கதை நேரம்: ஜில் ஜம் ஜில்...

கதை நேரம்: ஜில் ஜம் ஜில்...
Updated on
2 min read

பாபுவுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. குதியாட்டம் போட்டான். பக்கத்து ஊரில் உள்ள தாத்தா வீட்டுக்குப் போகப் போகிறான்.

தாத்தா சொல்லும் கதைகளைக் கேட்கலாம். தாத்தா வீட்டுப் பூனைகளுடன் விளையாடலாம்.

பாபு நன்றாகத் தாளம் போடுவான்.இசை வகுப்பில் சேர்ந்திருந்தான். டாம்பரின் கருவியை தாளத்தோடு இசைப்பான்.

நாளை மறுநாள் அவனுக்கு இசைப் போட்டி. தாத்தா வீட்டில் இருந்தே போட்டி நடக்கும் இடத்திற்குப் போய் விடலாம் என்று கிளம்பிவிட்டான்.

“அய்யா… பாபு…” பேரனைப் பார்த்ததும் தாத்தாவுக்கும் மகிழ்ச்சி.

டாம்பரினை அலமாரியில் பத்திர மாய் வைத்தான் பாபு. காலையில் தாத்தாவிடம் இசைக்கருவியை வாசித்துக் காட்ட நினைத்தான். சாப்பிட்ட பின்பு அப்படியே தூங்கிப் போனான்.

காலையில் எழுந்த பாபுவுக்கு அதிர்ச்சி. "ஓ..' வென்று கத்தி அழுதான். தாத்தா பதறிப்போய் ஓடி வந்தார்.

டாம்பரின் இசைக்கருவி துண்டு துண்டாக உடைந்து கிடந்தது. வருத்தம் தாங்கவில்லை அவனுக்கு.

“அய்யோ… இப்படி உடைஞ்சு போச்சே…” பாபு அழுதான்.

"அழாதே பாபு. பூனை தட்டிவிட்டி ருக்கும்.” என்று தாத்தா சொன்னார்.

“போங்க தாத்தா. உங்களுக்கு என்ன தெரியும். ஐயோ… நாளை போட்டிக்கு எப்படிப் போவேன்” என்று மீண்டும் அழுதான்.

விறுவிறுவென்று நடந்தான் பாபு. தூரத்தில் இருந்த மாமரத்தின் அடி யில் போய் உட்கார்ந்து கொண்டான்.

நேரம் போனது.

தாத்தா கடைத்தெருவுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்.பாபு இதைப் பார்த்தான். அவனுக்கு வருத்தம் குறையவில்லை.

கொஞ்ச நேரத்தில்

"ஜில் ஜில்… "ஜம் ஜம்…"

மெல்லிய சத்தம் வந்தது.

‘சத்தம் எங்கிருந்து வருது?’

பாபு யோசித்தான்.

மீண்டும் ஜில் ஜில்… ஜம் ஜம்…

வீட்டைப் பார்த்து நடந்தான்.

ஜில் ஜில்… ஜம் ஜம்… சத்தம் தாத்தா வீட்டில் இருந்து வந்தது.

ஜில் ஜில்… ஜம் ஜம்…

வேகமாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தான். ஆச்சரியம். தாத்தாவின் கையில் டாம்பரின். அதை மறுகையில் தட்டுகிறார்.

ஜில் ஜில்… ஜம் ஜம்…

இனிமையான சத்தம்.

"தாத்தா…” சந்தோசமாக கத்திக் கொண்டே வீட்டுக்குள் வந்தான் பாபு.

“உடைந்ததை ஓட்டியாச்சா? இல்லை புதுசா? எப்போ வாங்கி னீங்க? டாம்பரின் புதுசா இருக்கே. எப்படி தாத்தா… எப்படி?” பாபுவுக்கு சந்தோசம் தாங்கவில்லை. அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டான்.

தாத்தா சொன்னார். “சிறிய மரக்கட்டை ஒன்றை எடுத்தேன். அதை வட்டமாகச் செதுக்கினேன். அதில் துளை போட்டேன். கடைகளில் கேட்டு குளிர்பான மூடிகள் சேகரித்தேன். அதைக் கம்பியில் கோர்த்தேன். செதுக்கிய வட்டமான மரத் துண்டில் இணைத்தேன். புது டாம்பரின் ரெடி. நல்லாயிருக்கா…”

“ஐ…! புது டாம்பரின்.” பாபு குதியாகக் குதித்தான். அதை வாங்கிக் கொண்டான். டாம்பரினை கையில் தட்டினான். தலையாட்டிக் கொண்டே தட்டினான்.

ஜில் ஜில்… ஜம் ஜம்…

இனிமையான சத்தம்.

மறுநாள் இசைப் போட்டி.

பாபு குதுகலமாய் கிளம்பினான்.

ஜில் ஜில்… ஜம் ஜம்…

ரா.ராணிகுணசீலி

பட்டதாரி ஆசிரியர்,

அரசு மேல்நிலைப் பள்ளி,

த, அய்யங்கோட்டை,மதுரை.

தொடர்பு எண்: 8778073591

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in