

தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றன. வகுப்பறைகளின் சூழல்களை மாற்றிவிட்ட பெருமிதம் அந்தத் திட்டங்களுக்கு உண்டு.
கரோனாவால் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைக்க எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட திட்டங்களை அரசு செயல் படுத்தி வருகிறது. அதனால் இந்த 2022 - 2023 -ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் குறிப்பாக தொடக்க நடுநிலைப் பள்ளிகளின் 1-3 வகுப்புகள் மிகப் பெரிய அளவிற்கு மாற்றம் பெற்றுள்ளதாகத் தோன்றுகிறது.
வகுப்பறைகள் எத் தகைய மாற்றங்களைப் பெற்றுள்ளன? கள நிலவரம் என்ன? ஆகியவற்றை அறிந்து கொள்வது அவசியம்.
எண்ணும் எழுத்தும் திட்டம் சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது. ஏனென்றால் முதல், இரண்டாம், மூன்றாம் வகுப்பு மாணவர்களை ஒரேஇடத்தில் அமர வைத்து ஒரே வகையான பாடத்தை கற்றுத் தருவது சவால் நிறைந்த பணிதான். ஏற்கெனவே மூன்றாம் வகுப்பு குழந்தைகள் எழுத்துக்களை வாசித்து பாடத்தை சரளமாக படிக்கக்கூடிய சூழலில் அந்த குழந்தைக்கு முதல் வகுப்பு குழந்தையைப் போல எழுத்துக்களைக் கற்றுத் தர வேண்டியுள்ளது.
மூன்றாம் வகுப்பு படிக்கக் கூடிய மாணவனின் மன வயது, அறிவு வயதை ஒன்றாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவனின் மன வயது, அறிவு வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சற்றுகூடுதலாக இருக்கும். ஆகவே அவர்களுக்கு ஆசிரியர்களால் சரியான வகையில் வழிகாட்ட இயலவில்லை. இது, பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி அலுவலர்கள் வரும்போது கட்டாயமாக எண்ணும் எழுத்தும் திட்டத்தைதான் நடத்த வேண்டும் என்று ஆணையிட்டுள்ளனர். இதனால்அந்த வாரத்திற்கான பாடத்தை நடத்த முடியாத நிலை உள்ளது.
பல காரணங்களால் பின்தங்கிய ஒரு மாணவன் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்போது, இந்த வாரத்தில் நடத்த வேண்டிய பாடத்தை ஏன் நடத்தவில்லை என்று கல்வி அலுவலர்கள் கேள்வி கேட்கின்றனர். அதனால் ஆசிரியர்களுக்கு நேர மேலாண்மை மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது.
ஒன்றாம் வகுப்பு பாடமேதான் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும். இதுதான் இங்குள்ள மிகப்பெரிய சிக்கல். உயிர் எழுத்துக்களையே முதல் பருவம் முடியும்போது தான் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர். ஒன்றாம் வகுப்பு மாணவனும் ‘ஆலமரத்துல’ என்று வரும் பாடலைத்தான் பாடுகிறான் மூன்றாம் வகுப்பு மாணவனும் அதையே பாடுகிறான்.
இப்படி நாங்கள் எல்லா குழந்தைகளையும் ஒரே மாதிரி ஒரே அளவில் பார்த்துக் கொண்டிருந்தால், நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களை அடுத்தகட்டத்திற்கு எப்படி கொண்டு செல்ல முடியும்? அதற்கான நேரத்தை எங்களால் அவர்களுக்கு எவ்வாறு ஒதுக்க முடியும்.
நேரமின்மை காரணமாக ஆசிரி யர்களால் பாடப் புத்தகத்தை சரிவர நடத்த இயலவில்லை. பெற்றோர்களோ, பாடப் புத்தகத்தை ஏன் நடத்தவில்லை, அதில் எந்தவித வீட்டு பாடத்தையும் கொடுப்பதில்லையே ஏன் என்று கேள்வி கேட்கின்றனர்.
மகிழ்ச்சியில் மாணவர்கள்
"நாங்கள் எல்லாம் ஒன்றாக உட்கார்ந்து படிக்கிறோம் 1-வது 2-வது 3-வது எல்லாருமே ஒரே பாடத்தைத் தான் படிக்கிறோம். ரொம்ப ஜாலியா இருக்கு. விளையாடிக் கொண்டு இருக்கிறோம்" என்கின்றனர் குழந் தைகள்.
அவர்களுடைய பார்வையில் எண்ணும் எழுத்தும் திட்டம் மகிழ்ச்சி கரமானதாக இருந்தாலும் ஆசிரியர் பார்வையிலும் பெற்றோர் பார்வையிலும் இதன் மீது முழு உடன்பாடு இல்லை என்றே தெரிகிறது.
மேலும் நான்காம் வகுப்பு வரும் போது, மாணவனுடைய பாடப்புத்தகம் பல்வேறு கூறுகளுடன் அதிக சுமையாக அவர்களுக்கு இருந்தால் இந்த திட்டத்தின் நடைமுறைச் சாத்தியம் என்னவென்று ஆய்வு செய்யப்பட வேண்டும்.