

பழையூர் கிராமத்தில் ஆதிரையும், அறிவுச் செல்வியும் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தனர். தினமும் பள்ளிக்கு இணைந்தே போவது வழக்கம். ஆதிரை அறிவுச் செல்வியை ஒரு மர நிழலில் நிற்க வைத்துவிட்டு அருகில் உள்ள தெருவில் நுழைந்து விடுவாள். பிறகு ஒன்றும் நடவாதது போல் சேர்ந்தே பள்ளிக்கு செல்வாள்.
ஆசிரியர்களுக்கெல்லாம் ஆதிரை செல்லப் பிள்ளை. விளையாட்டு, பாட்டு, நடனம் என அனைத்திலும் கெட்டி. தோட்டத்தைப் பராமரித்து காய்கறிகளையும் மதிய உணவிற்கு வழங்கும் அளவு உழைப்பாளி.
தாய் தந்தை இல்லாத குழந்தைகளையும் அரவணைத்துக் கொள்வாள். அவர்களுக்கு தேவையான உணவுப் பொருளையும் கொடுப்பாள். இப்படி துள்ளித் திரிந்தஆதிரை ஒருநாள் ஓவென்று அழுத காட்சி அறிவுச் செல்வியை பதறவைத்தது.
அவளை உலுக்கி எதற்காக அழுகிறாய் என்று கேட்டதற்கு அம்மா இறந்துவிட்டார் என்று சொன்னாள். உனக்குதான் அம்மா இல்லையே சித்தி வளர்ப்பில் தானே வளர்கிறாய் என்று சொன்னதும், இல்லையடி நான் தினமும் உன்னை பள்ளிக்கு வரும் வழியில் நிறுத்திவிட்டு தனிமையில் இருக்கும் அம்மாவைப் பார்த்து விட்டுதான் வருவேன்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வந்து அடிதடியில் கால் உடைந்து படுத்த படுக்கையாகிவிட்டார். அதனால் தான் சித்தி வளர்ப்பில் இருக்கிறேன்.
முடியாத அம்மாவாக இருந்தாலும் கூட இருக்கிறார்களே என்ற பலம் இருந்தது. இன்றைக்கு அதை இழந்து விட்டேன். உலகமே அம்மா தானே. இனி என்ன செய்வேன் என்று வருந்தியதும் அறிவுச் செல்விக்கு அழுகை அழுகையாக வந்தது. தன்னுடைய தோழிக்கு ஒரு துன்பம் வரும்போது தானும் வருந்தி அழுவதை தான் வள்ளுவர்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும் என்றார்.
கட்டுரையாளார்: பள்ளி ஆசிரியை