வாழத்தானே பிறந்தோம்
தேர்வில் தோற்றதாலும், குறைந்த மதிப்பெண் பெற்றதாலும், தற்கொலை முடிவிற்கு மாணவர்கள் செல்வது மிகவும் வலியான நிகழ்வு. இதை சமூகப் பொறுப்புள்ள எவரும் எளிதாக கடந்து செல்ல முடியாது.
வாழ்க்கை என்பது ஒரு வரம் மட்டும் அல்ல, அரிய வாய்ப்பு. தன் உயிரே ஆயினும் அதைப் போக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை. சிறு எறும்பு முதல் எந்த உயிரி னமும் எத்துன்பம் வந்தாலும் ஓடிஒளிந்து, போராடி, தப்பித்து வாழத்தான் முயல்கின்றன. அதுவே நாம் காணும் இயற்கையின் நியதி.
மாறாக மனித குலம்தான் அதிலும் சிலர்தான் தவறான முடிவை எடுத்து விடுகிறார்கள். அதிலும் மாணவர்கள் இத்தவறை செய்யும் போது, எங்கேஅவர்களை நாம் தவற விடுகிறோம் என்று ஆராய்ந்தால், உளவியல் ரீதியாக நாம் அவர்களை அணுகவில் லையோ என்ற ஆதங்கம் எழுகிறது.
மனச்சோர்வு, மனச்சிதைவு, பயம், பதற்றம், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவின்மை, மற்றவர்களின் கேலிப்பேச்சை தாங்க முடியாத மனம் போன்ற பல காரணங்களில் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டோ தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடுவது கொடுமை. தேர்வு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியே தவிரதேர்வே வாழ்க்கை இல்லை என்றஎண்ணமும், தோல்விகள் நிரந்தர மானவை அல்ல என்ற தெளிவும் ஆழமாக விதைக்கப்பட வேண்டும்.
நம்பிக்கையும் போராடும் திறனும்...
நம்பிக்கையும், போராடும் திறனும், தோல்வியைத் தாங்கும் பக்குவமும், பெற்றோரின் அரவணைப்பும் ஒருசேர கிடைக்கும்போது, நிச்சயம் தற்கொலைகள் தவிர்க்கப்படும்.
இந்நிலையில், விவேகானந்தரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வினை குறிப்பிடுவது சாலப் பொருத்தமாக இருக்கும்.
ஒருமுறை தன் நண்பர் மற்றும் அவர் மனைவி இவர்களுடன் விவேகானந்தர் நடைப்பயிற்சி சென்றார். அப்போது தூரத்தில் காளைமாடு வேகத்துடன் இவர்களை நோக்கி ஓடி வந்தது. இதைப் பார்த்த நண்பனின் மனைவி மயக்கமடைந்தார். காளை நெருங்கி வருகிறது, விவேகானந்தர் அந்த இடத்திலேயே திடமாக நின்று, வரும் காளையை நோக்குகிறார்.
ஆனால் அவரது நண்பரோ பக்கத்தில் இருக்கும் கட்டிடத்தை நோக்கி ஓடுகிறார். மாடு விவேகானந்தரை விட்டுவிட்டு அவரை நோக்கி ஓடுகிறது. அதற்குள் அங்கு வந்த வேலையாட்கள் அதை மடக்கிப் பிடித்துவிட்டனர். நண்பரின் மனைவி மயக்கம் தெளிந்து பார்க்கிறார்.
என்ன நிகழ்ந்தது, எங்கே கணவர் என்று பதற்றத்துடன் கேட்கிறார். அப்போது அங்கு வந்த நண்பர் விவேகானந்தரைப் பார்த்து, எப்படி பயமின்றி அந்த மாட்டை எதிர்கொள்ள முடிந்தது என்று கேட்கிறார். அதற்கு, "முதலில் எதையும் துணிச்சலுடன் எதிர்த்து போராட வேண்டும். திடமான மனதிருந்தால் எந்த பிரச்சினையும் நம்மை விட்டு ஓடும். மிருகங்களுக்கே ஒரு குணம் உண்டு, ஓடுபவரைக் கண்டால் துரத்தும். எனவே, அது உங்களை துரத்தியது, என்னை விட்டுவிட்டது” என்றார்.
மாணவர்களே நீங்கள்தான் எதிர்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள். சரித்திரம் படைக்கப் போகும் சாதனைகளின் முகவரிகள். வலிமையான பாரதத்தை தாங்கப் போகும் புதியவார்ப்புகள். நம்பிக்கையும், விடாமுயற்சியும் தொடர்ந்து இருந்தால் தோல்வி நம்மிடம் தோற்று ஓடும்.
எனவே, கிடைத்தற்கரிய, மிக மதிப்பு மிக்க உயிரை மாய்த்துக் கொள்ளாமல் பிறர் மதிக்க வாழ்வதே வாழ்க்கை என்பதை உணருங்கள். உயிர் மிக மிக உன்னதமானது என்பதை உங்கள் சாதனைகள் மூலம் உலகுக்கு உணர்த்துங்கள், உயருங்கள்.
ஆசிரியர் கோ.ரவிசந்திரன்
நகராட்சி மேல் நிலைப்பள்ளி, ஜமீன் பல்லாவரம், சென்னை
