நமக்குள்ளே இருக்கிறது ஆற்றல்

நமக்குள்ளே இருக்கிறது ஆற்றல்
Updated on
2 min read

ஆற்றல் எனப்படும் சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது. உறங்கிக் கொண்டிருக்கும் அதை தட்டி எழுப்பினாலே போதும். மண்ணுக்குள்ளே புதைந்து கிடக்கும் விதை மேல் எழும்பி செடியாய், மரமாய் வளர்வது போல் நம் ஆற்றல் நம்மை உயர்த்தும்.

கவின் 8-ம் வகுப்பு மாணவன். எந்நேரமும் ஆசிரியரின் கண்டனத் துக்கு ஆளாகும் செயல்களையே செய்து கொண்டிருப்பான். வீட்டுப்பாடம் செய்யமாட்டான். பாடவேளையில்பக்கத்து பையனை சீண்டிக் கொண்டிருப்பான். மற்றவர்களுடன் எந்நேரமும் சண்டைதான். பாடங்களை நோட்டில்எழுத மாட்டான்.

எட்டாம் வகுப்பை எப்படியோ தேறி, புதுமுக வகுப்பாய் 9-ம் வகுப்பு நுழைந்தான். அறிவியல் பாடவேளை ஆசிரியர் உயிரியலில் செல்களைப் பற்றி விளக்கி பாடம் நடத்த, அவனை அறியாமல் கவனிக்க ஆரம்பித்தான். பாடம் நடத்தியதும் ஆசிரியர் மாணவர்களுக்கு என்ன புரிந்தது என அறிய சிறிய தேர்வை நடத்தினார்.

அதை உடனே திருத்தியபோது அவருக்கு ஆச்சரியம். கவின் மிகச் சிறப்பாய் பதில் எழுதியிருந்தான். அவன் பாடத்தை நன்கு கவனித்ததால் நன்றாக எழுத முடிந்தது.

பா.அருணா ஹரி
பா.அருணா ஹரி

ஆசிரியர் "வெரிகுட்" என சொல்லி அவனைப் பாராட்டி பேசி மற்ற மாணவர்களை கைதட்டச் சொன்னார். அந்த நிமிடத்தில் அவன் புதியதாய் பிறந்தது போல் உணர்ந்தான். அவன் செயல்கள் மாறிப் போயின. பாடங்களை ஒழுங்காக கவனிக்க ஆரம்பித்தான்.

படிப்படியாய் அவனதுமதிப்பெண்களும் உயர ஆரம்பித்தது. அவனது பண்பான நடத்தை அனைவரையும் பாராட்ட வைத்தது. இன்று அவன் இயற்பியல் ஆராய்ச்சியாளர் ஆகும் இலக்கில் இருக்கிறான்.

இனியா 10-ம் வகுப்பில் இன்று தான் புதிதாய் அந்தப் பள்ளியில் சேர்ந்திருக்கிறாள். அவர் மிக நன்றாகப் படிக்கக்கூடிய மாணவி. ஆசிரியர் வகுப்பறைக்குள்ளே நுழைந்தார். "வீட்டுப்பாடம் செய்யாதவர்கள் எல்லாம் எழுந்திரிங்க" என்றதும், வகுப்பில் பாதிக்கு மேல் எழுந்து நின்றனர். “நீங்க உருப்படாத கும்பல்.

"பி" செக்ஷன் எல்லாம் பெயில்தான். வழக்கம்போல் "ஏ" செக்ஷன் தான் முதல் மதிப்பெண்கள் வாங்கி எல்லோரும் பாஸ் பண்ணப் போறாங்க" என்று ஆசிரியர் சொன்னதைக் கேட்ட இனியாவுக்கு கோபம் வந்தது. “ஏன் இப்படி சொல்றாங்க" என கேட்டதற்கு அவளருகில் இருந்த மாணவி, “அது அப்படித்தான் நல்ல படிக்கிறவங்க எல்லாம் "ஏ” செக்ஷன்தான். அவங்க தான் பர்ஸ்ட் வருவாங்க. பாஸும் பண்ணுவாங்க" என்றாள்.

இனியா யோசித்தாள். "உருப்படாத கும்பல் உயர்ந்த கும்பலாக மாற வேண்டும்” என உறுதி கொண்டாள். வகுப்பில் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவிகளை ஒன்று திரட்டினாள். அவர்களிடம் பேசினாள்.

இந்தாண்டு ‘பி’ செக்ஷன் மாணவிதான் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும். வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும்" என்ற லட்சியத்துடன் மாணவிகளை ஏழு ஏழு பேராக ஆறு குழுக்களாகப் பிரித்தனர். ஆறு குழுத் தலைவிகளும் அன்று அன்றைய பாடங்களை மற்ற மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்க தொடங்கினர். முதலில் சலித்துக் கொண்ட மாணவிகள் தோழிகளின் ஊக்கத்தால் படிக்க ஆரம்பித்தனர். கேலி, கிண்டல்களை பொருட்படுத்தாத இடைவிடாத முயற்சிதேர்வுகளில் தெரிய ஆரம்பித்தது.

"அட" என இவர்களை ஆச்சிரியத்துடன் பார்க்க வைத்து, எதையும் கண்டு கொள்ளாமல் குழு பயிற்சியை தொடர்ந்தனர். விளைவு பொதுத்தேர்வில் "பி" செக்ஷன் மாணவி இனியா முதல் மதிப்பெண் பெற்றதுடன் அனைத்து மாணவிகளும் மிக நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றனர்.

முதலாவதில் ஒரு நேர்மறைச் சொல் மாணவனின் ஆற்றலைத் தூண்டி செயல்பட வைத்தது. இரண்டாவதில் எதிர்மறைச் சொல் மாணவியின் ஆற்றலைத் தூண்டி செயல்பட வைத்தது.

அணுவின் உள்ளே மறைந்து இருக்கும் ஆற்றலை அணுவைப் பிளந்தோ, இணைத்தோ பெறலாம். நமக்குள்ளே புதைந்து கிடக்கும் ஆற்றலை நாம் கண்டறிந்துவிட்டால் எதையும் சாதிக்கலாம்.

கட்டுரையாளர்: முதல்வர்,நவபாரத் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி, இ.வெள்ளனூர்,

திருச்சி மாவட்டம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in