

தமிழகத்தில் மொத்தம் உள்ள 23 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில் சில பள்ளிகள் மட்டும் மாணவர் சேர்க்கையில் புகழின் உச்சியில் இருக்கிறது. அதே வேளையில் பெரும்பாலான பள்ளிகள் போட்டிகள் கடுமையாக இருப்பதால் மாணவர்களை சேர்ப்பதற்கு கடுமையாக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
669 பள்ளிக்கூடங்களில் 10 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கிறார்கள். 22 பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூடஇல்லை. பதினோரு பள்ளிகளில் தலா ஒரு மாணவரும், 24 பள்ளிகளில் தலா2 மாணவர்களும், 41 பள்ளிகளில் தலா மூன்று மாணவர்களும், 50 பள்ளிக்கூடங்களில் தலா நாலு மாணவர்கள் மட்டுமே உள்ளதாக சமீபத்தில் ஒரு புள்ளி விவரம் வெளியானது.
அரசு பள்ளிகளில் இல்லாத வசதி வாய்ப்புகள், சலுகைகள், தற்காப்பு கலைகள் தொடர்பான பயிற்சி வகுப்பு, போட்டிகளில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பது, விளையாட்டு, உள்கட்டமைப்பு, பாடம் தொடர்பான இணை செயல்பாடுகள், கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ள வசதி வாய்ப்புகள் எங்களிடம் உள்ளது என்பதை அவர்கள் அழுத்தமாக தொடர்ந்து பல மாதங்களாக விளம்பரப்படுத்தி அதை பொதுமக்கள், பெற்றோர் மனதில் பதிய வைத்து, அரசு பள்ளிகளுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கிறார்கள்.
ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை ஒரே கட்டிடத்தில், ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களை கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபடும் அரசு தொடக்கப் பள்ளிகளால் அரசு உதவி பெறும், தனியார் பள்ளியுடன் உள்கட்ட அமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகளில் போட்டியிட முடியவில்லை.
மேலும் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்கின்ற நிலையையும் பூர்த்தி செய்ய முடியவில்லை.
அரசு ஆணைப்படி அரசு தொடக்கப் பள்ளிகளில் 1:30 என்கின்ற விகிதாசார அடிப்படையில் ஆசிரியர் மாணவர் விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 60 மாணவர்கள் வரை ஈராசிரியர் பள்ளி தான். 61-90 மாணவர்கள் இருந்தால் மூன்று ஆசிரியர்கள். 91-120 மாணவர்கள் இருந்தால் நான்கு ஆசிரியர்கள். நடுநிலைப் பள்ளிகளில் ஆறு முதல் 8 வகுப்புகளில் 106-140 மாணவர்கள் இருந்தால் தலைமையாசிரியருடன் சேர்த்து நான்கு பேர்.
இந்நிலையில், தொடர்ந்து மூன்றுமுதல் ஐந்து ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கையில் அடி வாங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளிகளின் நிலையை கண்காணித்து அது தொடர்பான புள்ளி விவரங்களை அரசு திரட்ட வேண்டும். பல ஆண்டுகளாக சேர்க்கையில் சரிவைகண்டு வரும் அரசு தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுடன் இணைக்க வேண்டும். போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதி, மலைப்பகுதியில் பிற பள்ளிகளுடன் இணைக்கக்கூடிய சூழல்இல்லாத பள்ளிகளுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கலாம்.
அருகிலுள்ள பள்ளியுடன் இணைக்கப்படும் பொழுது உபரியாக இருக்கக்கூடிய ஆசிரியர்களை தொடக்கநிலை வகுப்புகளில் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்கின்ற நிலையை எளிதில் எட்டி விடலாம். மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிடாமல் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்கின்ற உறுதியை அரசு எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தது இரண்டு மூன்று இடங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுடன் ஒன்றுமுதல் ஐந்து வகுப்பு வரை நிலையில் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய மாதிரி பள்ளிகளை அரசு அமைப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். இது தனியார் பள்ளிக்கு ஆரோக்கியமான போட்டியாக அமையும்.
இணைக்கப்படும் பள்ளிகளை அப்படியே மூடி வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இல்லம்தேடி கல்வி மையம், நூலகம் ஆகியவை செயல்பட வழி காட்டலாம். தொடக்கப் பள்ளியில் ஓர் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை வரும் பொழுது பெற்றோர் மத்தியில் நம்பிக்கை ஏற்படும்.
மாணவர்களுக்கு வரப்போகிற காலை சிற்றுண்டி திட்டம் கைகொடுத்தாலும், விலையில்லாப் பொருட்களை அரசு வழங்கினாலும்கூட பள்ளியின் அமைப்பு, சுற்றுச்சூழலை, பணியில்உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஒரு சாதாரண குடிமகனும், பாமர மக்களும், ஏழைப் பெற்றோரும் உற்று நோக்கிய பின்பே பிள்ளைகளை அங்கு சேர்க்க விரும்புகிறார்கள் என்பது எதார்த்தமான உண்மை.
கட்டுரையாளர்: ஆசிரியர்,அரசு தொடக்கப்பள்ளி, செம்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம்