுவிழந்து காணப்படுகிறாள். அவள் எதன் மீதும் அக்கறை காட்டவில்லை. அவள் சலிப்போடு இருக்கிறாள். மருத்துவர்கள் அவளை மகிழ்விக்கும்படி சொல்கிறார்கள்.

அவளுடைய ஒவ்வொரு விருப்பமும் நிறைவேற் றப்பட வேண்டும் என்கிறார்கள். ஆனால், எதையும் விரும்பாத அவள் இன்று ஒரு நிஜ யானையைக் கேட்கிறாள். ‘‘குழந்தைகள் அர்த்தமற்ற ஒன்றின்மேல் எப்போதும் விருப்பம் கொள்வதில்லை.

தங்கள் விருப்பங்களை விளக்கிச் சொல்லி தர்க்கம் செய்து அடைந்துவிடும் சாதுர்யங்களையும் கைக்கொள்வதில்லை. கொடியிலிருந்து ஒரு சிற்றிலை வெளிப்படுவதுபோல் மரத்திலிருந்து ஒரு பழுத்த இலை விடுபடுவதுபோல் அவை குழந்தைகளின் இயல்பில் வெளிப்படுகின்றன’’.

குழந்தைகள் விலங்குகளோடு பழகுவதைப் பார்க்கின்றோம். விலங்குகள் குழந்தைகளை ஒருபோதும் தன்னுடைய கட்டளைகளால் காயப் படுத்துவதில்லை. தன்னுடைய விருப்பத்தை திணிப்பதுமில்லை. நிபந்தனையற்ற அன்பு குழந்தைகளுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ளது என்பதைப் பெற்றோர் உணரத் தவறுகிறோம்.

அவர்களை அறிந்துகொள்ள முதலில் அவர் களுடைய உலகிற்கு நாம் செல்ல வேண்டும். நண்பர்களாக மாற வேண்டும். அப்போதுதான் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்க முடியும்.

நாதியாவின் ஆசையை நிறைவேற்றினால் நோய் குணமாகும் என்று நம்பும் தந்தை, யானையை வாங்கிக் கொடுத்தாரா மற்றும் நோய் குணமானதா என்பதை தெரிந்துகொள்ள நூலைப் படியுங்கள். எளிமையான மொழிபெயர்ப்பு. சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு என்பதை அறிவோம்.

கட்டுரையாளர்: தமிழ் ஆசிரியை
அரசு மேல்நிலைப்பள்ளி. வெலக்கல்நத்தம் திருப்பத்தூா் மாவட்டம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in