Last Updated : 25 Jul, 2022 06:02 AM

 

Published : 25 Jul 2022 06:02 AM
Last Updated : 25 Jul 2022 06:02 AM

கள்ளக்குறிச்சி பள்ளி பாதுகாப்பு குறைபாடுகள் எதிரொலி: தனியார் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பள்ளியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அனைத்து தனியார் பள்ளிகளின் கட்டிடங்கள், விடுதிகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின்கீழ் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 60 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்தும் பணியில் சுமார் 4 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு செயல்படும் தனியார் பள்ளிகள் தங்கள் வளாகத்தில் உள்ள வகுப்பறை, ஆய்வகம், விடுதிகள் உள்ளிட்ட அனைத்துவித கட்டிடங்களுக்கும் வருவாய், பொதுப்பணி, சுகாதாரம் மற்றும் தீயணைப்புத் துறைகளில் முறையாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பலபள்ளிகள் முறையாகப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

பாதுகாப்பு குறைபாடுகள்

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி மதி உயிரிழந்த விவகாரத்தில் கடந்த ஜூலை 17-ம் தேதிபள்ளிக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது.

அப்போது பள்ளி வளாகங்களில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா இல்லாமை, விடுதிக்கு முறையான அங்கீகாரம் பெறாதது என்பன உள்ளிட்ட பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பெரும்பாலான பள்ளிகள் கட்டிடங்களுக்கு உரிய அங்கீகாரமின்றி செயல்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து மாநிலம் முழுவதும்உள்ள தனியார் பள்ளி வளாகங்களில் இயங்கும் கட்டிடங்கள் மற்றும் விடுதிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விடுதிக்கான நிபந்தனைகள்

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தனியார் பள்ளிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தின்படி பள்ளி வகுப்பறை கட்டிடத்தில் தங்கும் அறைகள் இருக்கக்கூடாது. ஆனால், கள்ளக்குறிச்சி பள்ளியில் வகுப்பறை கட்டிடத்திலேயே, விடுதி செயல்பட்டு உள்ளது.

அடுத்ததாக, பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டதன்படி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மாணவி மதி தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நேரம் முடிந்த பிறகு பள்ளி வளாகத்தின் மொட்டை மாடி கதவுகள் அடைக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், இந்த பள்ளியின் மொட்டை மாடிக்கு செல்லும் வழி, அடைக்கப்படாமல் திறந்து இருந்ததும் தெரிய வந்துள்ளது.

அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்ட கட்டிடங்களில் மட்டுமே விடுதிகள் அமைக்க வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய பாதுகாப்பு மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இருக்க வேண்டும்.

ஒரு விடுதியில் 50-க்கு மேற்பட்டோர் இருக்கும்பட்சத்தில் நுழைவு வாயில்கள் மற்றும் வளாகத்தின் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமரா, டிவிஆர் (வீடியோ ரெக்கார்டர்) பொருத்தப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நுழைவு வாயில்கள் இருந்தால் அனைத்திலும் பாதுகாப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

50 குழந்தைகளுக்கு ஒரு விடுதிக் காப்பாளர் பொறுப்பாளராக நியமிக்கப்பட வேண்டும். விடுதிகளில் தங்கும் நபர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி தேவைக்கேற்ப 24 மணி நேரமும் பணியில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

கட்டிடத்தின் மாடிப்பகுதிகள், கழிப்பறை தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள் போன்ற இடங்களுக்கு மாணவர்கள் செல்லாமல் கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆனால், இவற்றை பெரும்பாலான பள்ளிகள் பின்பற்றுவதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க, அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டிடங்கள், விடுதிகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி ஆய்வின்போது, கட்டிடங்கள் உறுதித்தன்மை, அங்கீகாரச் சான்று, தீ தடுப்பு, காற்றோட்டம், முதலுதவி அம்சங்கள், ஆய்வகம், உணவகம் உள்ளிட்டவற்றில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து அறிக்கையை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் மீது ஏதேனும் புகார்கள் நிலுவையில் இருப்பின் அவற்றின் தற்போதைய நிலையை சேகரிக்க வேண்டும். அதில் அரசியல் பின்புலம் இருந்தால் அதுகுறித்து தனியாக அறிக்கையில் குறிப்பிட வேண்டும். பள்ளிகள் குறைகளை சரிசெய்ய கால அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x