

திருப்பூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்து, குரூப் 1 தேர்வில் பழங்குடியின பிரிவில் திருப்பத்தூர் மாணவர் செந்தில்குமார் முதலிடம் பெற்றார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) அறிவிக்கப்பட்ட துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு துணை பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் 66 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வின் முடிவுகள் கடந்த 15-ம்தேதி வெளியிடப்பட்டன.
இதில், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் இலவச பயிற்சி வகுப்பில் பயின்ற மாணவர் செந்தில்குமார், பழங்குடியினர் பிரிவுக்கான இன சுழற்சி அடிப்படையில், மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று துணை ஆட்சியர் பணிக்கு நியமனம் செய்யப்பட உள்ளார்.
இதுதொடர்பாக, செந்தில்குமார் கூறும்போது, “எனது ஊர் திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை மேல்பட்டு கிராமம். தந்தை அய்யன்பெருமாள், தாயார் சின்னமயில். பி.இ., மெக்கானிக்கல் படித்தேன்.
கடந்த 5 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கியிருந்து, ஏற்றுமதி காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். இதற்கிடையே போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்று வந்தேன். கடந்த ஓராண்டாக திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்ட இலவச பயிற்சி வகுப்பில் படித்து குரூப் 1 தேர்ச்சி பெற்றேன். ஒருமுறை குரூப்-1 தேர்வெழுதி, நேர்முகத் தேர்வு வரை சென்றேன். தற்போது 2-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன்” என்றார்.
அவருக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் பாராட்டு தெரிவித்து நினைவுப்பரிசு வழங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் மற்றும் ஊழியர்களும் அவரை பாராட்டினர்.
தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் மாணவர்கள் குரூப் 1 தேர்வுக்கு தயாராக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்ட இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம். வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.