இல்லம் தேடி கல்வி மூலம் இனிக்கிறது படிப்பு! - மாணவர், பெற்றோரின் கவனத்தை ஈர்க்கும் தன்னார்வலர்களின் ஈடுபாடு

நசீமா
நசீமா
Updated on
2 min read

சென்னை: இல்லம் தேடி கல்வித் திட்ட மையத்தில் வித்தியாசமான சூழலில் மகிழ்ச்சியாக மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்று தன்னார்வலர்கள் பெருமிதத்துடன் கூறுகிறார்கள். தன்னார்வலர் மையத்திற்கு வரும்போது வரவேற்பு பாடல் பாடுவதும், படித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் போது விடைபெறும் பாடல் பாடுவதும் புதிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு களால் பள்ளிகள் இயங்காமல் இருந்தன. அதனால் பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்ட துடன் கற்றல் இடைவெளியும் ஏற்பட்டது.

இதை சரிசெய்ய தமிழக பள்ளிக் கல்வித் துறை "இல்லம் தேடிக் கல்வித் திட்டம்" கொண்டு வந்தது. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம்,மரக்காணம் வட்டம், முதலியார்குப் பத்தில் கடந்தாண்டு அக்.27-ல் தொடங்கிவைத்தார்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 2 லட்சம் தன்னார்வலர்கள் 34 லட்சம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பிக்கின்றனர். முதலில் 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இத்திட்டம் பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

வாசிப்புப் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்கும் நோக்கில் ஆயிரம் இல்லம் தேடிக் கல்வி மைய நூலகங்களும் தொடங்கப்பட்டன. இத்திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக 2022-23 நிதியாண்டில் மேலும் 6 மாதங்களுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிவரும் தன்னார்வலர்களில் ஒருவரான காஞ்சிபுரம் மாவட்டம், சின்னகாஞ்சிபுரம் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பணிபுரியும் ச.நசிமா கூறியதாவது:

நான் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்து வருகிறேன். இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டி கையேடுகளை படித்து விட்டு வந்து மையத்தில் பாடம் நடத்தும்போது எனக்கும் எளிதாக இருக்கிறது. குழந்தைகளும் உற்சாகமாக கல்வி கற்கின்றனர். என்னிடம் சேஷாத்திரிபாளையம் தெரு, யாகசாலை மண்டபம் தெரு, சுண்ணாம் புக்காரத் தெரு, மலையாள தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 23 பேர் படிக்கின்றனர்.

பள்ளி வேளை முடிந்து சோர்வாக வீடு திரும்பும் மாணவர்கள் மீண்டும் மையத்திற்கு வந்து படிப்பதென்றால் அலுத்துக் கொள்ளத்தான் செய்வார்கள். ஆகையால் அவர்களை எப்படி உற்சாகப்படுத்தலாம் என்பதை தான் முதலில் யோசித்தேன். நான் மையத்திற்கு வந்ததும் வரவேற்பு பாடல் பாடுவது என்று தீர்மானித்தோம்.

‘‘வணக்கம் சொல்வேனே.. மகிழ்வாய் நானும் வந்தேனே...பாட்டும், கதை யும் சொல்வேனே...” என்ற 6 வரிப் பாடலை உற்சாகமாகப் பாடி மாணவர்கள் வரவேற்பார்கள். இது எனக்கும் மாணவர்களுக்கும் சோர்வை களைந்து உற்சாகம் பெறுவதற்கான வழியாக மாறியது. அதுபோல வகுப்பு முடிந்து வீட்டுக்குப் போகும்போது, விடைபெறும் பாடலையும் பாடி வருகிறோம்.

மாணவர்களுக்கு மரங்கள், பறவைகள் பிடிக்கும். அதனால், ‘‘ஆத்தோரம் கரையினிலே, ஆலமரம் இருந்துச்சாம், காத்தாடி பறந்து வர, காக்கை எல்லாம் பறந்துச்சாம்...” என்ற பாடலைப் பாடிக் காட்டிவிட்டி, இதில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது என்று கேட்பேன்.

எதனால் பறவைகள் பறந்து சென்றன என்றுகேட்பேன். அதற்கு, பட்டம் பறந்துவந்ததால் பறவைகள் பறந்து சென்றனஎன்று மாணவர்கள் சொல்வார்கள். ஒரு பறவை மட்டும் ஏன் கிளையிலேயே இருந்தது என்று கேட்டுவிட்டு, அதைப் போல தைரியமாக இருக்க வேண்டும் என்று தைரியத்தின் அவசியத்தை எடுத்துச் சொல்வேன்.

இவ்வாறு பாடல், கதை என்று சொல்லித் தரும்போதெல்லாம் நிறைய வண்ண வண்ண படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக என்னை மாணவர்கள் அக்கா என அழைப்ப தும், நானும் அவர்களை தம்பி, தங்கைகளாகப் பாவித்து சொல்லித் தருவதும் புதிய அனுபவம்தான் என்கிறார் நசிமா.

பெரும்பாலான தன்னார்வலர்கள் முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்பிப்பது அவர்களுக்கு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கும் புதிய அனுபவம்தான். அரசின் இந்த புதிய முன்னெடுப்பை பெற்றோரும் வரவேற்கத் தொடங்கி யுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in