கதை கேளு கதை கேளு 02: ஒவ்வொரும் எல்லோருக்காக...

யூமா வாசுகி
யூமா வாசுகி
Updated on
2 min read

பூமியின் மீதும், பூமியோடு மனிதனுக்குள்ள பிணைப்பு குறித்தும் அக்கறை கொண்ட ஒரு அமைப்பு லிவிங் எர்த் கலெக்டிவ் என்பது. கேரளாவில் இயங்கி வருகிறது.

ஏ.கே.ஷிபுராஜ் என்பவர் தன் மகளின் பிறந்தநாளில், மிட்டாய் வாங்கித்தரும் கலாச்சாரத்தை விட்டு, மகளின் உடலுக்கும், மனதுக்கும் நன்மை செய்யும் ஒன்றை பரிசளிக்க விரும்புகிறார். தன் மகளுக்கு புத்தகம் ஒன்றை தானே எழுதி பரிசளிக்கிறார். அந்தப் புத்தகத்தை மகள் படிக்கும் பள்ளிமாணவர்களுக்கும் கொடுக்கிறார்.

குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும் சேர்ந்து வாசிக்கும் வாசிப்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்கிறார். அதன் பின்விளைவாகவே பெற்றோர் சேர்ந்து ‘லிவிங் எர்த் கலெக்டிவ்’ என்ற அமைப்பு உருவாகிறது.

புத்தகம் சொல்வது என்ன?

இயற்கைக்கும், மனித வர்க்கத்துக்குமான உறவு, சூழலியலின் அரசியல்,அதிவேக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்குமான மனித வர்க்கத்தின் பேராசை, அதுஏற்படுத்தும் மோசமான எதிர்விளைவுகள், புவி வெப்பமயமாதல், செழுமை வறட்சி,சக்தி நெருக்கடி, பூமி மற்றும் உயிரினங்களின் நிலைப்பும்கூட ஆபத்துக்குள்ளான நிலைமை, அசமத்துவம், சமூகஅநீதி மிகுந்துகிடக்கும் சூழலை மாற்றியமைக்க வேண்டும், பூமி எதிர்கால சமுதாயத்தினருக்கும் வாழத் தகுந்ததாக வைப்பதில் நமது பங்குகுறித்து, ஒரு அப்பாவும் மகளும் கடிதம்மூலம் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளும் முறையில் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேரு, தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களால்தானே நமக்கு ஆளுமை மிகுந்த ஒரு இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி கிடைத்தார். இந்தப் புத்தகத்திலும் ஆசாஎன்ற பெண்ணும், பொருளாதாரத் தேவைக்காக வெளிநாட்டில் பணிசெய்யும் அவள் அப்பாவும் கடிதம் வழி தங்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்கின்றனர்.

அப்பா, பொருளாதாரத்திற்காக தன்னைவிட்டு பிரிந்திருப்பதை ஆசா விரும்பவில்லை. கிராமத்திற்கு வந்துவிடுமாறு தனதுமுதல் கடிதத்தில் கூறுகிறாள். ஆனால் நமக்கான உணவுத் தேவைக்காகத்தான், அப்பா வெளிநாட்டில் வசிப்பதாக பதில்கடிதத்தில் கூறுகிறார். ஆசா பிறகுஅப்பாவை வந்துவிடுமாறு அழைக்கவேயில்லை. ஆனால் அவளின் செய்திப் பரிமாற்ற முறை மாறுகிறது.

முதல் கடிதத்தில், தன்னுடைய பள்ளிப்பை கிழிந்துவிட்டது ... புதிய பை வேண்டும் என்கிறாள் ஆசா.

ஒரு பொருளை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே கைவிட வேண்டும். புத்தகப்பையை மீண்டும் தைத்து பயன்படுத்துமாறு கூறுகிறார் அப்பா. அப்பாவின் வார்த்தைகளை ஆசா யோசிக்கிறாள்.

அந்த நேரம் பள்ளியில்ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. பள்ளியின் முன்னாள் ஆசிரியர் பாஸ்கரன் குழந்தைகளிடையே பேசுகிறார். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைச் சொல்லித் தருகிறார்.

அநாவசியம், அவசியம், அத்தியாவசியம்

ஆசிரியர் பாஸ்கரன் சொல்லித்தந்தது இதுதான். எந்த ஒரு பொருளையும் வாங்கிக்குவிக்க எண்ணக்கூடாது. அதன் தேவையை யோசிக்க வேண்டும் என்கிறார். மரம் நட்ட மனிதர் என்ற புத்தகத்தையும் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர் பாஸ்கரன். ஆசா, அப்பாவுடன் தன் எண்ணங்களை எல்லாம் பகிர்ந்து கொள்கிறாள்.

புத்தகப்பை கிழிந்துவிட்டதற்காக புதிய புத்தகப்பை கேட்ட ஆசா, "வீட்டிலுள்ள பொருட்களை இந்த மூன்று வகையில் பிரிக்க வேண்டும். இனி அத்தியாவசியப் பொருட்களையே வாங்க வேண்டும் அப்பா" என்கிறாள்.

பூமியில் உள்ள எல்லா மனிதர்களும், பழைய பொருட்களையெல்லாம் தூக்கி எறிந்தால் நம் மண் அழிந்து போகாதா? இதற்கு தீர்வென்ன என்று யோசிக்கிறாள். ஒவ்வொருவரும் எல்லோருக்காக,

எல்லோரும் ஒவ்வொருவருக்காக. பொருட்களை வாங்கிக் குவிப்பதை விடுத்து,பகிர்ந்து கொள்ளும்போதுதானே நாம் செல்வந்தர்கள் ஆவோம். முகமது பஷீரின் "பூமியின் உரிமையாளர்கள்" புத்தகம் பூமி மனிதனுக்கு மட்டும் உரிமைப்பட்டதல்ல என்று கூறுகிறது. பிறகு எப்படி இயற்கை வளங்களை தேவைக்கும் அதிகமாக மனிதன் பயன்படுத்துகிறான் என்று ஆசா கேட்கிறாள்.

கேள்வியும், பதிலுமாக கடிதம் வழி நடக்கும் உரையாடலின் இறுதியில் வேகமாக ஓடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று அப்பா, ஆசாவுடனே தங்கியிருக்க ஊருக்கு கிளம்புகிறார்.

இயற்கையிடம் மோசமாக நடந்துகொள்ளாதிருந்தால், மற்ற எல்லா விஷயங்களையும் சரிசெய்துவிடலாம். மனிதன் இழந்துவிட்ட மதிப்பீடுகளை மீட்க முடியும் என்ற நம்பிக்கையை புத்தகத்தின் இறுதிப் பகுதி நமக்கு சொல்கிறது. இயற்கை குறைபாட்டு நோய் மனஅழுத்தம், பிரச்சனைகளை அறியாமை, அலட்சிய மனோபாவம்,பொறுப்பின்மை என்று எத்தனையோ நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

பூட்டப்பட்ட கதவுகளுக்குள்ளும், எலெக்ட்ரானிக் சாதனங்களுடனுமே வாழ வேண்டியநிர்பந்தத்தில், குழந்தைகள்மனநிலை, அதிர்ச்சியடைகிறது. நாய், பூனை, மாடு, ஆடுபோன்ற விலங்கினங்கள் குழந்தைகளுக்கு தரும் பாதுகாப்புணர்வை தொலைக்காட்சியும், தொலைபேசியும் முழுமையாக தந்துவிடுமா? இயற்கையோடு பயணிக்கும் வாழ்வுதான் குழந்தைகளுக்கான தேவை என்பதை, ஆசாவின் மண்ணெழுத்துகள் நமக்குள் அழியா எழுத்தாகி சொல்லிப் போகின்றன.

மலையாள மொழி புத்தகமான ஆசாவின்மண்ணெழுத்துகள் யூமா வாசுகியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, பொக்கிஷமாக நம் கையில் கிடைத்திருக்கிறது.

கட்டுரையாளர்: குழந்தைநேய செயற் பாட்டாளர், பள்ளி ஆசிரியர், காஞ்சிபுரம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in