Last Updated : 15 Jul, 2022 06:14 AM

 

Published : 15 Jul 2022 06:14 AM
Last Updated : 15 Jul 2022 06:14 AM

கற்றல் இடைவெளிக்கு தீர்வு காணும் எண்ணும் எழுத்தும் திட்டம்

கரோனாவால் ஏற்பட்ட கற்றல் இடைவெளிக்கு தீர்வு காணும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுவது பெற்றோர், கல்வியாளர்கள்மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கரோனா பெருந்தொற்றால் இரண்டு ஆண்டுகள் பள்ளிக்கு வராமலேயே அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவர்கள். அதனால் மாணவர்கள் குறிப்பாக தொடக்கப் பள்ளி மாணவர்கள் (1, 2, 3 வகுப்பு) எண்ணும் எழுத்தும் முழுவதுமாகப் படிக்காமலேயே தேர்ச்சிபெற்றுவிட்டனர். அதனால் ஏற்பட்ட இடை வெளியைப் போக்கவே எண்ணும் எழுத்தும் புதிய திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.

“இத்திட்டம், செயல்வழிக் கற்றல், இனிமையான கற்றல் போலத்தான் இருக்கிறது என்று சிலஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால், இத்திட் டத்தைக் கற்பித்தல் அணுகுமுறையைக் கொண்டு மட்டும் அளவிடக்கூடாது" என்கிறார் திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில் உள்ள அம்பத்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியை வே. சுடரொளி. மேற்கண்ட திட்டத்தை வடிவமைத்த குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் குறித்து அவர் மேலும் கூறியதாவது:

செயல்பாடு மூலம் கற்றல்

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பாடப் பொருள், கற்பித்தல் அணுகுமுறை என இரண்டையும் உற்றுநோக்க வேண்டும். குழந்தைகளை மையப்படுத் திய கற்பித்தல் அணுகுமுறைகளை முன்னெடுக் கும்போது செயல்பாடுகளின் மூலம் கற்றல், இனிமையான முறையில் கற்றல், விளையாட்டு மூலம் கற்றல் போன்றவற்றைத் தவிர்க்க முடியாது. தவிர்க்கக் கூடாது. அதற்காக அதுபோலவே இருக்கிறது என்று கூற முடியாது.

இதற்கு முன்புவரை முதல் வகுப்பில் எண்கள் மற்றும் அடிப்படைக் கணக்குகளையும் 247 தமிழ் எழுத்துகளையும், 26 ஆங்கில எழுத்துகளையும் சொற்களையும் படிக்க எழுத கற்றாக வேண்டும். சில காரணங்களால் அப்படி கற்க இயலாத குழந்தைகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டில் அடிப்படை எழுத்துகளையும் கணக்கு களையும் கற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்தந்த வகுப்புக்குரிய பாடப் பொருளைக் கற்றாக வேண்டும்.

இப்போது எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 1, 2, 3 வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை அரும்பு, மொட்டு, மலர் என மூன்றாகப் பிரித்துள்ளனர். முதல் வகுப்பு பாடத்திட் டம் அரும்பாகவும், 2-ம் வகுப்பு பாடத்திட்டம் அரும்பாகவும், மொட்டா கவும், 3-ம் வகுப்பு பாடத்திட்டம் அரும்பாகவும், மொட்டாகவும், மலராகவும் இருக் கிறது.

அதாவது இரண்டு, மூன்றாம் வகுப்பிலும் அடிப்படை எண்ணறிவையும் எழுத்தறிவையும் பெறாமல் விடுபட்ட குழந்தைகளுக்கும் அதைப் பெறுவதற்கான வாய்ப்பை இத்திட்டம் உறுதி செய்கிறது. அதாவது அவரவர் நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கவனகுவிப்புக்கு முக்கியத்துவம்

புதிய இத்திட்டத்தில், 1, 2, 3 வகுப்பு படிக்கும்எந்தவொரு மாணவரும் எண்ணும் எழுத்தும் படிக்காமல் இருக்க முடியாது. மாணவர்களின் பங்கேற்பை அதிகப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு ஆசிரியர் பாடலை அவரே ஒரு மெட்டமைத் துப் பாடி மாணவர்களை பாடச் சொல்வார்.

இனிமேல் பாடலுக்கான மெட்டை மாணவர்களே அமைத்துப் பாடுவதற்கு ஆசிரியர் உதவி செய்வார். மாணவர்கள் தயக்கம் இன்றி மேடை பயமின்றி நிறையப் பேசுவதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக தற்காலிகமாக சிறிய மேடை அமைத்து, டம்மி மைக்கை பிடித்து பாடுதல், பேசுதல், நடித்தல் போன்றவற்றைக் கூறலாம்.

அத்துடன் கரோனா காலத்தில் டிவி பார்ப்பது, செல்போனில் விளையாடுவது போன்ற செயல்பாடுகளால் மாணவர்களுக்குக் கவனச் சிதறல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர் களை வகுப்பறையில் அமர வைத்து கற்றலில் ஈடுபடுத்துவது மிகக் கடினமாக இருப்பதாக ஆசிரியர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டது. அதனால் கற்றலில் உடல் இயக்கச் செயல்பாடுகளை அதிகரித்து கவனகுவிப்புச் செயல்பாடுகளுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பல தனிப்பட்ட திறன்கள் மற்றும் ஆர்வத்தைப் பயன்படுத்தி செயல்பாடுகள் வடிவமைத் துக் குறைதீர் கற்பித்தலை ஆசிரியர் மேற்கொள்ள ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. அடிப்படை எண்ணறிவு எழுத்தறிவோடு பல நுண் திறன்களைப் பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது இப்புதிய திட்டம் என்கிறார் ஆசிரியை சுடரொளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x