

சென்னை: அரசுப் பள்ளிகளில் தமிழ் இலக்கிய மன்றம் அதற்கான நோக்கத்தை நிறைவேற்றுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல பள்ளிகள் இலக்கிய மன்றத்தின் இலக்கை எட்டியிருப்பது தனிச்சிறப்பு.
தமிழ் இலக்கியத்தை வளர்க்கவும், மாணவ, மாணவிகளிடம் உள்ள திறமையை வெளிக் கொண்டு வருவதற்காகவும் அரசுப் பள்ளிகளில் தமிழ் இலக்கிய மன்றம் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது.
இதில், பேச்சுப் போட்டி, கவிதை, கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம், தனி நடிப்பு, கதை எழுதுதல், கதை சொல்லுதல் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
வாரத்தில் ஒரு நாள் ஒரு வகுப்பு நேரத்தில் (45 நிமிடம்) தமிழ் இலக்கிய மன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதில், நாடகம் 10 நிமிடம், பேச்சுப் போட்டிக்கு 10 நிமிடம், கவிதை வாசிக்க 10 நிமிடம், கட்டுரை எழுத 10 நிமிடம் என நேரம் ஒதுக்கி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இலக்கிய மன்றம் தொடங்கப்பட்ட தன் நோக்கத்தை பெரும்பாலான அரசுப் பள்ளிகள் நிறைவேற்றுகின்றனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பல பள்ளிகளில் இலக்கிய மன்றக் கூட்டம் நடத்திவிட்டதாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தகவல் மட்டும் தெரிவிக்கின்றனர். அவ்வளவுதான். அதேநேரத்தில் சில பள்ளிகளில் இலக்கிய மன்றக் கூட்டம் வெகு சிறப்பாக நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சுமார் 4,500 மாணவி கள் பயிலும் சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை ப.காஞ்சனா கூறியதாவது:
வாரந்தோறும் இலக்கிய மன்றக் கூட்டத்தை தொடர்ச்சியாக நடத்து வதால் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று எங்கள் பள்ளி மாணவிகள் பல பரிசுகளைப் பெற்றுள்ளனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலேயா பல்கலைக்கழகமும், சென்னை தி.நகரில் உள்ள அனுராகம் பதிப் பகமும் இணைந்து நடத்திய போட்டியில் எங்கள் பள்ளி மாணவிகள் 2-ம் பரிசு பெற்றனர்.
நானும், “தமிழ் கற்பித்தலில் உள்ள சிக்கல்களும், தீர்வுகளும்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று 2-ம் பரிசு பெற்றேன்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரியில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் எங்கள் பள்ளி மாணவியர் நடனம், பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் 2-வது பரிசுகள் வென்றனர். ஆண்டுக்கு குறைந்தபட்சம் 250 முதல் 500 மாணவிகள் வரை பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாணவர்களின் திறனை வளர்க்க அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் "தனித்திறன் மாணவர்கள்" என்ற தலைப்பில் வாட்ஸ் அப் குழுவைத்திருக்கிறோம். 300 பேர் வரைஉள்ள இந்த குழுவில் எங்கள் பள்ளியில் படித்து முடித்து கல் லூரிக்கு சென்ற மாணவிகளும் இருக்கிறார்கள் என்கிறார் ஆசிரியை காஞ்சனா.
இதுபோல தங்கள் பள்ளிகளிலும் இலக்கிய மன்றக் கூட்டம் நடை பெறுகிறதா என்பதை அந்தந்த பள்ளிகள் சுயபரிசோதனை செய்து கொண்டு, இலக்கிய மன்றத்தின் இலக்கை எட்டுவதற்கு முயற்சிக்கும் என நம்புவோம்.