

தந்தை பெரியாரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து சென்னை மக்கள் சார்பில், சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் காமராஜர் பேசியதாவது: "தனக்குச் சரி என்று படும் கருத்தை எதற்கும் அஞ்சாமல் - ஓயாமல் கூறிக்கொண்டே இருந்தவர் பெரியார்; வாதத் திறமையுள்ள வழக்கறிஞர்களைக்கூட அவர் வாதத் திறமை வெல்லும்படியாகவும், மக்கள் மனதைக் கவரும்படியாகவும் இருந்தது.
அந்தக் காலத்தில், தனது வாதத் திறமையால் காந்தியின் கருத்துக்களை மக்கள் உணரும்படி செய்தவர் பெரியார். துணிவோடு தன் கருத்துக்களைத் தயக்கமில்லாமல் பரப்பி வந்தார்.
பெரியாரின் வரலாறு, தமிழ்நாட்டின் வரலாறு. அவர் சமுதாயச் சீர்திருத்தங்களையும் பலவீனங்களையும் ஒழிப்பதற்கு இந்தியாவிற்கே ஒளிவிளக்காக விளங்கினார். காங்கிரசிலிருந்து பிரிந்து, பின், தன்மான இயக்கத்தை ஆரம்பித்து, சமுதாயத்தில் பெரும் புரட்சி ஏற்படுத்தினார். அப்படிப்பட்ட பெரியாரை நாம் இழந்திருக்கிறோம்" - இவ்வாறு காமராஜர் பேசினார்.
(அலை ஓசை,13.1.1974)