

சென்னை: மாணவிகளுக்கு 53 ஆண்டுகளாக நற்பண்புகளை வளர்த்து வருகிறது ஈரோடு கலைமகள் கல்வி நிலையம். இதற்கு அங்குள்ள "ஹானஸ்டி ஷாப்" தான் சிறந்த முன்னுதாரணம்.
ஈரோட்டில் 1945-ம் ஆண்டு ஆசிரியர் மீனாட்சி சுந்தரனாரால் இரண்டு ஆசிரியர்கள் 77 மாணவர்களுடன் ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் தொடங்கப்பட்டது.
இன்று 6,300-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் குழந்தைகள் பள்ளி, தொடக்கப்பள்ளி, மெட்ரிக் பள்ளி, மேல்நிலைப்பள்ளி என்று ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி உள்ளது. தற்போது 300 ஆசிரியர்கள், அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.
இப்பள்ளி கல்வி் கற்பிப்பதிலும், கல்வி சார்ந்த இணை செயல்பாடு களிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது. பள்ளியில் பல சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், "நேர்மை நிறுவனம்” (ஹானஸ்டி ஷாப்) தனித்துவம் வாய்ந்தது. மாணவியரிடம் நேர்மைப் பண்பை வளர்க்கும் வகையில் 1969-ல் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் காந்தி நினைவாக இந்த நேர்மை நிறுவனம் தொடங்கப்பட்டது. இதனை பொறுப் பாசிரியர்கள் இருவரும், சாரண மாணவியரும் நிர்வகிக்கின்றனர்.
பேப்பர், பேனா, பென்சில், ரப்பர்,வரைபடம் போன்றவை இந்த ஆளில்லா கடையில் வாங்கி வைக்கப்படுகிறது. விலைப்பட்டியலும் உண்டியலும் அங்கு வைக்கப்பட்டுள் ளது. தலைமை ஆசிரியரின் அறைக்கு முன்பாக அமைந்துள்ள இந்த கடை பள்ளி திறந்தவுடன் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு மூடப்படுகிறது.
இந்தக் கடையில், மாணவியர் தங்களுக்குத் தேவையான பொருட் களை எடுத்துக்கொண்டு, விலைப் பட்டியலில் விலையைப் பார்த்து உண்டியலில் காசுகள் அல்லது பணத்தைப் போட்டுவிடுகின்றனர்.
வாரம் ஒரு முறை இதற்கான பொறுப்பு ஆசிரியர்கள், சாரண மாணவியர் கணக்கைச் சரிபார்க்கிறார்கள். பொருள் வாங்கி வைத்த பணத்தின் மதிப்பு, உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது என்பதை எண்ணி, கணக்கை சரி பார்த்த பிறகுவழிபாடு கூட்டத்தில் அதனை வாசிப் பார்கள்.
பணம் சரியாக இருந்தால் சரியாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். உண்டியலில் பணம் குறைவாக இருந்தால் நஷ்டம் இவ்வளவு என்று வாசிக்கின்றனர்.
அதுகுறித்து, வழிபாடு கூட்டத்தில் பொருளை எடுத்துவிட்டு யாரா வது பணம் போடாமல் இருந்தாலோ அல்லது மறந்துவிட்டாலோ அந்தப் பணத்தை உண்டியலில் போட்டு விடவும் என்று தலைமை ஆசிரியை கேட்டுக் கொள்கிறார். மறுநாள் மாணவியர் அந்தப் பணத்தை உண்டியலில் செலுத்தி விடுகின்றனர். அந்த தகவலும் வழிபாட்டுக் கூட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது.
உண்டியலில் பணத்தை செலுத்த மறந்தவர்கள், தவறியவர்கள் அந்தப்பணத்தைச் செலுத்தி தங்களது நேர்மையை நிரூபிப்பது உன்னதமாகப் பார்க்கப்படுகிறது. இது மற்ற பள்ளிகளுக்கு சிறந்த முன் உதாரணமாகவும் திகழ்கிறது.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை எ.ஹானா சசிகலா, தமிழ்த் துறை முதுகலை ஆசிரியை எஸ்.மீரா ஆகியோர் கூறியதாவது: ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் கடந்த 2020-ம் ஆண்டில் பவளவிழா கொண்டாடியது. 10-ம்வகுப்பு பொதுத் தேர்வில் 50 ஆண்டு களாகவும், மேல்நிலை பொதுத் தேர்வில் 28 ஆண்டுகளாகவும், மெட்ரிக் பொதுத் தேர்வில் 27 ஆண்டுகளாகவும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளோம்.
நேர்மை நிறுவனம் எனப்படும் "ஹானஸ்டி ஷாப்" பள்ளி நிறுவனரால் மர பீரோ ஒன்றில் தொடங்கப்பட்டது. அதை இன்று வரை அப்படியே பராமரித்து வருகிறோம். அதன்மூலம் மாணவிகளிடம் 53 ஆண்டுகளாக உண்மை, நேர்மை உள்ளிட்ட நற்பண்புகளை வளர்த்து வருகிறோம். மாணவிகளுக்கு கல்வி மட்டுமல்லா மல் அனைத்து விதமான நற்பண்பு களையும் வழங்குவதில் இன்றளவும் தனித்துவமாக செயல்படுகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.