

ரஷ்யா நாட்டு சிறார் இலக்கியத்தில் நிகோலாய் நோசோவ் படைத்து அளித்திருக்கும் குழந்தை இலக்கியங்கள் மிகுதி. சோவியத் குழந்தைகளின் வாழ்க்கையை ஒரு கண்ணாடி போலக் காட்டியது நோசோவின் எழுத்துகள்.
சோவியத் நாட்டின் கல்வி முறையைப் பற்றி, பாலர் சங்கங்கள் செயல்பட்டது பற்றி எழுதிய நோசோவ், கூட்டாகச் சேர்ந்து சமூகத்திற்கு பயனுள்ள வகையில் உழைப்பதில்தான் மகிழ்ச்சி உண்டாகும் என்பதை தன் கதைகளின் வழி பேசியுள்ளார்.
கோடை விடுமுறையில் ஏதாவது பயனுள்ள செயல்பாட்டை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறான் பள்ளி மாணவன் சினிட்சின். ஒருமாத கோடை விடுமுறையில் நாட்குறிப்பு எழுதப் பழகுவது என தீர்மானிக்கிறான்.
அம்மாவிடம் கேட்டு ஒரு நோட்டுப் புத்தகமும், பேனாவும் வாங்கிக் கொள்கிறான். முதல் நாளில், எவ்வளவோ யோசித்தும் எழுத எதுவுமே இல்லை என்று நேர்மையாக எழுதி வைக்கிறான். அடுத்தடுத்த நாட்களிலும், சிறிது விளையாடி னேன்.எதையாவது நாட்குறிப்பாக எழுத யோசிக்கிறேன்.
ஆனால், எழுத எதுவுமே இல்லை என்று எழுதிவைக்கிறான். ஒருவாரம் கழித்து எதையாவது எழுதிவைத் தால்தானே நாட்குறிப்பு. அதற்காக கற்பனையாக எதையும் எழுதிவைக்கக் கூடாது. நாட்குறிப்பு என்பது உண்மையானதாக இருக்க வேண்டும் என்று எழுதுகிறான்.
சோவியத் நாட்டில் ஒவ்வொரு பள்ளி மாணவருக்கும், பாலர் சங்கத்தில் உறுப்பினராவது கட்டாயம். கோடை விடுமுறை யில், பள்ளி விடுமுறையாக இருந்தாலும், பாலர் சங்கக் கூட்டம் பள்ளியில் கூடுகிறது. அங்கு மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்படுகிறார்கள்.
ஒவ்வொரு குழுவும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட, ஒவ்வொரு குழுவுக்கும் பொறுப்பேற்றுள்ள ஆசிரியர்கள் ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் அளிக்கிறார்கள்.
சினிட்சின் உடன் பயிலும் மாணவர்கள் பல குழுக்களாகப் பிரிகிறார்கள். ஒரு குழு காய்கறித் தோட்டம் பயிரிடுகிறது. ஒரு குழு பள்ளிவளாகத்தில், செடி நட்டு மரம் வளர்க்கிறார்கள். சினிட்சனும் அவன் நண்பர்கள் பாவ்லிக், செர்யோஷா போன்றோரும், பாலர் சங்க செயல்பாட்டில் தங்களுடைய செயல்பாட்டை வடிவமைப்பது பற்றிச் சிந்திக்கிறார்கள்.
ஒருநாள் இளம் இயற்கையாளர் கூட்டத்திற்கு செல்லும் சினிட்சன் குழு, தேனீ வளர்ப்பது பற்றி அறிந்து, தங்கள் குழுவின் பொறுப்பு ஆசிரியரிடம் தேனீ வளர்ப்பு பற்றி முன்மொழி கிறார்கள். ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் தேன் கூட்டை வடிவமைக்கும் சினிட்சின் குழுவினர் தேனீக்களை பிடித்துவர, நண்பன் பாவ்லிக்கின் அத்தையின் கிராமத்திற்கு பயணம் செய்கிறார்கள்.
தேனீயைப் பிடிக்க, தேனீ பின்னாலேயே சுற்றுவதும், வேகமாகப் பறப்பதால் தேனீயை பின்தொடர இயலாத போது, தேனீ மீது தண்ணீர் தெளித்தால் இறக்கை ஈரமாகி, தேனீ மெதுவாக பறக்கும் அப்போது பின்தொடரலாம் என்று தண்ணீர் தெளிப்பதும், தண்ணீர் தெளிப்பினால் அச்சமடைந்த தேனீ, மரத்தின் பின்னால் சென்று இறக்கையை உலர்த்திக்கொண்டு வந்து மீண்டும் வேகமாய் பறக்கிறது.
உடனே கையில் இருக்கும் ரொட்டிமாவை தேனீ மேல் வீசினால் மாவின் கனத்தினால் சீக்கிரம் தண்ணீர் உலராது, அதனால் மெதுவாய் பறக்கும் தேனீயை பின்தொடர்ந்து, தேனீயை பிடித்து கூட்டில் விட்டுவிடலாம் என்று சினிட்சின், செர்யோஷா, பாவ்லிக் திட்டமிட்டு தேனீ பின்னால் சுற்றுகிறார்கள். தேனீ பிடிக்கும் நாட்குறிப்பு பக்கங்கள் நகைச்சுவை நிறைந்தவை.
ஆரம்பத்தில் எழுத எதுவுமே இல்லை என்று நாட்குறிப்பு எழுதிய சினிட்சின், தேனீ வளர்ப்பு பணியில் ஈடுபடத் தொடங்கிய பின், ஒவ்வொரு நாள் நிகழ்வையும் பக்கம் பக்கமாக நாட்குறிப்பில் தவறாமல் எழுதுகிறான்.
தேனீ வளர்ப்பு என்பது தேன் பெறவோ அல்லது வருவாய் கருதியோ செய்யும் செயலாக பாலர் சங்கக் கூட்டத்தில் கற்றுத்தரப்படவில்லை. பாலர் சங்கக் குழு ஆசிரியர் தேனீ வளர்ப்பின் நுட்பங்களைக் கற்றுத் தருகிறார். தேன் தண்ணீர் பருகும், தண்ணீர் தர ஏற்பாடு செய்யச் சொல்கிறார்.
தேனீ தன் கூட்டில் செயல்படுவதை ஆடி கொண்டு பார்க்கலாம் என்று கூறி,மாணவர்களை பார்க்கச் செய்து தேனீவளர்ப்பில் மாணவர்களை உற்சாகப்படுத்து கிறார். அதிகமான தேன் கிடைக்கும் காலத்தில் தேனீக்கள் நடனமாடுவதை சினிட்சன் ஆடி வழியே காண்கிறான்.
தேனீக்கள் செயல்பாடு பற்றி முழு அறிவைப் பெறுகிறது சினிட்சன் பாலர்சங்கக் குழு. அவர்களைப் பற்றி செய்தித்தாளில் ஒருநாள் செய்தி வருகிறது. பிறகு தேனீ வளர்ப்பில் உதவவேண்டி, மற்ற பகுதி பாலர் சங்க உறுப்பினர்களிடமிருந்து சினிட்சின் குழுவிற்கு கடிதங்கள் வருகின்றன. ஒரு செயலை முழுமையாகச் செய்து, அதனால் பிறருக்கும் வழிகாட்டுமளவு அறிவைப் பெற்றிருப்பதாக தன்னம்பிக்கை உணர்வை அடைகிறார்கள்.
கோல்யா சினிட்சின் கோடைவிடுமுறை யில் தங்களின் பாலர் சங்கச் செயல் பாடு குறித்து, தன்னுடைய நாட்குறிப்பில் எழுதப்பட்டதே இந்தப் புத்தகமாகும். ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்தப் புத்தகத்தை ரகுரு என்பவர் நமக்கு தமிழில் சிறந்த மொழிநடையில் தந்துள்ளார்.
நாட்குறிப்பு எழுதும் பழக்கம் பல விந்தைகளை ஒரு மனிதனுக்குள் உருவாக்கும். கோல்யா சினிட்சின் நம் முன்னால் இருக்கும் சிறந்த உதாரணம். ஆரம்பத்தில் இரண்டு வரி எழுதத் தயங்கும் சினிட்சின், பிறகு தேனீ வளர்ப்பு பற்றி கட்டுரைகளை எழுதும் அளவு, மொழித்திறன் பெறுகிறான்.
தன்னுடைய செயல்களையும், தன்னையும் நாட்குறிப்பின் பக்கங்களில் அவ்வப்போது பரிசோதித்துக் கொள்கிறான். சிறந்த மனிதனாக நாட்குறிப்பு சினிட்சினை மாற்றுவதை, வாசிக்கும் நம்மால் உணரமுடியும்.