

ஊர் திருவிழா. வண்ண விளக்குகள், தோரணங்கள், பொம்மை கடைகள், ராட்டினம், தேர் என்று ஊரே கலகலப்பாக இருந்தது. இரவில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. இளைஞர்கள் பாடினார்கள், ஆடினார்கள்.
அடுத்ததாக, குழந்தைகள் நடனம்ஆட வந்தார்கள். லிப்ஸ்டிக் உதடுகளுடன், இடுப்பை வளைத்து, கண்களை உருட்டி ஆடினார்கள். அப்போது, வானத்தில் புஸ்வானம் பல்வேறு வண்ணங்களில் சிதறியது. ஆடிக்கொண்டிருந்த அகல்யா, ஆடுவதை நிறுத்திவிட்டு அவ்வண்ணங்களை லயித்து பார்த்தாள். உடனே, எல்லாரும் கேலியாகச் சிரிக்க ஆரம்பித்தார்கள். அல்லி உட்பட சில மாணவிகள் மட்டும் சிரிக்கவில்லை.
இதைக் கவனித்த ஒரு அண்ணன், மாணவி அல்லியிடம் சென்று, “ஏன் நீங்கள் மட்டும் சிரிக்கவில்லை?” என்று கேட்டார். “எங்கடீச்சர், போனவாரம்தான் ஜெய்லன்அர்னால்ட் பற்றி சொன்னாங்க. அதனால்தான் சிரிக்கவில்லை” என்றாள். “ஜெய்லனா, யாரது?”
2000ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தான் ஜெய்லன் அர்னால்ட். தவழ்ந்து, எழுந்து, நடந்தான். குழந்தைபேசும் நாளுக்காக பெற்றோர் காத்திருந்தார்கள். பேசத் தொடங்கினான். 2 வயதில் கைகளையும் கால்களையும் அவ்வப்போது உதறி “ஊப்.. ஊப்..” “ஜா... ஜா...” என்று பிதற்றினான்.
பெற்றோர் பதறினார்கள். மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். பரிசோதனைக்குப் பிறகு, “குழந்தைக்கு டோரெட் நோய்க்குறி உள்ளது. அதாவது, குழந்தையின் கை, கால், கழுத்து போன்ற உறுப்புகளின் இயக்கத்தில் குறைபாடு இருப்பதை மோட்டார் குறைபாடுகள் என்கிறோம். அதில் ஒன்று டிக். இந்த டிக்-கில் ஒரு வகை டோரெட் நோய்க்குறி. இது நரம்பியல் கோளாறு. குணப்படுத்த இயலாது” என்றார்.
நான்கு வயது நடந்தபோது, ஓசிடி-யால் ஜெய்லன் பாதிக்கப்பட்டான். ஒரு செயலை திரும்பத் திரும்பச்செய்வது. சரியாகச் செய்யவில்லையோ என அடிக்கடி பரிசோதிப்பது, அதைசெய்யாமல் வேறு எதையும் செய்யஇயலாமல் பதற்றப்படுவது உள்ளிட்டவை ஓசிடி-யின் அறிகுறிகள்.
நரம்பியல் கோளாறுடன் துன்புற்றஜெய்லனை, பெற்றோர் பாசமாகப் பார்த்துக்கொண்டார்கள். எண்ணிக்கையில் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சேர்த்தார்கள். ஆசிரியர்களும், மாணவர்களும் ஜெய்லனை ஏற்றுக்கொண்டு அன்பு காட்டினர்.
இரண்டாம் வகுப்புக்கு பெரிய பள்ளிக்கூடத்தில் ஜெய்லனை சேர்த்தார்கள். அவனது குறைபாட்டைப் பார்த்து மாணவர்கள் இழிவுபடுத்தினர். ஆஸ்பெர்ஜர் என்னும் நரம்பியல் குறைபாடும் ஜெய்லனுக்கு 8 வயதில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்பெர்ஜர் உள்ளவர்கள், மற்றவர்களுடன் பழக கஷ்டப்படுவார்கள். தம் கருத்தைச் சொல்லுவதில் கறாராக இருப்பார்கள். மற்றமாணவர்களைப்போல தான் இல்லையே என்று ஜெய்லன் துடிதுடித் தான். நாட்கள் ஆகஆக குறைபாடு அதிகரித்தது. உடலில் காயம் ஏற்பட்டது.
அதே பள்ளியைவிட்டு முதலில் படித்த பள்ளிக்குச் சென்றான். அங்குள்ள மாணவர்கள் ஜெய்லனை ஏற்றுக்கொண்டார்கள். தனக்குக் கிடைக்கும் இதே அன்பை எல்லா குழந்தைகளும் அனுபவிக்க வேண்டும் என முடிவெடுத்தான். 8 வயதில்‘ஜெய்லன்ஸ் சேலன்ஞ்’ என்னும் இணையதளம் உருவாக்கினான்.
அறக்கட்டளை ஆரம்பித்தான். குறைகளுடன் உள்ள குழந்தைகளையும், மற்ற குழந்தைகளையும் கேலி செய்யும், அவமானப்படுத்தும் மனநிலைக்கு எதிராகப் போராடத் தொடங்கினான். தம் குறைகளுடன், காணொலிகள், கருத்தரங்குகள், போஸ்டர்கள் வழி யாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறான்.
“நாம் எந்த அளவுக்கு மற்றவர்களைப் புரிந்து கொள்கிறோமோ, அந்தஅளவுக்கு நம்மிடையே இருக்கும்வேறுபாடுகளையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்” என்கிறார். “உலகம்முழுவதும் உள்ள இந்தப் பிரச்சினையில், உங்களின் உதவியுடன்மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கமுடியும்” என மாணவர்களை அழைக்கிறார். அதனால் தான், ‘யாரையும் கேலி செய்யக்கூடாது என வகுப்பில் முடிவெடுத்துள்ளோம்’ என்று புன்னகைத்தாள் அல்லி.
கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர். தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com