

சென்னை: தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பிரத்யேகமாக ரூ.107 கோடியில் குடிநீர் மற்றும் கழிப்பறை அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்ற நிலையை எட்டுவதற்கு முனைப்புக் காட்டுகிறது தமிழக அரசு.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் குடிநீர் வசதி இருக்கிறது. ஆனால், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய குடிநீர் வசதி இல்லை. கழிப்பறை வசதிகள் இருந்தாலும் அவை சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் பெற்றோர் தரப்பில் குறை சொல்லப்படுகிறது.
பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் காவலாளி இல்லாதது பெருங்குறையாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அற்புதமாக வைத்திருக்கும் சில நூறு அரசு பள்ளிகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், பெரும்பாலான பள்ளிகளின் நிலை அதுபோல இல்லை என்பதுதான் நிதர்சனம்.
"பல பள்ளிக்கூடங்களில் சுற்றுச்சுவர் இல்லை. அதனால் விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் உள்ளேநுழைந்து குடிநீர் குழாயை சேதப்படுத்தி விடுகின்றனர். கழிப்பறையை
அவர்கள் சூறையாடிவிடுகின்றனர். அதனால் திங்கள்கிழமை பள்ளிக்கு வரும்போது அலங்கோலமாக இருக்கும் கழிப்பறைகளை துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. தீபாவளி போன்ற பொது விடுமுறை நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும். குடித்துவிட்டு மதுபாட்டில்களை உடைத்துவிட்டும் போகிறார்கள்" என்று ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
"எனவே, தொகுப்பூதியத்தில் காவலாளிகளை அரசு நியமிக்கலாம். அல்லது சில ஆயிரம் செலவு செய்துஉடனடியாக கண்காணிப்பு கேமராவை பொருத்தி சமூகவிரோத செயல்களைத் தடுக்கலாம்" என்பது ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
"பல நேரங்களில் குடிநீர் கிடைப்பதில்லை. கழிப்பறைகளில் பினாயில் தெளிப்பதில்லை. கழிப்பறையில் சில நேரங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் அடிக்கிறது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு இந்த வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்" என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பு. "குடிநீர், கழிப்பறை வசதியை மேம்படுத்தும் அதேவேளையில் பள்ளிக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுவதும், காவலாளியை நியமிப்பதும் அவசர அவசியம்" என்கின்றனர் பெற்றோர்.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்று பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
தமிழகத்தில் முழுவதுமாக பழுதடைந்துள்ளதால் இடிக்கப்பட வேண்டிய 3,030 பள்ளிக் கட்டிடங்களில் இதுவரை 1,669 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுவிட்டன. பல பள்ளிகள் சீரமைக்கப்பட்டதால், மீதம் 1,283 பள்ளிக் கட்டிடங்கள் இன்னும் இடிக்கப்பட வேண்டியுள்ளது.
நபார்டு வங்கியில் கடன் பெற்று அனைத்து வசதிகளுடன் 158 பள்ளிகளில் ரூ.277 கோடியே 84 லட்சத்தில் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இவைதவிர பள்ளிகளில் பிரத்யேகமாக குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிக்காக மட்டும் ரூ.106 கோடியே 78 லட்சத்தில் 2,694 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் குடிநீர் வசதிக்காக ரூ.3.05 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, குழாய் இணைப்பு, மேல்நிலைத் தொட்டி, மோட்டார் பம்ப் ஆகியவற்றிற்கு நிதியும், கழிப்பறைக்கு ரூ.6.77 லட்சம் ஒதுக்கப்படுகிறது.
குடிநீர் வசதியும், கழிப்பறை அமைக்கும் பணிகளும் ஒவ்வொரு பள்ளியிலும் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு தேனி மாவட்டத்தில் மட்டும் 18 பள்ளிக்கூடங்களில் ரூ.32.85 கோடியில் பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளிகளை வறுமையின் அடையாளத்தில் இருந்து பெருமையின் அடையாளமாக மாற்றுவதில் அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளது.