

பொள்ளாச்சி: நவீன தகவல் பரிமாற்ற சாதனங் களான பேஸ்புக், இ-மெயில், வாட்ஸ்-அப் ஆகியவற்றை பயன்படுத்தும் இன்றைய தலைமுறையில் பலருக்கு கடிதம் எழுதும் பழக்கம் கிடையாது. கடிதம் எழுதுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது.
தகவல் தொடர்பு வளர்ச்சி யால் இன்று சில நிமிடங்களில் தகவல் பரிமாற்றங்கள் நடந்து விடுகின்றன. ஒரு காலத்தில் கடிதங்களை எடுத்து வரும் தபால்காரருக்காக பலரும் வீட்டின் முன்பு காத்திருந்த நிலை தற்போது மாறிவிட்டது.
என்னதான் இன்று ‘மெசேஜை’ தட்டிவிட்டாலும், தங்கள் அன்புக்குரியவர்களுக்கு கைப்பட எழுதும் வரிகளுக்கு வலிமை அதிகம். கடிதம் எழுதுவது குறித்து இளைய சமுதாயத்திடம் விழிப்புணர்வு இல்லாததால், பல பகுதியில் உள்ள தபால் பெட்டிகள் பராமரிப்பின்றி வீணாக கிடக்கின்றன.
இந்நிலையில், கடிதங்களின் நோக்கம் குறித்து இளைய சமுதாயத்திடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தில் பொள்ளாச்சி செண்பகம் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவித்து வருகின்றனர். மாணவர்களை அவர்களின் பெற்றோருக்கு கடிதம் எழுத வைத்துள்ளனர்.
மாணவர்கள் அஞ்சல் அட்டையில் பெற்றோருக்கு கடிதம் எழுதுவதுடன் தங்களின் எண்ணங்களை ஓவியமாக வரைந்து அனுப்பியும் வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு எழுதும் திறன் அதிகரிப்பதுடன், பெற்றோருடன் ஓர் உணர்வுப்பூர்வமான இணைப்பையும் ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து அப்பள்ளியின் தமிழாசிரியை மலர்விழி கூறும்போது, “கடிதம் எழுதும் பழக்கம் மாணவர்களிடையே மொழியின் வரிவடிவத்தை உள்வாங்கிக் கொள்ளும் திறனை அதிகரிக்கவும், எழுதும் வேகத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. உறவுகளையும் நட்புகளையும் வளர்த்துக் கொள்ள உதவியாக இருந்த கடிதம் எழுதும் பழக்கம் தற்போது அழிந்து வருகிறது.
கடிதம் எழுதுவது ஓர் அற்புதமான மொழி வடிவம். பேசும் சொற்களை விட கடிதத்தின் வரிகளுக்கு வீரியம் அதிகம். கடிதம் எழுத்தை சுமந்து செல்லும் காகிதமாக மட்டுமல்லாமல் உறவுகளின் உணர்ச்சிகளை காட்டும் கண்ணாடியாகவும் உள்ளது. அன்புள்ள மகன், மகளுக்கு நலம், நலம் அறிய ஆவல் என தொடங்கும் வரிகளில் உள்ள பாசம் கைப்பேசியில் இன்று சொல்லும் ஒரு ‘ஹலோ’வில் கிடைப்பது இல்லை. அழியாத காலச் சுவடுகளாய்த் திகழ்ந்த கடிதத் தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.
மாணவர்கள் கடிதம் எழுதும் பழக்கத்தால் எழுதுவோருக்கு மொழியுடன் நெருக்கம் ஏற்பட்டு சிந்தனைத் திறமும், மொழி வளமும் மெருகேறுகிறது.
எழுத எழுத கையெழுத்து அழகாகிறது என்பதால் பெற்றோருக்கு அஞ்சல் அட்டையில் கடிதம் எழுத வைக்கிறோம். மாணவர்களின் மழலை கையெழுத்தை சுமந்து வரும் கடிதத்தை திரும்பத் திரும்ப வாசித்து மகிழும் பெற்றோரின் ஆனந்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.