

வசந்தி ஆறாவது படிக்கிறாள். சாயந்தரமானால் முனீஸ் அக்கா வீட்டிற்கு படிக்கப் போவாள். போகிற வழியில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. நூறு வருட மரம். 5 மணியானால் ஊர்ப் பறவைகள் எல்லாம் அந்த மரத்திற்கு வந்துவிடும்.
இருட்டும் வரை ஒரே சத்தமாக இருக்கும். சத்தம் என்றால் சின்ன சத்தமில்லை. நூற்றுக்கணக்கான பறவைகளின் சத்தம். பெருஞ்சத்தம்.
யாரும் செல்போனில் பேசிக் கொண்டு போனால் அந்த ஆலமரத்தை கடக்கும் வரை பேச முடியாது. மரத்தடியில் கனிந்த ஆலம் பழங்களும், பறவைகளின் எச்சமும் ஈரமாகக் கிடக்கும்.
அம்மரத்தைக் கடந்து போக வேகமாக நடக்கனும். இல்லாவிட்டால் தலையில், சட்டையில் தொப்பென விழுந்துவிடும். பிசுபிசுவென அப்பிக் கொள்ளும். இப்படி விழுந்தால் ‘ராசி' என அம்மாச்சி சொன்னதை முதலில் நம்பினாள்.
தாத்தாவிடம் கேட்டபோது, ‘அப்படி யெல்லாம் ஒன்றுமில்லை' என்றார்.
வசந்தி நடந்து வருகிறாள். மரத்தை நெருங்கி வந்துவிட்டாள்.
கீச் கீச் கீச்..என சத்தம்.
நெருங்க நெருங்க பெருஞ்சத்தம்.
எல்லாரும் வேகமாக நடப்பார்கள். வசந்தி மெல்ல நடந்தாள்.
மரத்தைக் கடந்ததும் நின்று திரும்பிப் பார்த்தாள். பிரம்மாண்டமாய் இருந்தது.
ஒவ்வொரு முறையும் மரத்தை கடக்கும் போதும் ஆச்சரியப்படுவாள். நிறைய சந்தேகம் வரும். முனீஸ் அக்காவிடம் கேட்டுப் பார்ப்பாள்.
‘‘அந்த மரத்தில் கூடு இருக் குமா? அக்கா. இல்லாவிட்டால் கிளைகளுக்குள்ளேயே தங்குமா’’?
‘‘ஆமா'' ஒரே பதிலைச் சொன்னார்
‘‘மரத்துக்கு நேரே கீழே நின்று பார்த்தால் வானமே தெரியவில்லை? ஒரே இருட்டு. அதுக்கெல்லாம் பயமாகவே இருக்காதா?''
"அதென்ன நம்மள மாதிரியா? அதெல்லாம் பயப்படாது."
"ஏய் சும்மா சும்மா தொண தொணன்னுட்டு. பேசாமல் படி." என்று கடிந்தார்.
‘லீவுக்கு தாத்தா வரும் போது கேட்டுக் கொள்கிறேன்' வசந்தி நினைத்துக் கொண்டாள்”
தாத்தாவிடம் போன் இல்லை. இருந்தால் கேட்டிருப்பாள். டியூசன் விட்டு வரும்போது இருட்டிவிட்டது. ஆலமரத்தில் பறவைச் சத்தம் இல்லை. இப்போ பூச்சி சத்தம்..
"கொய்ங்ங்ங்...."
மரத்தைக் கடக்கும் போதெல்லாம் புதிது புதியதாய் கேள்விகள் வந்து கொண்டே இருந்தன.
வீட்டுக்கு வந்ததும், வசந்தி ரஃப் நோட்டை எடுத்தாள்.
ஏற்கனவே சில கேள்விகளை எழுதி வைத்திருக்கிறாள். இப்போதும் எழுதினாள்.
l பூச்சி பறவைகளைக் கடிக்காதா?
l எப்படி பூச்சிகளும், பறவைகளும் ஒரே மரத்தில் இருக்கின்றன.?
l பறவைகள் பூச்சிகளைத் தின்று விடாதா?
l மழை பெய்தால் பறவைகள் எங்கே போகும்.?
l நனைந்து கொண்டே நிற்குமா?
l பறவைகளுக்கு சளிப்பிடிக்குமா?
l குட்டிப் பறவைக்கு காய்ச்சல் வந்தால், அம்மா பறவை என்ன மருந்து தரும்?
l தூங்கும் போது குட்டிப் பறவைகள் கீழே விழுந்துவிடாதா?
l கோடை விடுமுறையில் இந்த பறவையெல்லாம் எங்கே போகும்.?
l பூச்சி மட்டும் ஏன் தாமதமாக வருகிறது? அதுதானே சின்னது. அது தானே சீக்கிரம் வரணும்.
l நமக்கு பறவை சத்தம் பலமாக கேட்பது மாதிரி அவைகளுக்கும் நம்ம சத்தம் கேட்குமா?
l கல்யாணம் வைத்தால் அந்த மரத் திலேயே ஸ்பீக்கர் கட்டுகிறார்களே. பறவைகள் பாவமில்லையா? எப்படி காதை மூடும்.? அதுக்குத்தான் கையில்லையே!
எழுதி எழுதி வைத்தாள்.
‘தாத்தா வரும் வரை ஒவ்வொரு நாளும் கேள்விகளை எழுதி வைக்க வேண்டும்' என நினைத்துக் கொண்டாள்.
மறுநாள்…
5 மணி. ஆலமரத்தை கடந்து போனாள்.
இன்னொரு கேள்வி தோன்றியது...
என்னவாக இருக்கும்?
கட்டுரையாளர்: ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, விக்கிரமங்கலம், அரியலூர் மாவட்டம்.