மனநிலையை மாற்றிய கரோனா: மாணவர்களை மடைமாற்றம் செய்ய வாய்ப்புகள் அவசியம்

மனநிலையை மாற்றிய கரோனா: மாணவர்களை மடைமாற்றம் செய்ய வாய்ப்புகள் அவசியம்
Updated on
2 min read

சென்னை: கரோனாவுக்கு முன், கரோனாவுக்கு பின் மாணவர்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து, அவர்களது உணர்ச்சிகளை, ஆதங்கத்தை மடைமாற்றம் செய்வதற்கான வாய்ப்புகளை ஆசிரியர்கள் உருவாக்கித் தர வேண்டும்.

கரோனா காலத்தில் வீட்டிலிருந்தபோது மாணவர்கள் மனதில் பெரிய தாக்கம் ஏற்பட்டது. அதிலிருந்து மாணவர்கள் முற்றிலுமாக வெளிவந்துவிட்டனர் என்று சொல்ல முடியாது.

ஏனென்றால், மாணவர்கள் வகுப்பறையில் நடனம் ஆடுவது, மாணவிகள் பேருந்தில் மது அருந்திவிட்டு ஆட்டம்போடுவது என்பது போன்ற சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையை மாற்றுவதற்கான வழிமுறைகளைக் கூறுகிறார் காஞ்சிபுரம் மாவட்டம், திருக்காலிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கலாவல்லி அருள்:

மாணவர்கள் உடலுக்கு ஒரு வயது, மனதுக்கு ஒரு வயது உண்டு. உதாரணத்திற்கு 8 வயது குழந்தைக்கு 10 வயதுக்குரிய மனமுதிர்வு, பக்குவம் இருக்கும். அப்படி இருக்கும்போது கரோனா காலத்தில் மன வயது அதிகமாகி, முதிர்வுக்குப் பதிலாக தளர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு பெற்றோர், ஆசிரியர், சமூகத்தைக் காரணமாகக் கூற முடியாது. கரோனா பாதிப்பால் ஏற்பட்ட மன அழுத்தமே காரணமாகும்.

உலகம் முழுவதும் ஒரேநேரத்தில் கரோனா பாதிப்பு இருந்ததால் மாணவர்கள் மனதில் தங்களது வாழ்க்கை என்ன ஆகுமோ, எதிர்காலம் உண்டா என பல கேள்விகள் எழுந்தன. அதற்கு விடை காண முற்படும்போதுதான் மனப் பக்குவத்திற்குப் பதிலாக மன அழுத்தம் அதிகரித்துள்ளது.

கரோனாவால் வாழ்வாதாரம் பாதித்து பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் செலவிடும் நேரம் குறைந்தது. வீட்டில் வறுமை வாட்டியதால் ஒட்டுமொத்த குடும்பமும் பாதித்தது.

கலாவல்லி அருள்
கலாவல்லி அருள்

அந்த நிலையில் பெற்றோரின் தார்மீக ஆதரவு கிடைக்காமல் மாணவர்களின் மன அழுத்தமும் அதிகரித்து, அவர்களை மூர்க்கத்தனமான நிலைக்கு கொண்டு போய்விட்டது. இதற்கு அவர்கள் தங்களது மனதில் உள்ள எண்ணங்களை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்ததே காரணம்.

கரோனாவுக்குப் பின் ஆசிரியர்களின் மனநிலையும் அதுபோலத்தான் உள்ளது. கரோனா, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவதுஒருவகையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் வளரும் சூழ்நிலை, யாரும் நம்மைக் கவனிக்கவில்லை, யாரும் நமக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று மாணவர்கள் நினைக்கும் நிலை உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ளாவிட்டால் மாணவர்களின் எண்ணங்களை எப்படி மடைமாற்றம் செய்ய முடியும்.

குழந்தைகளை அவர்கள் மனநிலையில் இருந்து ஆசிரியர்கள் பார்த்து, கல்வி அல்லாத இதர செயல்பாடுகள் மூலம் அவர்களின் மன அழுத்தத்தைக் கண்டிப்பாகக் குறைக்க முடியும் என்கிறார் கலாவல்லி அருள்.

பள்ளிகள் முழுவீச்சில் செயல்படும் நிலையில் ஆசிரியர்கள் இதனை முன்னெடுப்பார்கள் என்று பெற்றோரும், சமூகமும் எதிர்பார்ப்பது நியாயம்தான்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in