அரசு பள்ளிகளில் களைகட்டும் கலை மன்றங்கள்: காலத்துக்கு ஏற்ற மாற்றத்துடன் ஆசிரியர்களின் முன்னெடுப்பு

அரசு பள்ளிகளில் களைகட்டும் கலை மன்றங்கள்: காலத்துக்கு ஏற்ற மாற்றத்துடன் ஆசிரியர்களின் முன்னெடுப்பு
Updated on
2 min read

சென்னை: அரசுப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு, சூழலியல் கல்வி உள்ளிட்ட கல்வி இணைச் செயல்பாடுகள் நடைபெறுவது நல்ல தொடக்கமாகும். காலத்துக்கு ஏற்ற மாறுதல்களுடன் ஆசிரியர்கள் மேற்கண்ட வகுப்புகளை நடத்துவது சிறந்த முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.

அந்தக் காலத்தில் இருந்ததுபோல தற்போது ஆசிரியர்கள் - மாணவர் கள் உறவு இல்லை என்ற குறை பொதுவாக சொல்லப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக் கவே செய்கின்றன. ஆசிரியர்கள்தரப்பிலும் குறை இருக்கிறது. மாணவ, மாணவிகள் தரப்பிலும் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.

அதுவும்கரோனா காலத்தில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் மாணவர்கள் மனநிலையில் பெரிய தடுமாற்றம் ஏற்பட்டு, கற்றலில் பெரும் இடைவெளியும் ஏற்பட்டது.

இந்த இடைவெளியைக் குறைக்கஎண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மாதிரிப் பள்ளிகள் என பல்வேறு திட்டங்களை அரசுசெயல்படுத்தி வருகிறது. அதன்தொடர்ச்சியாகக் கல்வி இணைச்செயல்பாடுகள் (Co-Curricular) மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் (Extra Curricular) சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார்.

புத்துணர்ச்சியூட்டும் மன்றங்கள்

கடந்த காலத்திலும் இலக்கியம், கவின்கலை, சூழலியல், உள்ளிட்டமாணவர் மன்றங்கள் தொடங்கப் பட்டு நடைமுறையில் இருந்தன. ஆனால், அவை முறையாக செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அவற்றைப் புதுப்பித்து சிறப்பாக செயல்பட வழிவகுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, வாரத்தில் 5 நாட்கள் தினமும் 8 பாடவேளைகள் வீதம் 40 பாடவேளைகள் உள்ளன. இதில், தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடவேளைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு நீதிபோதனை வகுப்பு, சூழலியல் கல்வி போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்ததந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே மேற்கண்ட கல்வி இணைச் செயல்பாடுகளுக்கான 8 அல்லது 10 பாடவேளைகளை ஒதுக்கி, அவற்றைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

6 முதல் 10 வரை பயிலும் அனைத்துமாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்பதற்காக இலக்கிய மன்றம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), சுற்றுச்சூழல் மன்றம், வினாடி வினா மன்றம், தொன்மைப் பாதுகாப்பு மன்றம், நுகர்வோர் மன்றம், தகவல் தொழில்நுட்ப மன்றம், பேரிடர் மேலாண்மை மன்றம், வாக்காளர் விழிப்புணர்வு மன்றம், குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு மன்றம், நுண்கலை மன்றம், திரைப்பட மன்றம், சாரண, சாரணியர் இயக்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், இளம் செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம் உள்ளிட்டவை தற்போதைய காலச்சூழலுக்கு ஏற்ப புதுப்பிக்கப்படுகின்றன.

இதுகுறித்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சு. உமா மகேஸ்வரி கூறியதாவது:

வகுப்பு வாரியாக...

கடந்த காலங்களில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் ஓரிடத்தில் அமர வைக்கப்பட்டு மொழிப் பாடங்களுக்கான மன்றம், அறிவியல் மன்றம் போன்றவை நடத்தப்பட்டன. இந்த கல்வியாண்டில் வகுப்பு வாரியாக இந்த செயல்பாடுகள் நடைபெறுகின்றன.

இதற்காக தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் பாடவேளைகள் குறைக்கப்பட்டு, அந்த பாடவேளையில் கல்வி இணை செயல்பாடுகள் நடைபெறுகின்றன. பாடம் நடத்தும்போது அதனுடன் தொடர்புடைய விஷயங் களை மாணவர்களின் படைப்பாற்றல் திறனுடன் வெளிப்படுத்துவதே கல்வி இணைச் செயல்பாடுகள் ஆகும்.

உதாரணத்திற்கு, எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் ‘இயற்கை’ என்ற பாடம் நடத்தும்போது, அதை மாணவர்கள் எந்தளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சிறுகதை, கவிதை, பாடல், படம் வரைதல், கவிதைவாசித்தல், பட்டிமன்றம், நாடகம் நடித்தல் போன்ற படைப்பாற்றல் மூலம் வெளிக்கொணர ஒரு பாடவேளை (40 நிமிடங்கள்) முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

அதுபோல நீதி போதனை வகுப்பில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப பாலியல் துன்புறுத்தலை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு, சரியான தொடுதல், தவறான தொடுதல் குறித்து எடுத்துரைப்பது, போக்குவரத்து விதிகள், பாலியல் ரீதியாகவோ, வேறு வழியிலோ ஆபத்து ஏற்பட்டால் 1098 என்ற அவசர எண்ணை எப்படி பயன்படுத்துவது, போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு என்பன உள்பட குழந்தைகளுக்கு தேவையான வாழ்வியல் திறன்கள் சொல்லித் தரப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in