

பெரிய்ய்ய்ய்ய கடல் அது. அபி, சுபி என இரண்டு கடல் ஆமைகள். இருவரும் கருப்பு நிறத்தில் பார்க் கவே அழகாக இருப்பார்கள். எப்போதும் சேர்ந்தே சுற்றுவார்கள்.
சின்னப் பாதங்களை வைத்துக் கொண்டு போட்டி போட்டு நீந்துவார்கள். அவர்களின் அம்மா வெளியே போனதும் விளையாட ஓடிவிடுவார்கள்.
பவளப்பாறையில் இருவரும் கண்ணாமூச்சி விளையாடுவது, குட்டி குட்டி மீன்களை பயமுறுத்துவது, பக்கத்தில் ஆமை பாட்டி தூங்கும் போது கத்தி எழுப்புவது என குறும்பு செய்வார்கள்.
அன்று அபிக்கும், சுபிக்கும் ரொம்பப் பசித்தது. அவர்கள் அம்மா வரும்வரை பசி தாங்க முடியவில்லை.
சாப்பாடு தேடிப் போகும்போது பெரிய சுறா மீனிடம் மாட்டிக்கொண் டால் என்ன செய்வது என்று பயந்தார்கள்.
‘பசிக்குதே. வேறு வழியில்லை' இருவரும் வெளியே கிளம்பினார்கள். தங்கள் இடத்தை விட்டு வெளியே வந்து ஜெல்லிமீன் இருக்கும் இடம் தேடிப் போனார்கள்.
அபிக்கும் சுபிக்கும் நல்ல ஞாபக சக்தி. எந்த வழியில் போனார்களோ அதே வழியில் திரும்பி வரவும் தெரியும். அபி கழுத்தை நீட்டி நீட்டி ஜெல்லி மீன்களைப் பிடித்தது. பற்கள் இல்லாததால் தாடையை வைத்து மென்று சாப்பிட்டது.
அப்போது ஜெல்லிமீன் என நினைத்து பிளாஸ்டிக் பையைத் தெரியாமல் விழுங்கிவிட்டது. தொண் டைக்கு நடுவில் சிக்கிக்கொண்டது.
அபி முழுங்கவும் முடியாமல், துப்ப வும் முடியாமல் திணற ஆரம்பித்தது.
சுபியை கத்தி கூப்பிடவும் முடியவில்லை.
‘அபியை காணோமே' என சுபி தேடி வந்தது. அங்கே திணறிய நிலையில் இருக்கும் அபியைப் பார்த்து பயந்துவிட்டது.
"அச்சச்சோ! இந்நேரம் பார்த்து அம்மாவும் இல்லையே, என்ன செய் வது" என சுபிக்கு அழகை வந்தது.
யாராவது உதவிக்கு வருவார்களா என்று அங்குமிங்கும் ஓடியது. ஒருவரையும் காணோம்.
அப்போது அந்தப் பக்கமாக வந்த குட்டி மீனைப் பார்த்ததும், சுபி பதட்டமாக நடந்ததைச் சொல்லியது.
"அய்யோ. பக்கத்துலதான் டால்பின்அக்கா இருக்காங்க. அவங்கள கூப்பிடலாம்" என குட்டி மீன் சுபிகிட்ட சொல்ல, இரண்டு பேரும் ஓடினார்கள்.
"டால்பின் அக்கா டால்பின் அக்கா. வெளியே வாங்க.. அபிய காப்பாத்துங்க" என குட்டி மீனும், சுபியும் கத்தினார்கள்.
சுபியும், குட்டி மீனும் நடந்ததைச் சொல்ல, டால்பின் அக்காவுக்கு பிரச்சினை புரிந்தது.
அபி இருக்குமிடத்திற்கு மூவரும் நீந்தி வேகமாகப் போனார்கள். அங்கே அபி கண் முழியெல்லாம் பிதுங்கி பவளப்பாறை மேலே மயங்கி கிடந்தது.
டால்பின் அக்கா, அபியை அப்படியே தூக்கி தலைகீழா பிடிச்சி ஒரு குலுக்கு குலுக்கியது. அபி மண்டையில இரண்டு தட்டு தட்டியது.
அபி வாயில் ப்ளாஸ்டிக் லேசாக வெளியே தெரிந்தது. டால்பின் அக்கா உடனே அதைப்பிடித்து உருவியது.
அபி வேகவேகமாக வாயைத் திறந்து திறந்து மூடியது.
அப்போதுதான் அபிக்கு உயிரே வந்தது.
டால்பினுக்கு பல முறை அபியும், சுபியும் நன்றி சொன்னார்கள்.
"மனிதர்கள் கண்ட கண்ட குப்பைய கடல்ல கொட்டுகிறார்கள், சாப்பாடு எது? குப்பை எதுனே தெரியல!" என அபி கண் கலங்கி வருத்தப்பட்டு சொன்னது.
"ஆமா. ஆமைகளான நீங்கள் நூறு வருஷம்கூட உயிரோட இருப்பிங்களாமே. ஆனா இப்போ பிளாஸ்டிக்கால் எல்லாருக்கும் ஆபத்துனுஎங்கம்மாகூட சொல்லிட்டு இருந்தாங்க" என குட்டி மீனும் பரிதாபப்பட்டு பேசியது.
"பேசாம நாம வேற இடத்துக்கு போய்விடலாம். இங்கேயிருந்தா நாம உயிரோட இருக்க முடியாது. இன்றே அம்மாகிட்ட சொல்லி போலாம்" என அபி முடிவாக சொல்லியது.
"அதுதான் சரி" என சுபியும் நினைத்தது. அபியும், சுபியும் குட்டி மீனுக்கு டாடா காட்டிவிட்டு அவர்கள் இடத்துக்கு நீந்திப் போனார்கள்.
கட்டுரையாளர்: ஆசிரியை, அரசுப் பள்ளி, அருப்புக்கோட்டை.