

ஞாயிற்றுக்கிழமை. மதியம் 1 மணி. ப்ரியா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அம்மா அவசர அவசரமாக சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்.
அவர்களின் நெல் வயலில் இன்று அறுவடை.
அப்பா, தாத்தா, அப்பத்தாவுக்கு சாப்பாடு கொண்டு போகணும்.
அம்மா சோறு செய்து முடித் திருந்தாள்.
‘‘ஏன்டி, அந்த டிவி-ய விட்டு எழுந்திரிக்க மாட்டியா? இங்க வா''
‘‘ம்ம் வர்றேன்.மா''
அம்மா - ரெண்டு தூக்கு வாளிகளில் சோறு, ரசம், புளித் துவையல் எடுத்து வைத்தாள். அம்மாவும் ப்ரியாவும் தூக்குவாளியை எடுத்துக் கொண்டு வயலுக்கு நடந்தனர்.
நல்ல வெயில். வியர்த்துக் கொட்டியது. அம்மா சேலை முந்தியை ப்ரியாவின் தலையில் போட்டாள்.
அது ப்ரியாவுக்கு பிடிக்கவில்லை. எடுத்து எடுத்துவிட்டாள்.
ப்ரியா செருப்பு போட்டிருந்தாள். அம்மா செருப்பு போடவில்லை.
"கால் பொசுக்கலையா மா?"
"இல்லடி."
"நானும் பெரியவள் ஆகிவிட்டால் பொசுக்காதா?"
"அதெல்லாம் பொசுக்கும். நீ ஏன் பெரியவளாகி வெயில்ல நடக்கிற? நல்லா படிச்சு ஆபிசர் ஆகணும் டீ.''
ஓடைக் கரையில் இறங்கி நடந்தனர். வரப்பு மேட்டில் உண்ணிச் செடிகள் இருந்தன.
‘‘அம்மா.. அம்மா.. உண்ணிப் பழம்.. உண்ணிப் பழம்.'' ப்ரியா கத்தினாள்.
கருநீலக் கலரில் பழுத்திருந்தன. மிளகு சைஸ்சில் வழுவழுப்பான பழங்கள். உண்ணிப்பழத்தின் அறி வியல் பெயர் (Lantana camara) லாண்டனா கேமரா. கைக்கு எட்டும் படியான பழங்களை இவளே பிடுங்கினாள். அம்மாவும் நிறைய பழங்களைப் பிடுங்கிக் கொடுத்தாள்.
வாங்கி சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டாள். வாயில் ஒவ்வொன்றாய் எடுத்துப் போட்டுக் கொண்டே நடந்தாள்.
அந்தப் பழத்தைச் சப்பினால் லேசாய் துவர்ப்பும், இனிப்பும் கலந்த சுவை. ரொம்ப சுவையாக இருந்தது.
"அம்மா, இந்தா உனக்கு "
நாலைந்து பழங்களை வாங்கி வாயில் போட்டுக் கொண்டாள் அம்மா.
உண்ணிப் பழம் தின்றால் நாக்கு வயலெட் கலர் ஆகிவிடும்.
பழத்திற்குள்ளே சின்னக் கொட்டை இருக்கும். அதை துப்பிவிடலாம்.
நாக்கை நீட்டி அம்மாவிடம் காட்டினாள். நாக்கு வயலெட் கலரில் இருந்தது.
‘‘நீயும் உன் நாக்கக் காட்டு பாப்போம்.''
அம்மா நாக்கை நீட்டினாள். கொஞ்சமே கொஞ்சமாய் வயலெட் கலர் ஒட்டியிருந்தது.
இன்னும் பழங்களை எடுத்து அம்மாவுக்குத் தந்தாள்.
"நெறைய சாப்பிடுமா அப்பத்தான் நெறைய வயலெட் வரும்."
அம்மா வாங்கி வாயில் போட்டுக் கொண்டாள். வயலுக்கு வந்து சேர்ந்தனர். ஒரு வேப்ப மரத்தடியில் தூக்கு வாளிகளை வைத்தனர். ப்ரியா அப்பத்தாவிடம் ஓடினாள்.
‘‘அப்பத்தா.. உன் நாக்க நீட்டேன்.'' என்றாள்.
அப்பத்தா நாக்கை நீட்டினாள்.
"உன் நாக்கில் கலரே இல்லை.
என் நாக்கைப் பார்''
நாக்கை நீட்டி வயலெட் கலரைக் காண்பித்தாள். "நீயும் உண்ணிப்பழம் எடுத்துக்க அப்பத்தா''
‘‘அடியே சோறு சாப்பிடனும்டி, அப்பறம் வாங்கிக்கிறேன்.''
‘‘போ.. நான் தாத்தாட்ட போறேன்''
தாத்தாவிடம் ஓடினாள்.
‘‘தாத்தா என் நாக்கை பாரேன்''
நாக்கை நீட்டிக் காண்பித்தாள்.
‘‘எங்க நீ காட்டு'' என்றாள்.
தாத்தாவும் நாக்கை நீட்டினார்.
அவர் நாக்கும் வயலெட் கலரில் இருந்தது.!!!
"ஐ.... சூப்பர் தாத்தா"
நீயும் உண்ணிப் பழம் சாப்பிட்டியா?
"ஆமாம்" சொல்லிச் சிரித்தார்.
வேப்ப மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அவரது துண்டை எடுத்தார். அதன் நுனியில் இருந்த முடிச்சை அவிழ்த்துக் காட்டினார். நிறைய உண்ணிப் பழங்கள்.
"ஆஆ... சூப்பர் தாத்தா.."
வாங்கிக் கொண்டு தாத்தாவைக் கட்டிக்கொண்டாள். தாத்தாவும் பேத்தியும் வயலெட் கலரில் சிரித்தனர்.
கட்டுரையாளர்: ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, விக்கிரமங்கலம், அரியலூர் மாவட்டம்.