

கல்வியின் முக்கியத்துவம் குறித்து கர்மவீரர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் கருத்து தெரிவித்தபோது, “நாம் பரம்பரைத் தொழிலையே செய்ய வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்.
நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். நாம் படிக்காதவர்களாக இருந்து ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஓட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் வேலை செய்ய வேண்டுமாம். அவர்கள் மட்டும் நகத்தில் மண்படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படி இருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?'' எனக் கேட்டார்.
தமிழ்நாட்டில் கல்வியின் நிலையை உயர்த்துவதற்கு முதலில் உள்ளாட்சி அமைப்புப் பொறுப்பாளர்களைத் திரட்டி,அவரவர் அதிகார வரம்புக்குள் அடங்கியபகுதிகளில் அமைந்திருந்த தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கையையும் அவற்றின் வசதிகளையும் தேவையான அளவுக்குப் பெருக்குவதற்குரிய நடைமுறைகளை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டு கல்வி வளர்ச்சிக்கு காமராஜர்வழிகோலினார்.
காமராஜர் முதலமைச்சரானவுடன் சாதி, சமூக, மத வேறுபாடின்றி அனைத்து ஏழைக் குழந்தைகளுக்கும் தொடக்கக்கல்வியை முதன்முறையாக இலவசமாக்கினார்.
1957-ஆம் ஆண்டு காமராஜர் ஒரு கணக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதன் வாயிலாகப் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் இல்லை என்பதையும், ஒரு பள்ளிக்கும் இன்னொரு பள்ளிக்கும் நெடுந்தூரம் இடைவெளி இருப்பதையும் அறிந்தார். ஒரு குறிப்பிட்ட இடைவெளியுடன் பள்ளிகள் அமைவது அவசியம் என்பதை உணர்ந்தார்.
அந்தக் கணக்கெடுப்பின் வாயிலாகத் தமிழ்நாட்டிலிருந்த பதினைந்தாயிரம் கிராமங்களில் கிட்டத்தட்ட ஆறாயிரம் கிராமங்களில் பள்ளிகளே கிடையாது என்பதை அறிந்து அதிர்ந்து போனார். உடனே அந்தப் பகுதிகளில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்பதில் தனது கவனம் முழுவதையும் செலுத்தினார்.
ஓர் ஆசிரியர் பள்ளிகள் திறப்பு
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் ‘படித்தவேலையற்றோருக்கு நிவாரணம்’ என்ற முறையில் மத்திய அரசு வழங்கிய நிதியைக் கொண்டு, பள்ளி இல்லாத ஊர்களில் ‘ஓர் ஆசிரியர் பள்ளி’களைத் திறந்தார். ஏற்கெனவே செயல்படும் பள்ளிகளைச் சிறந்த பள்ளிகளாக ஆக்க, மேலும் சில ஆசிரியர்களை நியமித்தார்.
இதன்மூலம் படித்த வேலை இல்லாதவர்களுக்கும் வேலை வாய்ப்பளித்ததுடன், நாட்டில் நிலவிய அறியாமை இருளைப் போக்கி, மக்களிடையே கல்வி அறிவு வளத்தைப் பெருக்க உரிய நடைமுறைகளை மேற்கொண்டார்.
அனைவருக்கும் இலவச தொடக்கக் கல்வி
1959-1960ஆம் கல்வி ஆண்டு முதல் அனைவருக்கும் இலவச தொடக்கக்கல்வி வழங்கப்பட்டது. எனினும், கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகளுக்கு மானியத் தொகை வழங்க மறுக்கப்பட்டது. ஆகவே, குறிப்பிட்ட சிலதனியார் பள்ளிகள் தவிர, மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும்கட்டணம் வசூலிப்பதை நிறுத்திவிட்டு, இலவசக் கல்வியை நடைமுறைப்படுத்தின.
மாநிலத்தில் கல்வி பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இலவசக் கல்வி வழங்க உரிய நடைமுறையைத் திட்டமிட்டுச் செயல்படுத்திய அதேவேளையில், ஆசிரியர்களின் வாழ்க்கைத்தரத்தையும் அவர்களது செயல்திறனையும் சீர்ப்படுத்தி உயர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டது.
இந்திய அரசு நியமித்த ‘உயர்நிலைப் பள்ளிக் கல்விக்குழு’ வழங்கிய பரிந்துரைகளை, சென்னை மாகாணச்சட்டப்பேரவைக் குழு பரிசீலனை செய்து வழங்கிய பொருத்தமான பரிந்துரைகளை காமராஜர் அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி, 1958-1959ஆம் கல்வி ஆண்டில் முதலாம் வகுப்பு தொடங்கி ஏழாம் வகுப்பு வரைஒரு நிலையும், எட்டாம் வகுப்பு தொடங்கி பதினொன்றாம் வகுப்பு வரைஉள்ள நிலையை ‘மேல்நிலைக் கல்வி’ எனவும் பள்ளிக் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதற்கு முன்,முதலாம் வகுப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளியாகவும், ஆறாம் வகுப்பு தொடங்கி எட்டாம் வகுப்பு வரை இடைநிலைப் பள்ளியாகவும், ஒன்பதாம் வகுப்பு தொடங்கி பதினொன்றாம் வகுப்பு வரை உயர்நிலைப் பள்ளியாகவும் பள்ளிக் கல்வி முறை மூன்று நிலைகளாகச் செயல்பட்டு வந்தன.
புதிய கல்வித் திட்டத்தின்படி, புதிய பாடத் திட்டத்தைக் கற்பிப்பதற்கு உரியதகுதி வாய்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டியது அவசியம் என்பதாலும், அதற்குத் தேவையான நிதிச்சுமையை எதிர்கொள்ள வேண்டி இருந்ததாலும், இந்தப் புதிய கல்வித் திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது.
எனவே, கல்விக்காகச் செயல்படுத்தத் திட்டமிட்டிருந்த மொத்தத் திட்டத்தையும் மறுசீரமைப்புச் செய்த காமராஜர் அரசு, பழைய பதினோராண்டு கல்வித் திட்டத்தையே சற்று மாற்றி அமைத்து, தரத்தை உயர்த்தி நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
காமராஜர் தொடங்கிய பள்ளிகள் சீரமைப்பு இயக்கத்தால் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பொருள்கள், குழந்தைகள் பயன்படுத்தும் ஆடைகள், பள்ளிக்கூடம் அமைக்கப் பயன்படும் நிலங்கள், ஆசிரியர்களுக்கு உறைவிடம், மேசை நாற்காலி என மற்ற உபகரணங்கள், பள்ளிக்கூடத்திற்குப் பயன்படும் உபக்கருவிகள், பள்ளி பாடநூல்கள், நூலகப் புத்தகங்கள், எழுதுபொருள்கள் போன்றவற்றை ஊர்ப் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வழங்கினார்கள்.
பகல் உணவு தந்த பகலவன்
குழந்தைகள் தொடர்ந்து பள்ளி செல்லவும் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தொடக்கப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை 1956-1957ஆம் கல்வி ஆண்டில் முதலமைச்சர் காமராஜர் அறிமுகப்படுத்தினார்.
ஏழைப்பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் பிழைப்புக்காகக் கூலி வேலைகளுக்கு அனுப்பி வந்தனர். இதனைத் தடுப்பதற்காகவே மதியஉணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்திற்கு அமைச்சரவையிலும் அதிகாரிகள் மத்தியிலும் எதிர்ப்பு இருந்ததையும் மீறி காமராஜர் இதனைக் கொண்டுவந்தார்.
பகல் உணவுத் திட்டத்தை முதலில்எட்டயப்புரத்தில் தொடங்கி வைத்தபோது, காமராஜர் “கடையர் எப்படி கடைத்தேற முடியும்? கல்வி பெற்றால் தேறுவார்கள். படிக்கிற கல்வியால் அறிவும் திறமையும் வளர்ந்தால் பிழைத்துக்கொள்வார்கள். மனிதர்களாக மாறுவார்கள். ஆனால் பெரும்பாலனோருக்குஎழுத்தறிவே கிடையாது.
ஊரில் பள்ளிக்கூடமே இல்லாதபோது, எப்படி எழுத்தறிவு வரும்? நம் முதல் வேலை எல்லாஊர்களுக்கும் பள்ளிக்கூடம் கொண்டுவர வேண்டும். அனைவருக்கும் இலவசக்கல்வி வழங்க வேண்டும். நிலம் ஈரமாக இருந்தால் பயிரிடலாம். காய்ந்துகிடந்தால் எதைப் பயிரிடுவது? பிள்ளைகள் வயிறு காய்ந்திருக்கையில், பாடம்சொல்லிக் கொடுக்கையில் பாடம் ஏறுமா? எனவே அனைத்து மாணவர்களுக்கும் பகல் உணவு அரசின் செலவிலேயே வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
மேலும், “இதற்கு நிதி தேவைப்பட்டால் எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு ஊர் ஊராக வந்து மதிய உணவுத்திட்டத்திற்குப் பிச்சை எடுக்கவும் சித்தமாக இருக்கிறேன்” என்று பேசி, கல்வியில் மகத்தான புரட்சியை காமராஜர் தொடங்கி வைத்தார்.
கல்விக்கு முக்கியத்துவம் தந்த நல்லரசு
காமராஜர் ஆட்சி காலத்தில் கல்விக்கு முன்னுரிமை கொடுத்ததைப் பலரும் பாராட்டினர். இந்தியாவின் அமெரிக்கத் தூதராக இருந்த பேராசிரியர் கால்ஃபிராய்த், “சென்னை மாகாண அரசு கல்வியில் முதலீடு செய்யும் நல்லரசாக உள்ளது” என்று பாராட்டியதே இதற்குச் சான்று.
கல்வி வள்ளல் காமராஜர்
கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை உயர்த்தியதன் மூலம் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் இருந்த ஏழைப் பொதுமக்களின் உள்ளங்களில் ‘தங்கள் குழந்தைகளைக் கல்வி கற்கச் செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் வளர்ப்பதற்குரிய அடிப்படைகளை காமராஜர் வித்தாகத் தூவினார்.
‘கல்வி கற்பது என்பது ஒரு பகட்டான செயல்’ என்ற எண்ணத்தைப் பாமர மக்களிடம் போக்கி, ‘முயன்றால் எதையும் எட்டிப் பிடிக்கலாம்’ என்கிற நிலையை உருவாக்கினார் கர்மவீரர் காமராஜர். அவர் அன்று இட்ட வித்துகள் முளைத்து, வேர் விட்டு வளர்ந்து தழைத்து, இன்றைய தமிழகத்தில் பெருவிருட்சங்களாகப் பெரிய பெரிய கல்விநிறுவனங்களாக, பல்வேறு பல்கலைக்கழகங்களாக, பல்துறைக் கல்வியை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்தகல்வி என்கிற சொத்தை இலவசமாக வழங்கி, புரட்சி செய்தவர் காமராஜர். அதனால்தான் அவரை எல்லோரும் ‘கல்விவள்ளல்’ என்று அழைக்கின்றனர்.
| ஆரம்பக்கல்வி முதல் ஐஐடி வரை! # 1957 இல் இருந்த 15,800 தொடக்கப் பள்ளிகள், 1962 இல் 29,000 பள்ளிகளாக உயர்ந்தன. # 19 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 36 லட்சமாக உயர்ந்தது. 1961இல் இது40 லட்சமானது. # உயர்நிலைப் பள்ளியைப் பொருத்தவரை 1951இல் 637ஆக இருந்தது, 1955இல் 814 ஆகவும், 1962இல் 995 ஆகவும் உயர்ந்தது. # பள்ளி செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை 1952-ல் 3,33,000 ஆக இருந்தது. 1962-ல் 9,00,000 ஆனது. # 1951-ல் ஆண்களுக்கு 27ஆகவும் பெண்களுக்கு 9 ஆகவும் இருந்த கலைக் கல்லூரிகள், 1956இல் 36 மற்றும் 15 ஆகவும், 1963இல் 44 மற்றும் 16ஆகவும் உயர்ந்தது. # காமராஜரின் தீவிர முயற்சியால் 1959-ல் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (I.I.T.) தொடங்கப்பட்டது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்த்தப்பட்டது. சுமார் 15,000 மாணவர்களுக்கு மேல் தொழில் தொடர்பான கல்வி பயில வழிவகை செய்யப்பட்டது. |
கட்டுரையாளர்: காங்கிரஸ் தலைவர், ‘காமராஜ் ஒரு சகாப்தம்’ உள்ளிட்ட புத்தகங்களின் ஆசிரியர்