

“அண்ணா! அங்கே பாருங்களேன்!” பள்ளி பேருந்தில் இருந்த மகிழினி பதற்றத்தோடு, ஓட்டுநரிடம் சொன்னாள். “என்ன, மகிழ்?” என்று கேட்டார் ஓட்டுநர். “சாலையில் பப்பிஅடிபட்டு கிடக்கு” “ஆமா! யாரோ அடிச்சுட்டு போயிருக்காங்க” “கால்நஞ்சு போயிருக்கு. எடுத்து சாலைக்குவெளியில விட்டுட்டு போவோமா?”
ஓட்டுநர் மறுத்தார். எல்லா மாணவர்களும் வலியுறுத்தியதால் வண்டியைத் திருப்பினார். பப்பி கிடந்த இடத்துக்குச் சென்றார்கள். பப்பியைக் காணவில்லை. கவலையோடு தேடியபோது, இரண்டு மாணவர்கள் மரத்தடியில் வைத்து பப்பியை தடவிக் கொடுப்பதைப் பார்த்தார்கள். “ஹேய்”கைதட்டினார்கள் குழந்தைகள். நடந் ததை அறிந்த தலைமையாசிரியர், மாணவர்களுக்கு ஒரு கதை சொன்னார்.
நல்லதொரு குடும்பம்
2001-ல் அமெரிக்காவில் கார்ட்டர்ரியஸ் பிறந்தான். ஒலிவியா என்றொரு தங்கை 2002-ல் பிறந்தாள். அண்ணனும் தங்கையும் மகிழ்ச்சியுடன் வளர்ந்தார்கள். ஒருநாள், தென் ஆப்ரிக்கா சென்றிருந்த அத்தை திரும்பி வந்தார். அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கும் காப்பகத்துக்குச் சென்றதாகவும், கார்ட்டர்மற்றும் ஒலிவியாவின் பெயரில் 2 சிறுத்தைப் புலிகளைத் தத்தெடுத்திருப்பதாகவும் சொன்னார். மகிழ்ச்சியான குழந்தைகள், “ஏன் தத்தெடுக்கனும்?” என்று கேட்டார்கள்.
“காப்பகங்கள் மட்டும் இல்லை யென்றால், சிறுத்தைப் புலிகளை உங் களால் பார்த்திருக்கவே முடியாது” என்றார் அப்பா. ஒலிவியா அழத் தொடங்கினாள். “நீ வளர்ந்த பிறகு, அழிந்து வரும் உயிரினங்களைக் காப்பாற்ற நிறுவனம் தொடங்கலாம்” என்று ஆறுதல் சொன்னார் அப்பா.
“வளர்ந்த பிறகென்றால் அதிக வருடங்கள் ஆகும். இப்போதே தொடங்கலாமே!” என்று நச்சரிக்கத் தொடங்கினார்கள் பிள்ளைகள்.
“ஆபத்தில் இருக்கும் விலங்குகள் குறித்து இன்றிலிருந்து 14 நாட்களுக்கு, தகவல் சேகரியுங்கள். நாங்கள் சொல்லாமல், நீங்களாகத் தேட வேண்டும். அப்படி செய்தால், தொடங்குவோம்” என்று சமாளித்தார் தந்தை.
குழந்தைகள் நிறைய தகவல் சேகரித்தார்கள். 10வது நாளிலேயே அம்மாவிடம் காட்டினார்கள். “அட கடவுளே இவ்வளவு உயிர்கள் அழியும்ஆபத்தில் இருக்கிறதா?” என்று அதிர்ந்தார் அம்மா. பெற்றோரின் ஆதரவுடன், கார்ட்டர் (8) மற்றும் ஒலிவியா (7) இருவரும் ‘இன்னும் ஒருதலைமுறைக்கு’ என்னும் பெயரில் 2009-ல் தொண்டு நிறுவனம் தொடங்கினார்கள்.
சிந்திக்க வைத்த கேள்வி
மறுவருடம், மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. கடல் பறவைகள், கடல் ஆமைகள் எண்ணெயில் ஊறிப்போயி ருந்ததை கார்ட்டரும் ஒலிவியாவும் தொலைக்காட்சியில் பார்த்தார்கள். அப்பாவிடம், “நாமும் உதவி செய்யலாமே?” என்றார்கள்.
இணையத் தில் தேடி, எண்ணெய் கசிவில் சிக்கிய கடல் உயிர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார்கள். என்னென்ன உதவிகள் தேவை என்று கேட்டார்கள். 4 மாதங்கள் நன்கொடை திரட்டி, ‘கடல் பாலூட்டி மற்றும் கடல் ஆமை மீட்பு மையத்தில்’ சேர்த்தார்கள்.
அங்கிருந்த பேராசிரியர், “நலம் பெற்ற பிறகு கடல் ஆமைகளை என்ன செய்யலாம்?” என்று கேட்டார். “சில நாட்களில் எண்ணெய் போய்விடும். கடலிலேயே விட்டுவிடலாம்” என்றார் அப்பா. “உண்மைதான், எண்ணெய் போய்விடும். ஆனால், பிரச்சினை எண்ணெய் அல்ல. நெகிழிகள்தான் பிரச்சினை. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க என்ன செய்ய போகிறீர்கள்?” என்று கேட்டார்.
நெகிழிகள் ஏற்படுத்தும் பிரச்சினைகுறித்து 5 மாதங்கள் குழந்தைகள் வாசித்தார்கள். வீட்டில் எந்தெந்த வகைகளில் குறைக்கலாம் என முடிவு செய்தார்கள். மற்ற குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள், பள்ளி முதல்வருடன் பேசி, பாடத்திட்டம் உருவாக்கினார்கள்.
இதனிடையே, தாங்கள் தத்தெடுத்த சிறுத்தைப் புலியைப் பார்க்க 2011-ல்தென் ஆப்ரிக்கா சென்றார்கள் குழந்தைகள். அப்போது, காண்டா மிருகமும் ஆபத்தில் இருப்பதை அறிந்தார்கள். காண்டாமிருகம் கொல்லப்படுவதைத் தடுக்க பல்வேறு நாடுகளின் குழந்தைகளிடமிருந்து 10,000 கடிதங்களைச் சேகரித்து, தென் ஆப்ரிக்காவின் சுற்றுச் சுழல் அமைச்சரிடம் கொடுத்தார்கள்.
காடுகளை அழிப்பதைத் தடுக்கவும், அழிவில் இருக்கும் எண்ணற்ற உயிரினங்களைப் பாதுகாக்கவும் பல்வேறு நாடுகளுக்குப் பயணிக்கிறார்கள். அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
“ஏதாவது ஒரு விஷயத்திலிருந்து தொடங்குங்கள். ஒரு சிறிய செயல்,உங்கள் தலைமுறையிலும், அடுத்துவரும் தலைமுறையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எவராலும்மாற்றங்களை உருவாக்க முடியும். எங்களால் முடியுமென்றால் உங்களா லும் முடியும்” என்கிறார்கள் கார்ட்டரும் ஒலிவியாவும். தலைமையாசிரியர் சொல்லி முடித்ததும், மாணவர்கள்நம்பிக்கையுடன் சென்றனர்.
கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
தொடர்புக்கு:sumajeyaseelan@gmail.com