புது பாய்ச்சலில் பள்ளி மேலாண்மை குழுக்கள்: முதல் கூட்டம் வரும் 29-ல் நடைபெறுகிறது

புது பாய்ச்சலில் பள்ளி மேலாண்மை குழுக்கள்: முதல் கூட்டம் வரும் 29-ல் நடைபெறுகிறது
Updated on
2 min read

மாநிலம் முழுவதும் உள்ள 37,391 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட பள்ளி மேலாண்மை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு (மறு கட்டமைப்பு) ஏப்ரல், ஜூலை மாதங்களில் முடிந்துள்ளது.

எதிர்காலங்களில் இக்குழு உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? அதன் பொறுப்புக்கள் கடமைகள் என்ன? குழு கூட்ட நிகழ்வுகள் எவ்வாறு அமைய வேண்டும், சிறந்தபள்ளி மேலாண்மை குழுக்கான விருதுகள் என்பன உள்ளிட்ட விவரங்களை பள்ளிக்கல்வி ஆணையர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோர் வெளியிட்டு புதிய விடியலை காட்டி உள்ளனர்.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பெயர், பொறுப்பு சார்ந்த விவரங்களை தலைமை ஆசிரியர் அறைக்கு அருகில் எழுதி வைக்க வேண்டும். உறுப்பினருக்கு அடை யாள அட்டை வழங்க வேண்டும்.

ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 மணி அளவில் சுமார் 90 நிமிடங்கள் தவறாது பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, நாளை மறுநாள் (ஜூலை 29) நடைபெறும் கூட்டத்தில், தமிழக முதல்வரின் பள்ளி மேலாண்மை குழு குறித்த காணொளியை உறுப்பினர்களுக்கு காட்ட வேண்டும்.

அன்றைய நாள் விடுமுறை என்றால் அதற்கு முந்தைய நாளில் நடத்தப்பட வேண்டும். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவர், தலைமை ஆசிரியர் இணைந்து புதிதாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும்.

கூட்ட நாளில் 50 சதவீத பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வந்தால் மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும்.

உடனடி தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் முடிக்க வேண்டும். பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை தலை வர் மற்றும் தலைமை ஆசிரியர் பள்ளிமேம்பாட்டு திட்ட செயலியில் பதிவேற் றம் செய்ய வேண்டும். அதனைமற்ற உறுப்பினர்கள் தங்கள் ஸ்மார்ட் போனில் பார்த்துக் கொள்ளலாம்.

பள்ளி மேலாண்மை குழு என்கின்ற அமைப்பை தாண்டி புதியதோர் முயற்சியாக துணைக்குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை மற்றும் தக்கவைத்தல் குழு, கற்றல் குழு, கட்டமைப்பு குழு, மேலாண்மை குழுஆகியவையாகும். இந்த துணை குழுக்கள் பள்ளியளவில் செப்டம்பர் மாதம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பணிகள்

குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் உதவியுடன் பள்ளி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளியில் சேர்க்காத மற்றும் இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் வயதுக்கேற்ற வகுப்புகளில் பள்ளிகளில் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கிராம சபை கூட்டம் நடைபெறும் நேரங்களில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பள்ளி மேம்பாட்டு திட்டம் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைத் தொழிலாளர், இடைநிற்றல், பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் பள்ளிகளில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி அருகில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை உறுப்பினர்கள் கண்காணித்து காவல் துறை உதவியுடன் தடை செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கான கட்டணமில்லா இலவச உதவி எண்கள் 1098, 14417 ஆகியவற்றை அனைவரது பார்வையில் படும்படி பள்ளியில் எழுதி இருப்பதை குழு உறுதி வேண்டும். மறு கட்டமைப்பு மூலம் முகம் மாறியுள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் புதியபாய்ச்சலுடன் பள்ளியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படு்கிறது.

கட்டுரையாளர்: ஆசிரியர்,

பள்ளி மேலாண்மை குழு மாவட்ட கருத்தாளர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அய்யம்பாளையம்.

திண்டுக்கல் மாவட்டம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in