

சென்னை: மாணவர்கள் நலன்கருதி எண்ணும்,எழுத்தும் பயிற்சி மற்றும் பாடப்புத்தககல்விமுறை ஆகிய 2 பாடத்திட்டங்களை தொடர வேண்டும் என்று அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவலால் 2020, 2021-ம் ஆண்டுகளில் பள்ளிகள்முழுமையாக செயல்படவில்லை. இதனால் அரசு பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்கு இல்லம் தேடி கல்வி, உட்பட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன் பிழையின்றி எழுத, படிப்பதை உறுதி செய்யும்விதமாக ‘எண்ணும், எழுத்தும்’ திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.
இந்த திட்டம் நடப்பு கல்வியாண்டு (2022-23) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி நிபுணர் குழு வழிகாட்டுதலின்படி அரும்பு, மொட்டு, மலர் ஆகிய பயிற்சி நூல்கள் மற்றும் சிறப்பு கையேடு உருவாக்கப்பட்டுள்ளன.
இதை கையாள்வதற்காக அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில் குழந்தைகளுக்கு தற்போது எண்ணும், எழுத்தும் பயிற்சி பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பயிற்சிக்கு பரவலாக வரவேற்பு கிடைத்துள்ள போதும், பழைய நடைமுறையில் இருந்த பாடப்புத்தக (pedagogy) கற்பித்தல் முறை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
எண்ணும், எழுத்தும் பயிற்சி வரவேற்கக்கூடிய திட்டம். அதேநேரம்அந்த பாடத்திட்டத்தை மட்டுமேபள்ளிகளில் முழுமையாக கற்பிக்க வேண்டும் என்று கூறுவது சரியான நடைமுறையாக இருக்காது.
எண்ணும், எழுத்தும் பயிற்சி நூல்கள் முழுவதும் எளிய கற்றல் நிலையை அடிப்படையாக கொண்டவை. அதாவது, கூட்டல், கழித்தல் போன்ற அடிப்படை கணித அறிவு மற்றும் பிழையின்றி வாசிப்புக்கான புரிதலை குழந்தைகளுக்கு வழங்கும்.
இவை மெல்ல கற்கும் குழந்தைகளுக்கு உகந்ததாக இருக்கும். அதேநேரம் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு இந்த பாடத்திட்டம் ஏற்றதாக இருக்காது. அந்த குழந்தைகளின் கற்றல் நிலை உயர்வுக்கு இது தடையாகிவிடும். மேலும், இந்த பயிற்சியை 3 ஆண்டுகள் தொடர்வதற்கு போதுமான உள்ளடக்கம் இல்லை.
ஏற்கெனவே பின்பற்றப்பட்ட பாடப்புத்தக கல்வி முறை குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்ற தாகும். கரோனா இடைவெளிக்கு பின்பு 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு கடந்த நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள்திறக்கப்பட்டன. அடுத்த நாளானநவம்பர் 2-ம் தேதியே தேசிய கற்றல்அடைவுத் திறன் (நாஸ்) தேர்வு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது.
இதில் 3, 5-ம் வகுப்பு தேர்வு முடிவில் தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிமாணவர் தேர்ச்சி விகிதம் 5 முதல் 10 சதவீதம் கூடுதலாக பெறப்பட்டது.
கரோனா கால விடுமுறையில் தனியார் பள்ளி மாணவர்களுக்குஇணையவழியில் பாடங்களை நடத் தின. ஆனால், அரசு பள்ளி மாணவர் களுக்கு புத்தகங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. அந்த கற்றல் இடைவெளி நமது மாணவர்களை முழுமையாக பாதிக்காமல் இருக்க பாடப்புத்தககல்வி முறையே முக்கிய காரணம்.அத்தகைய பாடத்திட்டத்தைவீட்டுப்பாடமாக மட்டும் வழங்க அறிவுறுத்துவது ஏற்புடையதல்ல.
இதுதவிர எண்ணும், எழுத்தும் முழுவதும் விளையாட்டு வழிக்கல்விக்கு தான் முக்கியத்துவம் வழங்குகிறது. இதனால் அடுத்தடுத்த வகுப்பிலும் அதேவிதமான கற்றல் வழிமுறையை குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள்.
எனவே, மாணவர்கள் நலன்கருதி எண்ணும், எழுத்தும் பயிற்சி மற்றும் பாடப்புத்தக கல்விமுறை ஆகிய 2 பாடத்திட்டங்களை ஒருசேர தொடர வேண்டும். அதாவது எண்ணும், எழுத்தும் பயிற்சியை 1, 2-ம் வகுப்புக்கு ஓராண்டுக்கும், 3-ம் வகுப்புக்கு முதல் பருவம் வரையும் வழங்கலாம்.
அதன்பின் பாடப்புத்தக கல்வி முறையையும் பயிற்றுவிக்க பள்ளிக்கல்வித் துறை முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.