

அந்தப் பையனோட அப்பா ஒரு பெரிய வக்கீல். நல்ல பணக்காரர். மிகுந்த செல்வாக்கு உடையவர். அவரும் அவருடைய மனைவியும் பிள்ளையை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்கள்.
தீபாவளி, கோகுலாஷ்டமி, தசரா - இப்படிப்பட்ட பண்டிகைகள் வந்துவிட்டால், அந்தப் பையனுக்குத் தலைகால் தெரியாது. ஆடிப் பாடி மகிழ் வான். ஆனாலும் அவற்றையெல்லாம் விட மிகவும் பிரியமான நாள் ஒன்று அவனுக்கு உண்டு. அதுதான் அவனுடைய பிறந்த நாள்.
பிறந்த நாளன்று அவன் சரிகை வேட்டி கட்டிக் கொள்வான். பட்டுச் சொக்காய் போட்டுக் கொள்வான். அன்று அவனுடைய வீட்டுக்கு பெரிய பெரிய மனிதர்கள் எல்லோரும் வருவார்கள். அவர்கள் வரும்போது வெறும் கையுடனா வருவார்கள். நல்லநல்ல பரிசுகள் எல்லாம் கொண்டு வருவார்கள். அவற்றை அவனிடம் கொடுத்து அவனுடைய ஆனந்தத்தை அதிகப்படுத்துவார்கள்.
அவன், “இந்த விழாவில் நான்தான் கதாநாயகன்’’ என்று எண்ணி எண்ணிப் பெருமைப் படுவான்.
அடடே, முக்கியமாக நடக்கும் ஒன்றைக் கூற மறந்துவிட்டேனே! அன்று அதிகாலையில் ஒரு பெரிய தராசில், ஒரு தட்டில் அந்தப் பையனை உட்கார வைப்பார்கள். மற்றொரு தட்டில் கோதுமை முதலிய தானியங்களை வைப்பார்கள். தானியங்களின் எடை அவனுடைய எடைக்குச் சரியாகவரும் வரை வைத்துக் கொண்டே இருப்பார்கள். பிறகு தராசில் வைத்து தானியங்களை எடுத்து ஏழை, எளியவர்களுக்குக் கொடுப்பார்கள்.
அன்று முழுவதும் ஒரே கோலாகலமாக இருக்கும். பெரிய விருந்தும்நடக்கும். இப்படியெல்லாம் குதூகல மாக இருக்கும்போது திடீரென்று அந்தப் பையனுக்கு ஒரு வருத்தம் வந்துவிடும். அது என்ன வருத்தம்? “இந்தப் பிறந்த நாள் ஆண்டுக்கு ஒருமுறை தானே வருகிறது" அடிக்கடி வரவில்லையே என்று எண்ணிவருந்துவானாம்.
அந்தப் பையன் நினைத்தது போலவே அவனுடைய பிறந்த நாள்அடிக்கடி வருவதாயிருந்தால், குழந்தைகள் தினமும் நம் நாட்டில் அடிக்கடி கொண்டாடப்படும் அல்லவா? “குழந்தைகள் தினத்திற்கும் அந்தப் பையனுக்கும் என்ன சம்பந்தம்" என்றுதானே கேட்கிறீர்கள். கேளுங்கள். நன்றாகக் கேளுங்கள்.
நவம்பர் 14-ம் தேதியை நாடெங்கும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள் அல்லவா? இதற்குகாரணம் என்ன? “என் பிறந்த நாளைகுழந்தைகள் தினமாகக் கொண்டாடுங்கள். அப்படிக் கொண்டாட வேண்டும் என்பதுதான் என் ஆசை" என்று உலகம் போற்றும் ஒருவர் கூறினாரே, அவர் யார் என்று தெரிகிறதா?
அவரைத் தெரிந்து கொண்டால், “பிறந்த நாள் அடிக்கடி வராதா! என்று கவலைப்பட்ட அந்தச் சிறுவனும் யார் என்பது தெரிந்துவிடும். என்ன, தெரிந்து கொண்டு விட்டீர்களா? உலகம் போற்றும் தலைவர், மனிதருள் மாணிக்கமாக விளங்கியவர், நம் அருமை மாமா ஜவஹர்லால் நேரு தான் அந்தச் சிறுவன்.
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின், ‘‘சின்னஞ் சிறு வயது’’ நூலில் இருந்து....