புது டீச்சர் வந்திருக்காங்க...

புது டீச்சர் வந்திருக்காங்க...
Updated on
2 min read

‘மே ஐ கம் இன் டீச்சர்', சொல்லிட்டுஉள்ளே வந்தால் இந்த புதுடீச்சருக்கு மட்டும் ஏன் பிடிக்க வில்லை?

"வகுப்புக்குள்ள வரும் போதுஇப்படியெல்லாம் கேட்க வேண்டிய தில்லை. இங்கிருந்து வெளியே போக என்னிடம் சொல்லிட்டுத்தானே போறீங்க. அப்புறம் உள்ளே வரும் போது மறுபடியும் ‘மே ஐ கம் இன் டீச்சர்’ ஏன்? ஒவ்வொரு தடவையும் அப்படி கேட்க வேண்டியதில்லை. என்றார். அதுபோல நோட்டு திருத்த டீச்சர் கிட்ட வந்து நின்றதும், கையைக் கட்டி நிற்பதும் கூடாது என்றார். இருந்தாலும் இந்த பசங்களுக்கு அப்படி நடப்பது பழகிப்போன ஒன்றில்லையா?

"இதெல்லாம் அடிமை மனோ பாவம்ப்பா. ஏன் நாம ஒருத்தருக்கு கைகட்டி நிக்கனும். அப்படி நிக்கிறது தான் மரியாதைன்னா உங்க அம்மா அப்பா முன்னாடி கைகட்டி நிக்கிறீங்களா? அப்ப அவங்க மேல உங்களுக்கு மரியாதை இல்லையா? முதலாளி முன்னாடி தொழிலாளிகூட கைகட்டி நிற்க வேண்டியதில்லை. இது நம்மை அடிமையாக பழக்கப்படுத்தும். இனி இப்படி கைகட்டி நிற்கக்கூடாது''

டீச்சர் சொல்லும் புதிய விசயங் களும் உரிய காரணங்களும் மனசில் விதை போல விழுந்து முளைத்தன.

இப்போது அவ்வகுப்பில் இருந்த 20 மாணவர்களும் கைகட்டி நிற்பது இல்லை. "மே ஐ கம் இன் டீச்சர்” சொல்றதில்லை.

சரி இந்த ரெண்டு பழக்கங்களும் மற்ற ஆசிரியர்களிடம் சரியா வருமா? சிக்கல் உருவானது. கவிதா டீச்சர் வகுப்பு பள்ளிக்கூடத்தில் பிரதி பலித்தது. பிற வகுப்புகளில் இந்த புதுப்பழக்கம் செல்லுபடி ஆகவில்லை. சிலருக்குத் திட்டும், அடியும்கூட விழுந்தது.

கவிதா டீச்சர் மாணவர்களோடு அதிக நேரம் இருந்தார்; அவங்களோடு விளையாடினார்; ஆடிப் பாடினார். பிள்ளைகள் ஒரு நாள் வரவில்லை என்றாலும் வீட்டுக்கு போன் போட்டுப் பேசினார். தேவைப்பட்டால் வீட்டுக்கே போய் விசாரித்தார். வீடு வரை வரும் இந்த டீச்சரை பெற்றோருக்கும் பிடித்துவிட்டது. வகுப்பில் சமீபமாகஉருவாகியிருந்த புதிய மாற்றங் கள் வீட்டிலும் பேசப்பட்டன. குழந்தை களின் வீடும் பள்ளியும் இணையும் புள்ளியாக வகுப்பறை மாறியது.

எந்த ஒன்றையும் கேள்வி கேட்கவும், காரணம் அறியவும், உள்ளாறத் தெளியவும் அவகாசம் தந்தார். முதலில் டீச்சர் சொன்னதால் பின்பற்றியவர்களுக்கு அதுவே இப்போது தெளிந்து மனப்பான்மையாக மாறியது. இரண்டு புதிய பழங்கங்களும் வகுப்பின் உள்ளுணர்வாகப் படிந்தன. சில வாரங்களிலேயே புதிய வாழ்வுக்கு அவ்வகுப்பு தயாரானது.

‘எது சரி? எது தவறு? என அறியத் தொடங்கும் பருவத்தில், இந்த டீச்சர் வந்த கொஞ்ச நாளில் ரெண்டு நல்ல பழக்கங்களை மாற்றிவிட்டார்' என ஆசிரியர் அறையில் ஒரே புலம்பல்.

ஒருநாள் எட்டாம் வகுப்பு மாதவி ஆசிரியர் அறையில் முட்டிக்கால் போட்டிருந்தாள். ஏன் என்கிற தகவல் கவிதா டீச்சருக்கு வந்தது. நேரா போனார்.

‘‘என்ன சார் ஆச்சு? இந்த பொண்ணு ஏன் முட்டி போட்டிருக்கா?"

"உங்களுக்கு மரியாதை தர வேணாம்னு பழக்குங்க டீச்சர். ஏற்கனவே இவர்கள் ஒழுக்கம் கெட்டுக் கிடக்கிறார்கள். இதுல நீங்க வேற" என்றார் உடற்கல்வி ஆசிரியர்.

தமிழய்யாவும் சேர்ந்து கொண்டார். ‘‘நாங்கெல்லாம் படிக்கும் போது" எனஆரம்பித்தார். விசயம் தலைமையாசிரியரிடம் போனது. மாதவியோடு தலைமையாசிரியர் அறையில் போய் நின்றார். கவிதா டீச்சரின் வார்த்தைகள் அவர் காதுகளுக்கு எட்டவே இல்லை. கவிதா டீச்சர் அறிவுறுத்தப்பட்டார். தலைமையாசிரியர் அறையிலிருந்து வெளியில் வந்த பின்பு இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவே இல்லை.

மறுநாள் காலையில் மாதவி வகுப்பிற்குள் நுழைந்தாள். "மே ஐ கம் இன் டீச்சர்" சொல்லவில்லை. கவிதா டீச்சரிடம் போய் நிற்கையில் கைகட்டவில்லை. இனி பழையது பற்றிய கவலை இல்லை.

பள்ளி ஆசிரியை

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in