

பள்ளிகள் ஓர் ஊரின் பொதுச்சொத்து, பள்ளிகளைப் பாதுகாப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாதது. என்னதான் தரமான கல்வித்திட்டம் இருப்பினும். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது குறைந்து கொண்டேதான் வருகிறது.
இதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பினும் ஆசிரியர் - சமூகம் சார்ந்த உறவுக்கு இடையில் உண்டான பெரும் இடைவெளி முக்கிய காரணம். ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிப்பதாலும், ஊதிய உயர்வு காரணமாகவும் இந்த இடைவெளி தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு பணிமாறுதல் பெற்று என் வீட்டுக்கு அருகே உள்ள நோணாங்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் சேர்ந்தேன். முதல் நாள் பள்ளியில் சேர சென்ற எனக்கு பேரதிர்ச்சி. பள்ளி என்ற பெயரில் அங்கு இருந்தது ஒரு பாழடைந்த கட்டிடம். பள்ளிக்கு பெயர் பலகை இல்லை.
வகுப்பறையில் பெஞ்ச் இல்லை. கட்டாந்தரையில் சிமெண்ட்பூசப்படாத ஜல்லி தட்டப்பட்ட தரையில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். பள்ளிச்சூழல் என்னை மிரளச் செய்தது. கழிவறையில் அடைப்பு ஏற்பட்டு நீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. ஒரு அரசு பள்ளி இப்படி கவனிப்பார் அற்றுக் கிடந்தது என்னை ஒரு நோயாளியைப் போல உணரச் செய்தது.
என்னுடன் அங்கு பணிமாறுதல் பெற்ற என் சக ஆசிரியர்களுடன் சேர்ந்து இந்நிலையை மாற்ற என்ன செய்யலாம் என்று யோசித்தோம். இதுகுறித்து கல்வித்துறைக்கும்.
பொதுப்பணித்துறைக்கும் கடிதம்எழுதலாம் என்று முடிவு செய்துபழைய கோப்புகளைத் தேடினோம்.கடிதம் முன்பே கொடுக்கப்பட்டி ருந்தது. துரித நடவடிக்கை எடுக்கப்பட அடுத்த கட்ட செயலில் உடனடியாக இறங்கினோம்.
நாங்கள் தேர்வு செய்த அடுத்த திட்டம் பெற்றோர் ஆசிரியர் சங்கம். அவசரக் கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்தோம். பெற்றோர் ஆர்வமாக வந்தனர். அடுத்த கூட்டத்தில் அனைவரும் ஒரு செயல்திட்டத்துடன் வருவதாக உறுதியளித்தனர்.
பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் இணைந்து சென்று துணை முதல்வர், தொகுதி சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்துப் பள்ளியின் நிலை குறித்து முறையிட்டனர். அதன் காரணமாக கல்வித்துறை அமைச்சர், இயக்குனர் ஆகியோர் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக கழிவறையைப் பொதுப்பணித்துறையினர் சரிசெய்தனர். அடுத்து கட்டிடம் பழுது பார்க்கப் பட்டது. இந்நிலையில் இந்து நாளிதழில் வெளியான எம் பள்ளி பற்றிய கட்டுரையைச் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டி புதிய கட்டிடம் கட்ட பரிந்துரைத்தார். இதனால் நிதியும் ஒதுக்கப்பட்டு அடுத்த கல்வி ஆண்டில் கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. "ரவுண்ட் டேபிள்" தன்னார்வலர் குழுமம் மூலம் பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பு வசதி செய்யப்பட்டது.
ஒவ்வொரு விழாவிற்கும் பெற் றோர்கள் வரவழைக்கப்பட்டனர்.அவர்களிடம் கலந்துரையாடி கருத்துகளை ஏற்று பள்ளியில் அனைத்து விழாக்களும் நடத்தப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டம் என்பது பெற்றோருடனான எங்கள் உறவை நெருக்கப்படுத்தியது.
இவ்வளவு மாற்றங்கள் செய்த பின்னரும் பள்ளியின் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவில்லை. எனவே அடுத்த ஆண்டு மீண்டும் பெற்றோருடன் கலந்துரையாடி வண்ண சுவரோவியங்கள் வரையலாம் என முடிவு எடுக்கப்பட்டது. பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிச் சூழலைக் குழந்தைகளைக் கவரும் வண்ணம்மாற்றம் செய்ய முடிவு எடுத்துவிட்டனர். சனி ஞாயிறு என வாரவிடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் சுவரோவியப் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து ஊர் பஞ்சாயத்தாரும் பள்ளி வளர்ச்சியில் பங்கேற்றனர்.
பல்வேறு கற்பித்தல் மேம்பாட்டு பயிற்சிகளில் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கு பெற்றோம். ஆசிரியர்கள் குழுவாக இணைந்து பல்வேறு கற்பித்தல் யுத்திகளை பயன்படுத்தினோம். மாணவர்கள் எவ்வாறு கற்கிறார்கள் என்ன அடைவை அடைந்துள்ளார்கள் என்பதை கற்றல் திருவிழாக்களின் மூலம் பெற்றோர்களுக்கு வெளிப்படுத்தியது பள்ளியின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது.
தொடக்கப்பள்ளிக்கென தனிநூலகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறோம். இதற்கிடையில் கரோனாபெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் பள்ளியிலிருந்து விலகி இருப்பது அவர்களுடைய கற்றலை பாதிக்காமல் இருப்பதற்காக இணைய வழியாகவும் நேரிலும் குழந்தைகளை தொடர்ந்து சந்திக்க தொடங்கினோம்.
முக்கிய விழாக்கள்
எங்கள் பள்ளியில் கடந்த 6 ஆண்டுகளாக எந்த விழாவையும் நாங்கள் தவற விடுவதில்லை. மாணவர் தின விழா. குழந்தைகள் தின விழா. ஆசிரியர் தின விழா ஆண்டு விழா. கற்றல் விழா நாடக விழா என மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த மேடையை அமைத்துக் கொடுத்தோம்.
பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் பார்வையாளர்கள் பெற்றோரைத் தொடர்ந்து பள்ளிச் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சியில் பங்கு கொள்ள வைக்க இந்த பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டமும், பள்ளி விழாக்களும் கைகொடுத்தன.
மாற்றம் நம்மிலிருந்தே தொடங்க வேண்டும் என இம்முயற்சிகள் மூலம் தெரிந்து கொண்டோம். எங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் இணைந்து செயல்பட்டதும். குழுவாக ஒவ்வொரு நிகழ்விலும் பெற்றோர்களை இணைத்து செயல்பட முடிந்ததையும். முக்கியமானதாக உணர்கிறேன்.
கூட்டுச்செயல்பாட்டால் எம்பள்ளி மாணவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்கிறோம். கரோனாதொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் அரசுபள்ளிகளை நோக்கி மாணவர் களின் பெருநகர்வு நிகழ்ந்துள்ளது. இதை தக்கவைக்க வேண்டியது அனைவரின் கடமை. ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், சமூகத்தோடு கூட்டாகச் சேர்ந்து பள்ளிமற்றும் மாணவர் நலன்களை திட்டமிடுதல், ஆசிரியர் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துதல் எனமிக கவனமாக கையாள வேண்டி யது அவசியம்.
கட்டுரையாளர், ஆசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி, நோணாங்குப்பம், புதுச்சேரி.