

சென்னை: சந்தோஷத்திலே மிகப்பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான் என்று சொல்வார்கள்.
வண்ண வண்ண சுவர் ஓவியங்களால் மக்களை மகிழ்விக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் தூரிகை தாரகை கெளசிகா ராஜேந்திரன் (28).
இன்றைய இளைஞர்கள், இளம் பெண்களின் எண்ணத்தில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டு காணப்படுகிறார் கெளசிகா.
தந்தை ராஜேந்திரனுக்கு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு கிராமம்தான் சொந்த ஊர். கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் பூமாவதி சொந்தஊர் தென்காசி மாவட்டம், புளியங்குடி. அவர் ஒரு எழுத்தாளர். ஒரே தம்பி சாய் கவுதம். கெளசிகா பள்ளிப்படிப்பை மதுரையிலும், கல்லூரி படிப்பை சென்னையிலும் முடித்தார். இயற்பியில் எம்.எஸ்.சி., எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். இப்படியாக சென்ற இவரது வாழ்க்கையில் சுவர் ஓவியம் தீட்டும் ஆர்வம் எப்படி வந்தது?
ஓவியம் மூலம் சுத்தப்படுத்தலாம்!
சிறு வயதில் இருந்தே கெளசிகாவுக்கு ஓவியத்தின் மீது அலாதி பிரியம். அதை அறிந்து கொண்ட அப்பாவும் அவருக்கு ஊக்கம் கொடுத்தார். இதுவே தனது வாழ்க்கைப் பணியாக மாறும் என்று அவர் அப்போது நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. படித்து முடித்ததும் தொடக்கத்தில் டிஜிட்டல் ஓவியம் வடிவமைக்கும் நிறுவனத்தில் சேர்ந்தார்.
சென்னை மாநகரின் பல பகுதிகள் தொடர்ந்து குப்பைகளுடன் காட்சியளிப்பதை நண்பர்கள் மூலமாகவும், சமூக வலைத்தளங்களிலும் பார்த்த போது சமூக அக்கறையுள்ள கெளசிகாவின் மனம் சஞ்சலமடைந்தது. அத்தோடு நிற்காமல் நம்மால் ஆனதைச் செய்வோம் என்று நண்பர்களுடன் களத்தில் இறங்கினார்.
குப்பையை சுத்தம் செய்வதுடன் அந்தப் பகுதியில் உள்ள சுவர்களில் ஓவியம் தீட்டி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அப்பகுதியை எப்போதும் சுத்த மாக வைத்திருக்க முடியும் என்ற எண்ணம் கெளசிகாவுக்கு உதித்தது.
அந்த எண்ணத்தை முதன்முதலாக சென்னை சூளைமேட்டில் நடைமுறைப்படுத்தினார். இதைக் கவனித்த சென்னை மாநகராட்சி நிர்வாகம், கெளசிகாவுக்கு கண்ணகி சிலை, கோடம்பாக்கம் பாலம், நேப்பியார் பாலம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் சுவர் ஓவியம் தீட்ட வாய்ப்பளித்தது. மாநகராட்சியுடன் மட்டுமல்லாமல், அரசு சாரா நிறுவனம், தன்னார்வலர்கள், கார்ப்பரேட் கம்பெனிகளின் சிஎஸ்ஆர் நிதியைக் கொண்டு சுவர் ஓவியம் தீட்டும் பணி டிடிகே சாலை, பிர்லா கோளரங்கம் சுற்றுச்சுவர் என விரிவடைந்தது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் தொடர்பு கொண்டு கத்திப்பாரா சதுக்கத் தில் ஓவியம் தீட்டும் பணியையும் அளித்தனர். அதுவே இவருக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
தனது ஓவியக் கலைப்பயணம் குறித்து நம்மிடம் கெளசிகா பகிர்ந்து கொண்டதாவது: எனது பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்க் கைக்குத் தேவையான சம்பாத்தியம் பற்றிய கவலையை மட்டுமே என்னிடம் அன்போடு வெளிப்படுத்தினார்கள்.
வணிக ரீதியான ஓவியம் மூலம் கிடைக்கும் சம்பாத்தியம், பாதுகாப்பான சூழலில் சுவர் ஓவியம் வரைவதை நான் உறுதி செய்ததால் அப்பாவும், அம்மாவும் இப்போது எனக்கு கிரியா ஊக்கியாக இருப்பது எனக்கு கிடைத்த வரம்.
தொலைக்காட்சி, சினிமா, யூடியூப், என எதைப் பார்த்தாலும் எதிர் மறையான எண்ணங்களுக்குத் தீனி போடும் காட்சிகள், வன்முறைகள் தான் இருக்கின்றன. அதனால் நகரின் முக்கியமான பகுதிகள் குறிப்பாக சிக்னல் உள்ள இடங்களை தேர்வு செய்து சுவர் ஓவியம் வரைகிறேன்.
அங்கே சில நிமிடங்கள் நின்று செல்லும் வாகன ஓட்டிகள் கண்களுக்குக் குளுமையாகவும், அதே நேரத்தில் சில நிமிட சந்தோஷத்தையும் தருவதே எனது நோக்கம். அதனால்தான் அந்தஇடங்களில் இயற்கை காட்சிகள், பூக்கள், வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சுவர் ஓவியங்களை தேர்வு செய்து தீட்டுகிறேன். அடுத்த மாதம் ஆகஸ்டில் சென்னையில் எனது சுவர் ஓவியங்களின் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளேன் என்கிறார் தூரிகை தாரகை கெளசிகா.
சிறிய வயதில் மிகப்பெரிய உயரத்தை எட்டியிருக்கும் இவர், மாணவர்களுக்கும் இளைஞர் களுக்கும் நல்லதொரு முன்மாதிரிதான்.