

பள்ளி வகுப்பறைகளில் கற்றல் கற்பித்தல் என்கின்ற பணியைத் தாண்டி, பள்ளிச் சூழல், எதிர்கால சமுதாயத்தில் மாணவர்கள் ஓர் நல்ல குடிமகனாக மட்டுமின்றி தலைவராக, பேச்சாளராக, கலைஞராக, சிந்தனையாளராக, ஆய்வாளராக, விஞ்ஞானியாக, எழுத்தாளராக வலம் வர பள்ளிகளில் செயல்படும் பல்வேறு மன்றங்கள் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
"நான் அல்ல நீ; எனக்கு அல்ல உனக்காக" என்ற சுலோகத்தை கொண்ட நாட்டு நலப்பணி திட்டத் தில் (NSS) மேல்நிலைக் கல்வி படிக்கும்போது உறுப்பினராக இருந்து சேவை செய்தது, முகாமில் கலந்து கொண்டது இன்றும் பசுமையாக மனதில் இருக்கிறது. சமூக சேவை மூலம் ஆளுமை வளர்கிறது.
1969 செப்டம்பர் 24- ல் தொடங்கப்பட்ட நாட்டு நல பணித்திட்ட லோகவாக இருப்பது ஒடிசாவில் உள்ள கோனார்க் சூரியனார் கோயிலில் உள்ள தேர் சக்கரம் தான் என்பது பின்னாளில் தான் எங்களுக்கு தெரிந்தது.
நாட்டு நலப்பணித் திட்டத்தில் சேர்ந்து சான்றிதழ் பெற்றுவிட்டால் மேல்படிப்பு, வேலை வாய்ப்பில் இதற்கு கூடுதல் மதிப்பெண் உண்டு என்ற ஒரு வரி செய்தி மட்டும் தான் எங்கள் மனதில் பதிந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக தேசிய மாணவர் படை (என்சிசி) இவை மட்டுமே பள்ளிகளில் பிரதானமாக இருந்து வந்தது ஒரு காலம்.
கல்வி இணை செயல்பாடுகள்
இன்று அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் முறைகளில் பல்வேறு விதமான அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அத்துடன் கல்வி இணை செயல்பாடு கள், பாட இணை செயல்பாடுகள் மாணவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து மெருகேற்றுகிறது.
நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, தேசிய பசுமை படை, சுற்றுச்சூழல், இளம் செஞ்சிலுவை சங்கம், வினாடி- வினாமன்றம், தொன்மை பாதுகாப்பு மன்றம் உள்பட ஏராளமான மன்றங்கள் உண்டு.
நம் வீட்டு குழந்தைகள் பள்ளி களில் செயல்படும் பல்வேறு மன்றங்களில் எந்தெந்த மன்றங்களில் உறுப்பினராக சேர்ந்து என்ன செய்து வருகின்றனர்? என்பதை பெற்றோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு மன்றத்தில் சேர்ந்து தனித்திறமை, சமூகப் பணிகளில் குழந்தைகள் ஈடுபடுவதை பெற்றோர் ஊக்குவித்து கண்காணிக்க வேண்டும். அதன் மூலம் கிடைக்கக்கூடிய சான்றிதழ்கள் எதிர்காலத்திற்கு உதவும்.
அடுத்தவருக்கு உதவுவது, தொன்மையானவற்றை பாதுகாப்பது, வரலாற்று சின்னங்களை மதிப்பது, யுனெஸ்கோ, புவிசார் குறியீடு குறித்த விழிப்புணர்வு, சமூக நீதி, மக்கள் தொகை பெருக்கம், குடும்ப கட்டுப்பாடு, பாலின சமத்துவம், சிக்கனம், சேமிப்பு நிதி, கலப்படங்கள், பொருள் வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,
பேரிடர் காலத்தில் நாம் நம்மை எப்படி காத்துக் கொள்ள வேண்டும்? வாக்களிப்பதன் முக்கி யத்துவம், மின்னணு சாதனங்களை கையாள் வதில் பயிற்சி, பாடநூல் தாண்டிய நாளிதழ் உள்ளிட்ட பரந்த வாசிப்புஎன்பன போன்ற நல்லபல அம்சங்கள் மாணவர்களிடம் வளர உதவியாக அடித்தளமாக இருப்பது தான் பள்ளி மன்றங்கள்.
போதிய ஆசிரியர்கள் இல்லை
போதுமான ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில், குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பல்வேறு மன்றங்களின் செயல்பாடுகள் என்பது மிகுந்த சுணக்கமாகவும் முடங்கிப் போயும் தான் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.
மாணவர்களின் விருப்பம் தனித் திறமையை கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் மன்றங்களில் அவர்களை இணைத்து விட்டால் அவர்களின் திறமை வெளியுலகிற்கு தெரியவரும்.
தீய வழியில் இருந்துமடைமாற்றம் செய்யப்படு வார்கள். செல்போன் விளையாட்டில் இருந்து விடுபட்டு மைதானத்தில் விளையாட தொடங்கு வார்கள். ஓய்வு நேரத்தை பயனுள்ள வழியில் செலவிடுவார்கள். கூடா நட்பை விட்டொழிப்பார்கள்.
பள்ளிகளில் செயல்படும் மன்றங்கள் மிக சிறப்பாக, முன்மாதிரியாக செயல்பட தலைமை ஆசிரியர், மன்ற பொறுப்பாசிரியர், மாணவர்கள், பெற்றோர் இணைந்தால் ஒவ்வொரு மன்றமும் மணம் வீசும். மாற்றங்கள் ஏற்படும்.
நாளைய தலைவர்கள் பள்ளி மன்றங்களிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள்.
கட்டுரையாளர்: ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அய்யம்பாளையம்.
ஆத்தூர். ஒன்றியம்.
திண்டுக்கல் மாவட்டம்