

சென்னை: பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டுக்காக "கிரியேட்டிவ் ரைட்டர்ஸ் குரூப்" என்ற வாட்ஸ் அப் குழுவை தொடங்கி நடத்தி வருகிறார் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியை பிருந்தா. அவரது இந்த புதிய முயற்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, மேல்பட்டாம்பாக்கம் அரசுஉயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியை டி.பிருந்தா ஆங்கிலத்தில் கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், 1994-ம்ஆண்டு முதல் கவிதை எழுதி வருகிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். கவிதை, சிறுகதை எழுத ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
நாள்தோறும் ஒரு தலைப்பு
இந்நிலையில், கரோனா உச்ச கட்டத்தில் இருந்த 2020-ம் ஆண்டில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. ஆசிரியர்-மாணவர்களுக்கு இடையில் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் செல்போன் மூலம் மாற்று வழி காணலாமே எனத் தோன்றியது.
மாணவர்கள், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த எண்ணி, "கிரியேட்டிவ் ரைட்டர்ஸ் குரூப்" எனும் வாட்ஸ்அப் குழுவை 2020 மே 22-ல் தொடங்கினார். இதில், அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மட்டுமல்லாது மெட்ரிகுலேசன் உள்ளிட்ட தனியார் பள்ளி மாண வர்கள், ஆசிரியர்களையும் சேர்த்தார்.
தினமும் ஒரு தலைப்பு தரப்படுகிறது. காமராஜர் பிறந்த தினம், நேரு பிறந்த தினம் என தலைசிறந்த தலைவர்களின் பிறந்தநாள் தொடங்கிநாட்டுப்பற்று, வாழ்க்கை தொடர்பான பொதுவான தகவல், மரங்கள், பறவை கள், மாசுபடுதல், குடிநீர், காற்று, ஒழுக்கம், ஒற்றுமை என்பன போன்ற தலைப்புகள் வழங்கப்படுகின்றன.
நாள்தோறும் இரவு 7 முதல் 10 மணி வரை மட்டுமே இந்த குரூப்பில் பதிவிட முடியும். அன்றாட தலைப்பு பற்றி மட்டும் தங்களது உள்ளத்தில் எழும் எண்ணங்களை கவிதையாகவோ அல்லது சிறு கதையாகவோ பதிவிடலாம்.
86 விருதுகள், 100 கவிதைகள்
இதுகுறித்து ஆசிரியை பிருந்தா நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது: தொடக்கத்தில் 25 உறுப்பினர்கள் இருந்த "கிரியேட்டிவ் ரைட்டர்ஸ் குரூப்பில்" இப்போது 261 பேர் இருக்கின்றனர். இதில் மாணவர்கள் மட்டும் 40 பேர். குரூப்பில் தினமும் 50 பதிவுகள் வரை வருகின்றன. பலரும் படத்துடன் பதிவிடுவது உண்டு. இவை அனைத்தையும் மறுநாளே எங்களது யூடியூப்பில் பிடிஎப் வடிவத்தில் பதிவேற்றம் செய்து விடுவோம்.
மாதத்தில் 20 நாட்கள் தொடர்ந்து பதிவிடுவோருக்கு சான்றிதழ் வழங் கப்படும். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பதிவிடலாம். 5 சான்றிதழ் வாங்கிவிட்டால் எங்களது விருது பெற தகுதியானவர் ஆகிவிடுவார். இதுவரை 86 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து4 மாதங்கள் குரூப்பில் பதிவிட்டவர்கள் சுமார் 100 கவிதைகள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டி ருக்கிறார்கள்.
ஒருவரை இந்த குரூப்பில் சேர்க் கும்போதே அவரை வரவேற்று அனுப்பும் செய்தியில் குரூப்பில் பதிவிடுவதற்கான நிபந்தனைகள் தெரிவிக்கப்படும். அதை அவர்கள் தவறாமல் பின்பற்றுவதை கண்காணிக்க தனியாக நபர்கள் உள்ளனர். கடந்தாண்டு ஒரு நாள் "ராணுவ வீரர்களின் நாட்டுப்பற்று" என்கிற தலைப்பு கொடுத்தேன். அதற்கு பலரும் அருமையான பதிவு களை படங்களுடன் பதிவிட்டனர்.
அவற்றை பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் எனது தோழி பிரதீபா மூலம் ராணுவ வீரர்களுக்கு கொண்டு போய் சேர்த்தோம். அங்கு பல்வேறு மொழிகள் பேசுபவர்கள் இருந்தாலும் ஆங்கிலப் பதிவு என்பதால் பலரும் படித்து மகிழ்ந்தனர். படித்து அறிய முடியாதவர்கள் படங்களைப் பார்த்து சந்தோஷப்பட்டனர். இது ஒரு மறக்க முடியாத நிகழ்வாகும்.
‘‘கிரியேட்டிவ் ரைட்டர்ஸ் குரூப்பை" தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளுக்காக பிரத்யேக இதழ் தொடங்க திட்டமிட்டு, அதற்கான வேலையில் ஈடுபட்டுள் ளேன் என்றார் ஆசிரியை பிருந்தா.
ஏகப்பட்ட வாட்ஸ் அப் குரூப்கள் இருந்தாலும் அவற்றில் எத்தனை பயனுள்ளதாக செயல்படுகின்றன என்பது கேள்விக்குறியே. இதற்கிடை யில் இந்த வாட்ஸ் அப் குரூப் கவிதை, சிறுகதை எழுத ஆர்வமுள்ள பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்பாற்றலை மெருகேற்றும் களமாக விளங்குகிறது.