

கடற்கரையோரம் அமைந்த ஒரு ஊரில் பார்வையற்ற பெண் வாழ்ந்து வந்தார். கணவனை இழந்த அவருக்கு 10 வயதில் ஒரு மகள் இருந்தார். பார்வை இல்லாததால் எங்கும் வேலைக்குச் செல்ல முடியவில்லை.
இருப்பினும் மகள் எப்படியாவது படித்து முன்னேறி தன்னையும் காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், வறுமையை வெல்ல நம்பிக்கை மட்டும் போதாதே! சில நாட்கள் கடந்தன.
வறுமையின் விளிம்பில் இருந்த அந்தப் பெண் ஏதாவது வீட்டில் கிடைக்குமா என்று தேடினார். அப்போது தன் குடும்பத்தின் பூர்வீக பெட்டியில் மதிப்புள்ள பொருள் ஒன்று இருப்பதை பாட்டி சொல்லக் கேட்ட நினைவு வந்தது.
பார்வையற்ற நிலையில் அந்தப் பெட்டியை தடவியபடி தேடி கல் போன்ற ஒரு பொருளை எடுத்துவிட்டார். அருகில் இருந்த நகைக் கடைக்காரர் ஒருவரிடம் கொண்டு போய் அந்தப் பொருளைக் கொடுத்து, "அய்யா! என் குடும்ப நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இது என் பூர்வீக இருப்பு. இதை வைத்துக் கொண்டு 10 ஆயிரம் ரூபாயாவது கொடுத்தீர்கள் என்றால் அதை வைத்துக் கொண்டு சிறிது காலம் சமாளிப்பேன்” என்றார்.
அதைக்கேட்ட நகைக் கடைக்காரர் அந்தப் பொருளை வாங்கி பரிசோதித்து பார்த்துவிட்டு, "நீங்கள் கொண்டு வந்த பொருள் மதிப்புமிக்க வைரக் கல். இதை வாங்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. ஆனால், உங்களுக்கு இந்தப் பொருளை வைத்து பணம் சம்பாதித்துக் கொடுக்க என்னால் முடியும்.
நான் ஒன்று செய்கிறேன். இந்த ஊரில் உள்ள நகை வியாபாரிகள் அனைவரையும் கூட்டி, அவர்களிடம் பணம் திரட்டி இந்த வைரத்தை வாங்க முயல்கிறேன். அதுவரை என்னிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாயை தருகிறேன். இதை இப்போதைக்கு செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள். பொருளை விற்று பணத்தை கொண்டுவந்து தருகிறேன்” என்று கொடுத்தார். அதற்கு சம்மதித்து பணத்தை வாங்கிக் கொண்டு அந்தப் பெண் போய்விட்டார்.
அடுத்தநாள் அந்த நகைக் கடைக் காரர் அனைத்து நகை வியாபாரிகள் கூட்டத்தைக் கூட்டி, "அந்தப் பெண் ணிடம் வாங்கிய வைரக்கல்லை காட்டி விஷயத்தை சொன்னார். இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும். நாம் அனைவரும் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு இதை அந்தப் பெண்ணிடம் இருந்து வாங்கி, பின்னர் விற்று லாபத்தை பிரித்துக் கொள்ளலாம்" என்றார்.
இதைக் கேட்ட மற்ற வியாபாரிகள், ‘உனக்கு அறிவு இருக்கிறதா? அந்தப் பெண்ணுக்கு கண் பார்வை இல்லை. அவர் கொண்டுவந்த பொருள்என்னவென்று கூட அவருக்குத் தெரியாது. அவர் கேட்ட 10 ஆயிரம் ரூபாயை அவருக்கு கொடுத்தனுப்பி விட்டு இந்த வைரக்கல்லை நீ விற்றிருந்தால் உனக்கு எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும்’ என்று வசைபாட ஆரம்பித்தனர்.
அதற்கு அந்த அந்த நகைக் கடைக்காரர், ‘அந்தப் பெண்ணுக்கு பார்வையில்லை. அந்தப் பொருளின் மதிப்பு என்னவென்று கூட அவருக்கு தெரியாது. ஆனால், அதன் மதிப்பு எனக்குத் தெரியும். அவரை நான் ஏமாற்றியிருந்தால் என் மனசாட்சி என்னை உறுத்தும்’ என்று பதிலளித்தார். வணிகம் என்ற பெயரில் வாடிக்கையாளர் சிக்கிவிட்டால் அவர்களை ஏமாற்றி லாபம் ஈட்டும் உலகில் அந்த நகைக் கடைக்காரர் தனித்து உயர்ந்து நின்றதற்கு காரணம் அவரது நெறி தவறாமை.
இந்தக் கதை மூலம் அறிந்து கொள்ள வேண்டியது, யார் எதற்குமதிப்பளிக்கிறார்கள் என்பது தான். அந்த நகைக் கடைக்காரர் தன் மனசாட்சிக்கு மதிப்பளித்தார். மற்ற வர்கள் பணத்திற்கு மதிப்பளித்தார்கள். இந்த உலகத்தில் நாம் பார்க்கும் பல விஷயங்களில் இருந்து நாம் எதற்கு மதிப்பளிக்கிறோம் என்பது முடிவாகிறது. ஒரு சிலர் பணம், சொத்து, நகை போன்றவர்களுக்கு மதிப்பளிப்பார்கள். மற்ற சிலர் நல்லகுணம், மனசாட்சி, அன்பு, பாசம்போன்றவற்றிற்கு மதிப்பளிப்பார்கள்.
நம் மனதில் எதை மதிப்புடையதாக கருதுகிறோம், எதை மதிப்பற்றதாக கருதுகிறோம் என்பதைப் பொறுத்தே நம் குணம், ஒழுக்கம், நெறி முடிவாகிறது. நாம் நன்னெறி மிக்கவர்களாக இருக்க வேண்டுமென்றால் நாம்மதிப்புமிக்கதாக கருதும் விஷயங் களை சரியானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
- குருஜி