கதை நேரம்: வீடெங்கும் வெளிச்சம் பரவட்டும்

கதை நேரம்: வீடெங்கும் வெளிச்சம் பரவட்டும்
Updated on
2 min read

மீனா வீட்டுப்பாடம் செய்ய ரேகா வீட்டிற்கு தான் போவாள். மீனா வீட்டில் மின்சார வசதி இல்லை.

ரேகா வீட்டிலிருந்து திரும்பும் போது எல்லாருடைய வீட்டிலும் விளக்கு எரியும். அவள் வீடு மட்டும் இருட்டாக இருக்கும். அதுவும் அடுப்பு புகையால் இன்னும் இருட்டாக இருக்கும்.

ரேகா வீட்டில்தான் செஸ் விளையாட கற்றுக் கொண்டாள். நன்றாக விளையாடு வாள். ஆனால், அம்மாவிடம் சொந்தமாக செஸ் போர்டு கேட்க பயம்.

அந்த வருடம் மாவட்ட அளவில் நடந்த செஸ் போட்டியில் மீனா முதல் பரிசு வாங்கினாள். கலெக்டர் அவளைப் பாராட்டி மிக அழகான செஸ் போர்டு ஒன்றை பரிசாகத் தந்தார்.

அதிலிருந்த செஸ் காயின்கள் கிறிஸ்டல் காயின்கள். கண்ணாடி மாதிரி இருக்கும். இவ்வளவு அழகான ஒரு செஸ்போர்டை மீனா பார்த்ததேயில்லை.

மகிழ்ச்சியாக தன் அம்மாவிடம் காட்டி னாள். அன்று இரவு தூக்கத்தில் இருந்த மீனா ஏதோ சத்தம் கேட்டு எழுந்தாள். கண்ணைக் கசக்கிக் கொண்டே பார்த்தாள். வீடே பிரகாசமாக இருந்தது.

அவள் தலைமாட்டில் இருந்த செஸ் காயினில் இருந்துதான் அந்த வெளிச்சம் வந்தது.

‘படபட' என நெஞ்சு அவளுக்கு அடித் தது.

செஸ் டப்பாவில் இருந்த கருப்பு ராஜா திடீரென தாவிக்குதித்து அவள் முன் வந்துநின்றான். மீனா அதிர்ச்சியில் ‘அம்மா' என்றுகத்தினாள். ஆனால் சத்தம் வரவில்லை.

"ஹாய்ய் மீனா.. பயப்படாத.. உன் ஆசை என்னனு சொல்லு. நிறைவேற்ற தயாரா இருக்கேன்" என்றான் கருப்பு ராஜா.

"உன்னால பேச முடியுமா?" என்றாள் மீனா ஆச்சரியமாக.

"பேசுவேன். ஆடுவேன். எல்லாம் செய்வேன். நீ என்கிட்ட மூணு ஆசைகள் கேட்கலாம். அதுவும் சூரியன் வருவதற்கு முன்னாடி. ம்ம். சீக்கிரம் கேளு" என்றான் கருப்பு ராஜா. என்ன கேட்பது என தெரியாமல் முழித்தாள்.

"எனக்கு வானத்துல பறக்கனும்னு ரொம்ப ஆசை. உன்னால என்னப் பறக்க வைக்க முடியுமா? என்றாள்.

"இவ்வளவு தானா!" எனக் கூறி அவளை செஸ் போர்டில் உட்கார வைத்து 'சொய்ங்' என்று பறந்தான் கருப்பு ராஜா.

கருப்பு ராஜாவை பயத்தில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

அவள் வீடு, பள்ளி, தெப்பக்குளம், கடை வீதி என எல்லாம் தெரிந்தது. மேலேயிருந்து பார்க்க எல்லாம் சின்னதாக இருந்தது.

மேகத்தை எட்டி எட்டி தொட்டாள். குளிராக இருந்தது.

இரண்டு கைகளையும் நீட்டிப் பறந்தாள்.

"ஹேய்ய்ய்ய்ய்" என கத்தினாள்.

மூன்றுமுறை ஊரைச் சுற்றி வந்தாள்.

அவளால் சிரிப்பை அடக்க முடிய வில்லை. கருப்பு ராஜாவும் அவளுடன் சேர்ந்து சிரித்தான்.

"ம். அடுத்த ஆசை என்னனு சொல்லு" என்றான்.

பறந்து கொண்டிருந்தவாறே மீனா கீழே பார்த்தாள். அங்கே ஒரு பெரிய ஐஸ்கிரீம் கடை தெரிந்தது. கடைவீதிக்கு போகும்போது வெளியே நின்று ஐஸ்கிரீம் கடையை வேடிக்கை பார்த்திருக்கிறாள்.

"கருப்பு ராஜா! நான் சேமியா ஐஸ்தான் சாப்பிட்டிருக்கேன். அங்க இருக்க கடை யில பெரிய ஐஸ்கிரீம் வாங்கித் தர்றீயா?" என்றாள்.

"அவ்வளவுதானா! " என்றவாறே செஸ் போர்டை கீழே ‘சர்ர்ரென்று' இறக்கினான்.

"மீனா உனக்கு எவ்வளவு ஐஸ் வேணுமோ சாப்பிடு" என பெரிய வெள்ளை ஐஸ்பெட்டியை கடையில் இருந்து கொண்டு வந்தான்.

சாக்லேட், வெண்ணிலா, குல்பி என எல்லா வகை ஐஸ்கிரீமும் அவசர அவசரமாக சாப்பிட்டாள். முகம் முழுவதும் ஐஸ்கிரீம். முழங்கை வரை வழிந்தது.

கருப்பு ராஜா அவளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.

" ஹேய்..செம டேஸ்ட்டா இருந்துச்சு. தேங்க்ஸ் கருப்பு ராஜா" என்றாள்.

"விடியப்போகுது மீனா. மூணாவது ஆசை என்னனு சொல்லு" என வீட்டிற்கு திரும்பும் வழியில் கேட்டான்.

" ம்ம்ம்... அடுத்த ஆசை வந்து.. நீ எங்க வீட்லேயே இருக்கனும். அதுவும் இருட்டான பின்னாடி இதே மாதிரி வெளிச்சம் தரணும். வீடே வெளிச்சமா இருக்கனும். தினமும்." எனறாள்.

"ம்ம். சரி. உன் மூணாவது ஆசையும் செய்றேன் " என்றான்.

மீனா மகிழ்ச்சியில் கருப்பு ராஜாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் போனாள். வீடே வெளிச்சமானது. மறுநாளில் இருந்து மீனா வீடும் எல்லா வீடுகளையும் போல வெளிச்சமாக இருந்தது.

ச. முத்துக்குமாரி

அரசு உயர்நிலைப் பள்ளி

விடத்தாகுளம், விருதுநகர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in